For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நாடார்களை இழிவுபடுத்தும் பாடத்தை நீக்க பிரதமருக்கு கருணாநிதி- விஜய்காந்த் கடிதம்

By Chakra
Google Oneindia Tamil News

சென்னை: சிபிஎஸ்இ 9ம் வகுப்பு பாடப் புத்தகத்தில் நாடார்கள் குறித்து கூறப்பட்டுள்ள தவறான குறிப்புகளை நீக்க உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் மன்மோகன் சிங்குக்கு திமுக தலைவர் கருணாநிதி கடிதம் எழுதியுள்ளார்.

அந்தக் கடிதத்தில், தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலின் சி.பி.எஸ்.இ. 9ம் வகுப்பு சமூக அறிவியல் பாட நூலின் தற்போதைய வெளியீட்டில் நாடார் சமூகத்தினர் பற்றி தவறான- திரித்துக் கூறப்பட்ட குறிப்புகளை உங்களது உடனடி கவனத்துக்குக் கொண்டுவர விரும்புகிறேன். அந்தப் பாட நூலில் உள்ள ஆட்சேபகரமான குறிப்புகளை வன்மையாகக் கண்டிக்கிறேன். கூடிய விரைவில் இந்தத் தவறுகளைத் திருத்துமாறு உங்களது அலுவலகங்களுக்கு உத்தரவிடுமாறு வலியுறுத்துகிறேன்.

இந்தியாவின் விடுதலைப் போராட்டத்தில் மாபெரும் தியாகங்களைப் புரிந்தவர்களும், முன்னாள் தமிழக முதல்வர் காமராஜர் உட்பட அரசியல் தலைவர்களை உருவாக்கியவர்களுமான நாடார் சமுதாய மக்களின் பங்களிப்புகளை அவர்கள் தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களில் குடியேறியவர்கள் என்று கூறுவதும் வரலாற்று ரீதியில் தவறாகும். இந்தப் பாட நூலில் உள்ள குறிப்புகள் சிறுமைப்படுத்துகின்றன.

எந்த சமுதாயத்தையும் இப்படித் திரித்து, அவதூறாக சித்தரிப்பது கடுமையான ஆட்சேபத்துக்குரியது. நமது கல்வி முறையில் அதற்கு இடம் இருக்கக்கூடாது. இந்தக் குறிப்புகளைத் தாங்கள் கண்டிப்பதுடன், உடனடியாக இந்த தவறுகளை சரி செய்து பாடநூலில் இருந்து ஆட்சேபகரமான குறிப்புகளை உடனடியாக நீக்குமாறு உங்களது அலுவலகங்களுக்கு உத்தரவிடுமாறு வலியுறுத்துகிறேன் என்று கருணாநிதி கூறியுள்ளார்.

விஜயகாந்த் கோரிக்கை:

அதே போல தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய அரசின் சார்பில் உள்ள அமைப்பான தேசிய கல்வி ஆராய்ச்சி பயிற்சி கவுன்சில் வெளியிட்டுள்ள 9ம் வகுப்பு சி.பி.எஸ்.இ., சமூக அறிவியல் பாடப் புத்தகத்தில் நாடார் சமுதாயத்தினர் பற்றி வந்துள்ள குறிப்பு மிகவும் கண்டனத்திற்குரியது.

படிக்கின்ற மாணவர்களுக்கு எந்த சமுதாயத்தினர் பற்றியும் ஒரு இழிவான எண்ணம் ஏற்படும் வகையில் பாடப்புத்தக திட்டத்தை வகுப்பது சமூக ஒற்றுமையையும், அமைதியையும் சீர்குலைப்பதாகும்.

நாடார் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் இந்த நாட்டுக்காகவும், இந்த நாட்டின் விடுதலைக்காகவும், முன்னேற்றத்திற்காகவும் தங்களை அர்ப்பணித்துக் கொண்டவர்கள் ஆவார்.

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக இருந்து, இந்தியாவின் பிரதமர்களையே நியமித்த பெருந்தலைவர் காமராஜர், இந்த சமுதாயத்தை சேர்ந்தவர்தான். அதே போல, பல தலைவர்களை இந்த சமுதாயம் மொழிக்காகவும், நாட்டுக்காகவும் தந்திருக்கிறது. அப்படி இருக்கையில் அந்த சமுதாயத்தின் ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளை பற்றி குறிப்பிடுவதில் அர்த்தம் உள்ளது.

அதற்கு மாறாக, இழிவுபடுத்தி எழுதுவது வரலாற்றை திரித்துக் கூறுவது மட்டுமல்ல, பண்பாடற்ற செயலாகும். இதனை அந்த சமுதாயத்தை சேர்ந்த அத்தனை அமைப்புகளும் ஏற்கனவே எடுத்துக்காட்டி பாடப்புத்தகத்தில் இருந்து இந்த பகுதியை நீக்க வேண்டும் என்று போராட்டம் நடத்தி வருகின்றனர். அனைத்து அரசியல் இயக்கங்களும் இதனை வற்புறுத்தியுள்ளது. இந்த சூழ்நிலையில் மத்திய அரசு இதில் இன்னும் பாராமுகமாக இருப்பது வேதனைக்குரியதாகும்.

ஆகவே உடனடியாக இந்திய அரசு இந்த பாடப்புத்தகத்தில் நாடார் சமுதாயம் பற்றிய ஆட்சேபகரமான குறிப்புகளை உடனே அகற்ற வேண்டும் என்று கேட்டுக்கொள்ளுகிறேன். இதன் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கக் கோரி பிரதமருக்கும், தமிழக ஆளுநருக்கும் கடிதம் அனுப்பியுள்ளேன் என்று கூறியுள்ளார்.

கேரள கவர்னர் மாளிகை முன் போராட்டம்-தடியடி, கண்ணீர் புகை குண்டு வீச்சு:

இந் நிலையில் சிபிஎஸ்இ பாடப் புத்தகத்தில் நாடார்கள் பற்றிய அவதூறான செய்தியை நீக்கக் கோரி திருவனந்தபுரத்தில் கேரள கவர்னர் மாளிகை முன் போராட்டம் நடந்தது.

இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கேரள போலீசார் தடியடி நடத்தியும் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் கலைத்தனர்.

வைகுண்டசாமி தர்ம பிரசார சபா என்ற அமைப்பின் சார்பில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். கவர்னர் மாளிகையின் முன்பு திரண்ட அவர்கள் சாலையில் அமர்ந்து கோஷங்களை எழுப்பினர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
போலீசார் அவர்களை அங்கிருந்து கலைந்து செல்லுமாறு கூறினர். அதற்கு பலன் இல்லாததால் போலீசார் தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைத்தனர்.

English summary
Taking strong exception to "wrongful and misleading" references to the Nadar community of Tamil Nadu in a CBSE textbook, DMK chief M Karunanidhi today urged the Centre to remove the objectionable references from it. In a letter to Prime Minister Manmohan Singh, the DMK chief said, "Such misleading and derogatory depiction of any community is highly objectionable and should have no place in our education system".
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X