பூரண மதுவிலக்கை அமல்படுத்தும் வரை சிலுவைப் போர்: வைகோ அறிவிப்பு

Posted By:
Subscribe to Oneindia Tamil

திருநெல்வேலி: தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வலியுறுத்தி டிசம்பர் 12 முதல் 25 வரை வைகோ நடைபயணம் மேற்கொள்ள உள்ளார். உவரியில் தொடங்கும் இந்த நடைபயணம் மதுரையில் நிறைவடைகிறது. பூரணமதுவிலக்கை அமல்படுத்தும் வரை தன்னுடைய சிலுவைப் போர் தொடரும் என்றும் வைகோ அறிவித்துள்ளார்.

Vaiko

மதுவை ஒதுக்க வலியுறுத்தல்

இந்த நடைபயணம் குறித்து நெல்லையில் செய்தியாளர்களிடம் விளக்கிய வைகோ, கடந்த பத்து ஆண்டுகாலமாக தமிழகத்தில் மதுவினால் ஏற்படும் பாதிப்பு அதிகமாகியுள்ளது என்றார். இளைஞர்கள், பள்ளி செல்லும் மாணவர்களும் மதுவுக்கு அடிமையாவதால் வன்முறைகள் நடக்கிறது. கலாச்சார சீரழிவு நடக்கிறது. எனவே மதுவிலக்கை வலியுறுத்தி நடைபயணத்தை தொடங்குவதாக தெரிவித்தார்

பெருமாள் கோவில் கொள்ளை

வைகோ மேற்கொள்ளக் கூடிய 7-வது நடைபயணம் இது. இதற்கு முன்னர் 6 முறை நடைபயணம் மேற்கொண்டுள்ளார். 1986 ஆம் ஆண்டு, தூத்துக்குடி மாவட்டம், தென்திருப்பேரையில், மகரநெடுங்குழைக்காதர் ஆலயத்தில் நகைகளைக் கொள்ளை அடித்த குற்றவாளிகளைக் கைது செய்து, நகைகளை மீட்க தமிழக அரசை வலியுறுத்தி, தென்திருப்பேரையில் இருந்து புறப்பட்டு திருநெல்வேலி வரையிலும், மூன்று நாட்கள் 60 கிலோ மீட்டர்கள் நடந்தார்.

குமரி முதல் சென்னை வரை

1994 ஜூலை 27-ம் நாள், மூன்று கடல்கள் சங்கமிக்கும் கன்னியாகுமரியில் இருந்து புறப்பட்டு, ஓட்டு மொத்தமாக அந்தப் பயணத்தில் மட்டும், 1,600 கிலோ மீட்டர்கள் நடந்தார். ஒரு நாளைக்கு சராசரியாக 32 கிலோ மீட்டர்கள் நடந்து சென்றார் வைகோ.

காவிரி நீர் பிரச்னைக்கு....

காவிரி நதிநீரில் தமிழகத்தின் உரிமையை மறுக்கும் கர்நாடக அரசையும், மத்திய அரசையும் கண்டித்து, மக்கள் சக்தியைத் திரட்ட பூம்புகாரில் இருந்து புறப்பட்டு, கல்லணை வரையிலும், ஏழு நாட்கள், 180 கிலோ மீட்டர்கள் நடந்தார்.

ஸ்டெர்லைட் ஆலை பிரச்சினை

ஸ்டெர்லைட் நச்சு ஆலையை எதிர்த்து, ஸ்ரீ வைகுண்டத்தில் இருந்து புறப்பட்டு, நான்கு நாட்கள் நடந்து பிரசாரம் செய்து, தூத்துக்குடிக்கு வந்தார். நான்கு நாட்களில், சுமார் 120 கிலோ மீட்டர்கள் நடந்தார்.

தென்னக நதிகளை இணைக்க நடைபயணம்

2004 ஆகஸ்ட் 5-ம் தேதி தென்னக நதிகள் இணைப்பின் தேவையை மக்கள் உணரச் செய்யவும், மத்திய-மாநில அரசுகளை வலியுறுத்தவும் திருநெல்வேலியில், தாமிரபரணியில் நீராடிவிட்டு, நடைப்பயணத்தைத் தொடங்கினார் வைகோ. நெல்லை முதல் சென்னை வரை 1,200 கிலோ மீட்டர்களை 42 நாள்களில் நடந்தார். வைகோவுடன் சீருடை அணிந்த 3,000 தொண்டர் படை இளைஞர்களும் கொடி பிடித்து நடந்து வந்தனர்.

முல்லைப் பெரியாறு பிரச்சினை

முல்லைப்பெரியாறு அணையில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டவும், தென் மாவட்டங் களில் விழிப்புணர்வை ஏற்படுத்தவும், 2008 டிசம்பர் 18-ம் நாள், மதுரையில் இருந்து புறப்பட்டு 23 வரையிலும் - ஆறு நாட்கள் - உசிலம்பட்டி, ஆண்டிபட்டி, தேனி, உத்தமபாளையம், கம்பம் வழியாக கூடலூர் வரையிலும், 150 கிலோ மீட்டர்கள் நடந்தார்.

மதுவிலக்கு விழிப்புணர்வு நடைபயணம்

தமிழ்நாட்டில் மதுவிலக்கை அமல்படுத்த வலியுறுத்தியும் மதுவின் தீமைகளை விளக்கி விழிப்புணர்வு ஏற்படுத்தவும், தற்போது உவரி முதல் மதுரை வரையிலுமான நடைபயணம் மேற்கொள்ள உள்ளார் வைகோ. இந்த நடைபயணத்தில் 1200 பேர் பங்கேற்க உள்ளனர்.

ஏன் உவரியில் இருந்து பயணம்?

கடற்கரை கிராமமான உவரியில் உள்ள புனித அமலோற்பவ ஆலயத்தின் பங்கு தந்தையாக இருந்த கிறிஸ்துவ பாதிரியார் அந்தோணிசூசை நாதன் அடிகள், 1921ல் அங்கு மதுவிலக்கு சபையை

ஏற்படுத்தினார். மதுப்பழக்கம் உள்ள அந்த கிராமத்தை மதுஇல்லாத கிராமமாக மாற்றினார். அதன் நூற்றாண்டு விழா கடந்த ஆகஸ்ட்டில் நடந்தது. எனவே அந்த கிராமத்தில் இந்த பயணத்திற்காக தேர்ந்தெடுத்துள்ளார் வைகோ.

தினசரி 25 கிலோமீட்டர்

உவரி முதல் மதுரை வரை 350 கி.மீ. நடக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு நாளும் சராசரியாக 25 கி.மீ நடக்க உள்ள நிலையில் வழியெங்கும் துண்டு பிரசுரங்கள், மதுவுக்கு எதிரான பாடல்களை ஒலிபரப்பி விழிப்புணர்வு ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஒரு லட்சம் பேரை திரட்ட முடிவு

மதுவிற்கு எதிரான பிரச்சாரத்தை பேஸ்ஃபுக், டிவிட்டர் உள்ள சமூக வலைத்தளங்களிலும் தொடங்க முடிவு செய்துள்ள வைகோ, இதன் மூலம் ஒரு லட்சம் பேரை திரட்ட முடிவு பெய்துள்ளாராம்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Marumalarchi Dravida Munnetra Kazhagam (MDMK) general secretary Vaiko start his ‘padayatra’ demanding total prohibition in the State from Uvari on December 12, will reach Madurai on December 25 after distributing over five lakh pamphlets explaining the evils of alcohol and the need for total prohibition.
Please Wait while comments are loading...