For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மேட்டூர் புதிய அனல் மின் நிலையம் திறப்பு.. ஆனால், நிலக்கரி தான் இல்லை!

By Chakra
Google Oneindia Tamil News

Mettur Thermal Power Station
மேட்டூர்: மேட்டூரில் அமைக்கப்பட்டுள்ள புதிய அனல் மின் நிலையத்தில் மின் உற்பத்தி நேற்று தொடங்கியுள்ளது. ஆனால், அதற்குத் தேவையான நிலக்கரி இதுவரை வந்து சேரவில்லை.

மேட்டூரில் கடந்த 1987ம் ஆண்டு 210 மெகாவாட் உற்பத்தித் திறன் கொண்ட அனல் மின் நிலையம் தொடங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, 1990ம் ஆண்டு தலா 210 மெகாவாட் திறன் கொண்ட மேலும் 3 யூனிட்டுகள் தொடங்கப்பட்டன. தற்போது, 4 யூனிட்டுகளிலும் சேர்த்து 840 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

இந்த நிலையில் ரூ.3,500 கோடி செலவில் 600 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட இன்னொரு அனல் மின் நிலையம் கட்டப்பட்டது. 5 வருடமாக கட்டப்பட்டு வந்த இந்த மின் நிலையில் நேற்று நள்ளிரவு 12.50 மணிக்கு செயல்பாட்டுக்கு வந்துள்ளது.

முதல் நாளிலேயே சுமார் 400 மெகாவாட் வரையிலும் மின்சாரம் கிடைக்கும் என்று அதிகாரிகள் எதிர்பார்க்கிறார்களாம்.

ஆனால், இந்த புதிய மின் நிலையத்துக்கான நிலக்கரி இன்னும் கொண்டு வரப்படவில்லை. இதனால் பழைய அனல் மின் நிலையத்துக்காக இருப்பில் வைக்கப்பட்டுள்ள நிலக்கரியை எடுத்து வந்து இந்த மின் நிலையத்தில் போட்டு எரித்து வருகின்றனர்.

இந்த கிட்டங்கியில் கூட அடுத்த 6 நாட்களுக்கு மட்டுமே தேவையான நிலக்கரி இருப்பில் உள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் புதிய மின் நிலையம் செயல்படுவதற்குத் தேவையான நிலக்கரியே கையில் இல்லை.

இதனால் 400 மெகாவாட் வரை மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும் என்றாலும் நிலக்கரி தட்டுப்பாடு உள்ளதால், மின்சார உற்பத்தியை குறைவாகவே தயாரிக்க உள்ளார்களாம்.

இது எப்படி இருக்கு.. பஸ் வாங்கிட்டாங்கலாம். ஆனா, இன்னும் 4 டயர் மட்டும் தான் வாங்கனுமாம்!

மின்வெட்டுப் பிரச்னை-சட்டசபையில் சவால் விட்ட அமைச்சர்:

இந் நிலையில் தமிழகத்தில் நிலவும் மின்வெட்டுப் பிரச்சனை குறித்து நேருக்கு நேர் விவாதிக்கத் தயாரா என்று திமுகவுக்கு மின்சாரத் துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் சவால் விடுத்தார்.

சட்டசபையில் அவர் பேசுகையில்,

தமிழகத்தில் உள்ள புதிய மின் உற்பத்தித் திட்டங்கள் அனைத்தும் படிப்படியாக செயல்படத் தொடங்கியவுடன், ஜுன் மாதத்துக்குப் பிறகு தமிழகத்திலே மின்வெட்டு இல்லாத நிலை வரும். மேட்டூரில் செயல்படுத்தப்படும் 600 மெகாவாட் மின் திட்டம் இப்போது மின் உற்பத்தியைத் தொடங்கியுள்ளது. சோதனை அடிப்படையில் உற்பத்தியைத் தொடங்கும்போது, சில பிரச்னைகள் ஏற்படும்.

இப்போது ஏற்பட்டிருக்கின்ற தாற்காலிக குறைபாடுகள் நிவர்த்தி செய்யப்பட்டு மீண்டும் உற்பத்தியைத் தொடங்கும் நிலை உருவாகியிருக்கிறது.

திமுக ஆட்சியில் தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கு ரூ.49,639 கோடி கடன் சுமை இருந்தது.
மின்சார உற்பத்தியையும் பெருக்காமல், மக்களுக்கு மின்சாரமும் கொடுக்காமல் சென்று விட்டனர். ஆனால், அந்த நிலைமை மாற்றப்பட்டு இன்றைக்கு நிதி நிலைமை மீட்கப்பட்டு இருக்கிறது.

மின் வெட்டு குறித்த பிரச்சனைகளை திமுக உறுப்பினர்கள் எழுப்பினால், அவற்றுக்குப் பதில் சொல்ல எங்களுக்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. அடுத்த முறை வாய்ப்பு கிடைக்கும்போது, இந்தப் பிரச்னை குறித்து எங்களுடன் நேருக்கு நேர் விவாதம் நடத்த திமுக எம்எல்ஏக்கள் தயாராக இருக்க வேண்டும். ஆனால், அவர்கள் இந்தப் பிரச்சனைகளை எதிர்கொள்வதற்கு பயந்து, வெளியேறி விடுகிறார்கள் என்றார் அமைச்சர்.

English summary
The new 600 MW unit at the Mettur Thermal Power Station has began operations despite the coal shortage
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X