For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வதந்திகளைக் கிளப்பி, கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூடத் திட்டமா? - உதயகுமார்

By Shankar
Google Oneindia Tamil News

Udhayakumar
கூடங்குளம்: தென் மாவட்டங்களில் கூடங்குளம் அணு உலை கசிவு குறித்து கிளம்பும் வதந்திகள், பாதுகாப்பற்ற இந்த அணுஉலையை படிப்படியாக மூடுவதற்கான முன்தயாரிப்பு போலத் தோன்றுவதாக சுப உதயகுமாரன் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று விடுத்துள்ள அறிக்கை:

பிப்ரவரி15, 2013 நள்ளிரவு முதல் பிப்ரவரி 16, 2013 இந்நேரம் வரை தமிழகத்தின் தென் மாவட்டங்களிலும், கேரளத்திலும் வதந்தியும், பீதியும் பரவிக் கொண்டிருக்கின்றன.

கூடங்குளம் அணுமின் நிலையத்தை அதிகாரிகள் இரகசியமாக இயக்க முயற்சித்தபோது வெடித்துவிட்டது என்றும், ஏராளமான கதிர்வீச்சு பரவிக்கொண்டிருக்கிறது என்றும், பலர் இறந்துவிட்டதாகவும் என்னென்னவோ வதந்திகள் பரவி, ஏராளமான பேர் இடிந்தகரை மக்களையும், எங்களையும் அழைத்து விசாரித்துக் கொண்டிருக்கின்றனர்.

வேடிக்கை என்னவென்றால் ஊடக நண்பர்களும் எங்களை அழைத்து கூடங்குளம் அணுமின் நிலைய அதிகாரிகள் எங்கள் அழைப்புக்களை எடுக்கவில்லை, எனவே நீங்கள் பதில் சொல்லுங்கள் என்று எங்களைக் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த வதந்திகள் எங்கிருந்து தொடங்கின, எப்படி பரவுகின்றன என்பது தெரியவில்லை; எங்கள் போராட்டத்துக்கு எந்தவிதமான தொடர்போ, பங்களிப்போ கிடையாது. உண்மையில் இந்த வதந்திகளை நேற்று நள்ளிரவு முதல் உறுதியாக மறுத்து சமூக அமைதியைக் காத்து வருகிறோம்.

இந்தக் குழப்பத்துக்கு முழுக் காரணம் கூடங்குளம் அணுமின் நிர்வாகமும், திருநெல்வேலி மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசும், மத்திய அரசும்தான். இவர்கள் அனைவருமே எந்த உண்மையையும் மக்களுக்குச் சொல்வதில்லை. கேள்விகளுக்குப் பதில் கிடையாது. அறிக்கைகள் தருவதில்லை. இந்த மக்கள் விரோத போக்குத் தான் வதந்திகளும், பீதியும் பரவக் காரணமாகிறது.

கூடங்குளம் அணுமின் நிர்வாகமும், திருநெல்வேலி மாவட்ட நிர்வாகமும் நடத்திக் கொண்டிருக்கும் "பேரிடர் விழிப்புணர்வு முகாம்கள்" வெறும் கண்துடைப்பு நாடகங்களாகவே இருக்கின்றன. முப்பது கி.மீ. சுற்றளவில் உள்ள மக்களுக்கு பேரிடர் பயிற்சி கொடுக்க வேண்டும் எனக் கேட்டோம். ஆனால் மாநில அரசும், மத்திய அரசும், அணுசக்தித் துறையும் அதை ஏற்கவில்லை.

அதன் விளைவு இப்போது கூடங்குளம் அணுமின் நிலயத்தில் விபத்து என்று கேள்விப்பட்ட கன்னியாகுமாரி, கோவளம், சின்ன முட்டம் பகுதி மக்கள் அனைவரும் கடற்கரையில் கூடி இருந்ததாக தகவல் வருகிறது.

உண்மையிலேயே அணுமின் நிலையத்தில் ஒரு விபத்து நடந்தால் இப்படி திறந்த வெளியில் போய் உட்காருவது மிகப் பெரிய ஆபத்தை உருவாக்கும். இந்த உண்மை கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்ட மக்களுக்குச் சொல்லப்படவில்லை.

அதே போல அணுமின் நிலையம் அருகேயுள்ள ஆவுடையாள்புரம், விஜயாபதி போன்ற உட்பகுதி ஊர்களில் மக்கள் கோவில்களில் கூடியிருந்ததாகத் தெரிவிக்கின்றனர். திருநெல்வேலி மாவட்ட நிர்வாகம் "பேரிடர் விழிப்புணர்வு முகாம்" என்று பேர் பண்ணிவிட்டு, மாநில அரசின் நலத்திட்ட உதவிகளை லஞ்சமாக வழங்கி, ஆவணப் படம் ஒன்றைக் காட்டி மக்களை ஏமாற்றி வருகிறது.

2013 சனவரி மாதம் "பேரிடர் விழிப்புணர்வு முகாம்" நடத்தாமலே இரண்டு கிராமங்களில் நடத்தியதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்திருக்கிறது. கூடங்குளம் அணுமின் நிர்வாகம் மக்களை வாகனங்களில் அழைத்துச் சென்று படக்காட்சி ஒன்றைக் காண்பித்துவிட்டு, கையெழுத்து மட்டும் வாங்குகின்றனர்.

ஆக தென் மாவட்ட மக்களுக்குத் தேவையான பேரிடர் பயிற்சியை மாநில அரசோ, மத்திய அரசோ கொடுக்கவில்லை. மக்களின் இந்த போபால் கையறு நிலைக்கு மாவட்ட நிர்வாகமும், மாநில அரசும், மத்திய அரசும் பதில் சொல்லியே ஆகவேண்டும்.

டில்லியிலுள்ள ரவி பூஷண் குரோவர் எனும் அணுசக்தித் துறை அதிகாரி ஒரு சில தினங்களில் கூடங்குளம் அணுமின் நிலையம் துவங்கும் என்று அறிவித்தது முதல் மத்திய மாநில அரசுகள் இரகசியமாகத் துவக்கி விடுவார்கள் என்ற அச்சம் மக்கள் மத்தியில் இருந்து வருகிறது.

மூடுவதற்கான முன்தயாரிப்பா?

ஆனால் அங்கே பலப் பிரச்சினைகள், தொழிநுட்பக் கோளாறுகள் இருப்பதாகவும் தகவல் வந்து கொண்டிருக்கிறது. எனவே அரசுத் திட்டமிட்டே "புலி வருகிறது, புலி வருகிறது" என்று அச்சத்தை ஏற்படுத்தி கூடங்குளம் திட்டத்தை படிப்படியாக மூடுவதற்கு மக்களை முன்தயாரிப்பு செய்கிறார்களோ என்றும் சந்தேகம் வருகிறது.

இந்த நிலையிலாவது கூடங்குளம் அணுமின் நிலையத்தில் உள்ள ஓட்டைகள், பிரச்சினைகள், கசிவுகள், களவுகள், கணக்கு வழக்கு பற்றிய முழுத் தகவல்களை மக்களுக்குத் தெரிவிக்க வேண்டும் என்று மீண்டும் ஒரு முறை வலியுறுத்துகிறோம்.

ஊடக நண்பர்களோடு கூடங்குளம் அணுமின் நிர்வாகம் தொடர்ந்து உண்மையாக, பொறுப்புணர்வோடு தகவல் பரிமாற்றத்தில் ஈடுபடவேண்டும் என்று வேண்டுகிறோம். இந்தப் பதட்டமான சூழ்நிலையிலும்கூட கூடங்குளம் அதிகாரிகள் பேச மறுப்பது பிரச்சினையை மோசமாக்கிக் கொண்டிருக்கிறது.

கூடங்குளம் அணுமின் நிலயத்தில் அசம்பாவிதங்கள் ஏதாவது நிகழ்த்தி மக்களைத் தோற்கடித்தேத் தீரவேண்டும் என்ற மனப்பான்மையோடு செயல்பட்டால், அனைத்து விளைவுகளுக்கும், இழப்புக்களுக்கும் மாநில அரசும், மத்திய அரசும், இவற்றை நடத்துகிற அ.இ.அ.தி.மு.க., தி.மு.க., காங்கிரசு கட்சிகளும் முழுப் பொறுப்பு ஏற்கவேண்டும்.

-இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

English summary
SP Udhayakumar says that the Union and state govt could take the responsibility for spreading rumours about KKNP.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X