ரயில் தண்டவாளங்களை பார்களாக பயன்படுத்தும் ‘குடிமகன்கள்’… பயணிகள் புகார்
சென்னை: தாம்பரம் - கிண்டி இடையேயான ரயில் தண்டவாளத்தில் குடிமகன்களின் தொல்லை அதிகரித்து வருவதாக புகார் எழுந்துள்ளது.
மாலை மயங்கிவிட்டாலே போதும் சில இளைஞர்கள் ரயில் பாதையில் இறங்கி நடக்கத் தொடங்கிவிடுவார்கள். பின்னர் சிறிது தூரம் சென்ற உடன் ஒரு இடத்தை தேர்ந்தெடுத்து அமர்ந்து பாட்டில்களை சாவகாசமாக திறந்து குடிக்க ஆரம்பித்து விடுகின்றனர்.
இந்த காட்சி தாம்பரம் - கிண்டி இடையேயான ரயில்தண்டவாளங்களில் அன்றாட நிகழ்வாகி வருகிறது. பாட்டில்களை முழுவதுமாக குடித்து காலி செய்யும் இளைஞர்கள் கீழே போடாமல் அவற்றை ஓடும் ரயிலின் மீது தூக்கி வீசுகின்றனர். இந்த பாட்டில் உடைந்து சிதறி பயணிகளை காயப்படுத்துகின்றன.
இதேபோன்ற காட்சியை மாம்பலம் - சைதாப்பேட்டை, கிண்டி - செயின்ட் தாமஸ் மவுண்ட், பழவந்தாங்கல் - மீனம்பாக்கம் இடையேயான ரயில் தண்டவாளங்களிலும் காண முடிகிறது என்று புகார் தெரிவிக்கின்றனர் ரயில் பயணிகள்.
குடித்து விட்டு சும்மா இருக்காமல் போதை வெறியில் இவர்கள் கற்களை வீசி எறிகின்றனர். இது அந்த வழியாக செல்லும் பாதசாரிகள் மீது விழுவதோடு, திடீரென்று கடக்கும் ரயில் மீதும் பட்டுத் தெரிக்கிறது. இதனால் பயணிகள் காயமடைய நேரிடுகிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு ‘குடிமகன்' வீசிய கல், சிறுமியின் மீது பட்டு கண்களில் காயம் ஏற்பட்டது என்கிறார் பாதிக்கப்பட்ட ரயில் பயணி.
குடியிருப்பாளர்களும், ரயில் பயணிகளுக்கும் இது தொடர்பாக உள்ளூர் காவல் நிலையத்திலும், ரயில்வே போலீசாரிடம் புகார் அளித்தும் அவர்கள் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது பாதிக்கப்பட்டவர்களின் குற்றச்சாட்டாகும்.
ரயில்வே போலீசார் ரோந்து செல்வதன் மூலம் மட்டுமே ‘குடிமகன்களை' அந்தப்பகுதியில் இருந்து அப்புறப்படுத்த முடியும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
இந்தக்குற்றச்சாட்டுக்கு பதிலளித்த ரயில்வேத்துறை உயரதிகாரி,, பயணிகள் பாதுகாப்புக்காக ரயில்வே போலீசார் பணிக்கு செல்ல வேண்டியுள்ளது. ரயில்வே போலீசில் பற்றாக்குறை நிலவுவதால் அவர்களால் இது போன்ற ரோந்துப் பணிகளை கவனிக்க இயலவில்லை. எனவே உள்ளூர் போலீசார் இதை கவனத்தில் எடுத்துக் கொண்டு ரோந்து செல்வதோடு பொதுமக்களுக்கு தொந்தரவு செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கலாம் என்றார்.