For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பெண் குழந்தை பாதுகாப்பு வைப்புத் தொகை ரூ.50,000 ஆ அதிகரிப்பு: சட்டசபையில் ஜெயலலிதா அறிவிப்பு

By Siva
Google Oneindia Tamil News

சென்னை: பெண் குழந்தை பாதுகாப்பு வைப்புத் தொகையை ரூ.50,000 ஆக உயர்த்தி முதல்வர் ஜெயலலிதா சட்டசபையில் அறிவிப்பு வெளியிட்டார். மேலும் அங்கன்வாடி ஊழியர்களின் சிறப்பு ஓய்வூதியம் ரூ.1,000க உயர்த்தப்படுகிறது என்று அவர் தெரிவித்தார்.

சட்டசபையில் கேள்வி நேரம் முடிந்த பிறகு பேரவை விதி எண் 110ன் கீழ் முதல்வர் ஜெயலலிதா அறிக்கை ஒன்றை வாசித்தார். அதன் விவரம் வருமாறு,

"ஆணும், பெண்ணும் நிகரெனக்கொள்வதால் அறிவில் ஓங்கி இவ்வையகம் தழைக்குமாம்'' என்ற மகாகவி பாரதியாரின் வாக்கிற்கிணங்க, பெண்களின் முன்னேற்றத்திற்காகவும், பெண்ணுரிமையை நிலைநாட்டும் வகையிலும் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம், திருமண நிதியுதவி திட்டங்கள், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப்பணிகள் திட்டம் என பல்வேறு திட்டங்களை எனது தலைமையிலான அரசு சிறப்புடன் செயல்படுத்தி வருகிறது. பெண் சிசுக்கொலையை முற்றிலும் ஒழிக்கும் வகையிலும், பெண் குழந்தைகளின் கல்வியை மேம்படுத்தும் வகையிலும், எனது ஆட்சி காலத்தில் 1992ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தின் கீழ் பதிவான பெண் குழந்தைகள் பெயரில் ரூ.1,500 ரூபாய்க்கான வைப்புத்தொகை பத்திரங்கள் வழங்கப்பட்டன. பின்னர் 2001ம் ஆண்டு இத்திட்டம் மாற்றி அமைக்கப்பட்டது.

இதன்படி, ஒரு குடும்பத்தில் ஒரே ஒரு பெண் குழந்தை மட்டும் இருந்தால், அப்பெண் குழந்தையின் பெயரில் ரூ. 22,200 வைப்புத்தொகையும், இரண்டு பெண் குழந்தைகள் இருந்தால் ஒவ்வொரு பெண் குழந்தையின் பெயரிலும் தலா 15,200 ரூபாயும் வைப்பீடு செய்யப்பட்டது. இந்த தொகை 20 ஆண்டுகள் கழித்து வட்டியுடன் திருப்பி அளிக்கப்படும். தற்போது இந்த தொகை முறையே ரூ.50 ஆயிரம் என்றும், ரூ.25 ஆயிரம் என்றும் மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது. இந்த திட்டத்தின் கீழ் 1992ம் ஆண்டு முதல் 1995ம் ஆண்டு வரை பதிவு செய்யப்பட்ட பெண் குழந்தைகள் பெறும் முதிர்வுத்தொகை குறைவாக உள்ளதை கருத்தில் கொண்டும்; இவர்களுக்கு தற்போது திருமண உதவி திட்டத்தின் பயன் அளிக்கப்படவில்லை என்பதை கருத்தில் கொண்டும், பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தின் கீழ் பயன் பெறுபவர்களுக்கு மற்ற திருமண உதவி திட்டங்களும் வழங்கப்படும். இதன்படி, இவர்களுக்கு 4 கிராம் தங்கத்துடன் கல்வி தகுதிக்கேற்ப திருமண உதவித்தொகையும் வழங்கப்படும்.

இது மட்டுமல்லாமல், பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தின் கீழ் பதிவு செய்துள்ள பயனாளிகளின் வைப்புத்தொகைக்கான முதிர்வுத்தொகை அவர்கள் 20 வயது பூர்த்தி அடைந்தவுடன் வழங்கப்பட்டு வந்தது. இக்குழந்தைகளின் உயர் கல்விக்கு பயனளிக்கும் வகையில் இந்த முதிர்வுத்தொகை இனிமேல் 18 வயது பூர்த்தி அடைந்தவுடன் வழங்கப்படும். இதனால், நடப்பு நிதி ஆண்டில் 30 ஆயிரம் பெண்கள் பயனடைவார்கள். இதே போன்று, அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண்களுக்கான நிதியுதவி திட்டம், மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவி திட்டம், ஈ.வே.ரா. மணியம்மையார் நினைவு ஏழை விதவையர் மகள் திருமண நிதியுதவி திட்டம் ஆகியவற்றின் கீழ் நிதியுதவி பெற நிர்ணயிக்கப்பட்டுள்ள குடும்ப ஆண்டு வருமான உச்ச வரம்பு ரூ.24 ஆயிரத்தில் ரூ.72 ஆயிரமாக உயர்த்தப்படும்.

தாய் சேய் நலத்திற்கு வழிகாட்டும் திட்டமான ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப்பணிகள் திட்டத்தின் கீழ் பணியாற்றும் அங்கன்வாடி உதவியாளர்களுக்கு சனிக்கிழமை அன்றும், அங்கன்வாடி பணியாளர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை அன்றும் விடுமுறை அளிக்கப்படுகிறது. அங்கன்வாடி உதவியாளர்கள் மற்றும் அங்கன்வாடி பணியாளர்களின் பணிகள் முற்றிலும் மாறுபட்டு ஒருவரையொருவர் சார்ந்து இருப்பதாலும், ஒருவருடைய வேலையை மற்றொருவர் முழுமையாக செய்ய முடியாத சூழ்நிலை உள்ளதாலும், இவர்களுக்கு வெவ்வேறு நாட்களில் விடுமுறை அளிப்பது நடைமுறையில் சாத்தியமற்றதாக இருக்கிறது. இதை கருத்தில் கொண்டும், ஞாயிற்றுக்கிழமை அனைவருக்கும் பொது விடுமுறை என்பதாலும், அங்கன்வாடி ஊழியர்கள் அனைவரும் தங்களது குடும்பத்துடன் வார இறுதி நாளை மகிழ்வுடன் செலவிடும் வகையில், அவர்கள் அனைவருக்கும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை அளிக்கப்படும். மேலும், அங்கன்வாடிகளில் சத்துணவு பெறும் 2 முதல் 5 வயது வரையிலான குழந்தைகளுக்கு ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட வேண்டிய சத்துணவு, வீட்டிற்கு எடுத்துச்செல்லும் வகையில் சமைக்கப்படாத உணவுப்பொருளாக குழந்தைகளின் பெற்றோர்களிடம் அங்கன்வாடி ஊழியர்களால் சனிக்கிழமை அன்றே வழங்கப்படும்.

அங்கன்வாடி மையங்கள் மூலம் குழந்தைகள், வளர் இளம் பெண்கள், கர்ப்பிணி பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் ஆகியோரின் எடையை கண்காணிக்கும் வகையில், தாய்மார்கள் மற்றும் வளர் இளம் பெண்களுக்காக 16,988 எடை பார்க்கும் கருவிகளும், குழந்தைகளுக்கான 11,333 எடை பார்க்கும் கருவிகளும், பச்சிளம் குழந்தைகளுக்காக 54,439 எடை பார்க்கும் கருவிகளும் 7 கோடியே 11 லட்சத்து 89 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் வாங்கி எடை கருவிகள் இல்லாத அங்கன்வாடி மையங்களுக்கு வழங்கப்படும்.

சமூக நலத்திட்டங்களின் கீழ் பயன்பெறும் பயனாளிகளுக்கான ஓய்வூதியம் ரூ.1,000 வழங்கப்பட்டுள்ள நிலையில், அங்கன்வாடி மற்றும் சத்துணவு ஊழியர்களுக்கான சிறப்பு ஓய்வூதியம் ரூ.1,000 ஆக உயர்த்தி வழங்கப்பட வேண்டும் என்ற ஊழியர்களின் கோரிக்கையை ஏற்று, அவர்களுக்கான சிறப்பு ஓய்வூதியம் ரூ.1,000 ஆக உயர்த்தப்படும். இதன்மூலம் 56 ஆயிரத்து 830 சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் பயன்பெறுவர். எனது தலைமையிலான அரசின் மேற்காணும் நடவடிக்கைகள், மகளிர் வாழ்வில் ஒரு மறுமலர்ச்சியை ஏற்படுத்த வழி வகுக்கும் என்று அவர் தெரிவித்தார்.

English summary
CM Jayalalithaa announced in the TN assembly that the fixed deposit amount for girl child covered under the government’s Girl Child Protection Scheme would be hiked. “The deposit amounts have been increased to Rs 50,000 and Rs 25,000 respectively,” she said.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X