For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

‘எண்ணெய் நிறுவனங்களின் விலை நிர்ணய அதிகாரத்தை ரத்து செய்க’: ஜெயலலிதா

By Mayura Akilan
Google Oneindia Tamil News

Jaya Slams Centre for Hike in Petrol Price
சென்னை: பெட்ரோலின் விலையை லிட்டருக்கு 1 ரூபாய் 55 காசு என்று உயர்த்தி இருப்பது ஏழை, எளிய மக்களின் வயிற்றில் அடிக்கும் செயலாகும். மக்களின் நலனை கருத்தில் கொண்டு எண்ணெய் நிறுவனங்களுக்கு வழங்கிய பெட்ரோல் விலையை நிர்ணயம் செய்யும் அதிகாரத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும், தற்போதைய விலை உயர்வை திரும்பப்பெற வேண்டும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக, முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

நாட்டின் பொருளாதாரம் நலிந்து கொண்டு வருவதற்கு முக்கிய காரணமாக விளங்கும் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருவதற்கான காரணிகளை களைய நடவடிக்கை எடுத்து, அதன் மூலம் பெட்ரோலிய பொருட்களின் விலையை அடிக்கடி உயர்த்தாமல் பார்த்துக்கொள்ள நடவடிக்கை எடுக்காமல், நாட்டின் பொருளாதாரத்தை சீரழிக்கும் வகையில் பெட்ரோலிய பொருட்களின் விலையை உயர்த்துவதை மத்திய அரசு வாடிக்கையாகக் கொண்டுள்ளது. பெட்ரோலின் விலையை லிட்டருக்கு 1 ரூபாய் 82 காசு உயர்த்தி 15 நாட்களே ஆகியுள்ள நிலையில், மீண்டும் பெட்ரோலின் விலையை லிட்டருக்கு 1 ரூபாய் 55 காசு என்று உயர்த்தி இருப்பது ஏழை, எளிய மக்களின் வயிற்றில் அடிக்கும் செயலாகும்.

ஏழை, எளிய மக்களின் வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்து இருக்கும் இருசக்கர வாகனங்களின் எரிபொருளான பெட்ரோலின் விலையை மாதத்திற்கு இரு முறை உயர்த்திக்கொண்டே செல்வது நியாயமற்ற செயல். ஆண்டிற்கு 24 முறை பெட்ரோல் விலை உயர்த்தப்படுவதை சாமானிய மக்கள் எப்படி சமாளிப்பார்கள் என்பதை சிந்தித்து அதற்கேற்ப மத்திய அரசு செயல்பட வேண்டும்.

எண்ணெய் நிறுவனங்களைப் பொறுத்தவரை, தங்களுடைய லாப நோக்கம் ஒன்றையே குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வருகின்றன. எனவே, எண்ணெய் நிறுவனங்கள் மக்களின் வாழ்வாதாரத்தை பற்றி கவலை கொள்ளாமல், மனம் போன போக்கில் பெட்ரோலின் விலையை உயர்த்திக்கொண்டு வருகின்றன.

இந்த விலை உயர்வு, அத்தியாவசிய பொருட்களின் விலைகள் உயரவும், வாகன கட்டணங்கள் உயரவும் வழிவகுக்கும். இதன் விளைவாக, நாட்டின் பொருளாதாரம் மேலும் சீரழியும்.

நாட்டின் பொருளாதாரத்தையும், நாட்டு மக்களின் வாழ்வாதாரத்தையும் அறிந்து அதற்கேற்ப செயல்படும் அரசைத்தான் மக்கள் நல்ல அரசு என்பர். ஆனால், இதற்கு முற்றிலும் முரணாக மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு செயல்பட்டுக்கொண்டிருக்கிறது; மக்களை தொடர்ந்து துன்புறுத்திக்கொண்டிருக்கிறது, இதற்கு எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.

‘‘ஆட்சியினால் ஏற்படும் நன்மை தீமைகளை அன்றாடம் ஆராய்ந்து, அவற்றிக்கேற்ப நடந்து கொள்ளாத அரசு அமைந்த நாடு சீர்குலைந்து போய்விடும்'' என்ற வள்ளுவப் பெருந்தகையின் வரிகளை சுட்டிக் காட்டி, எண்ணெய் நிறுவனங்களுக்கு வழங்கிய பெட்ரோல் விலையை நிர்ணயம் செய்யும் அதிகாரத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும், தற்போதைய விலை உயர்வை திரும்பப்பெற வேண்டும் என்றும், இனி வருங்காலங்களில் பெட்ரோல் விலை உயராதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும் என்றும் மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு ஜெயலலிதா தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.

English summary
Slamming the Centre for its "wrong (fuel) pricing policy", Tamil Nadu Chief Minister Jayalalithaa today demanded that today's hike of 1.55 paise per litre of petrol be rolled back.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X