For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கச்சத்தீவை மீட்க முடியாது என்பதா?- மத்திய அரசுக்கு டாக்டர் ராமதாஸ் கண்டனம்

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: கச்சத் தீவை மீட்க முடியாது என்றும் அது இலங்கைக்குச் சொந்தமானது என்றும் உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளதற்கு பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் டாக்டர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், கச்சத்தீவை மீட்கக் கோரும் வழக்கில் உச்சநீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ள மத்திய அரசு, கச்சத் தீவு இலங்கைக்கு சொந்தமானது என்றும், அதை மீட்க முடியாது என்றும் கூறியிருக்கிறது. மத்திய அரசின் இந்த நிலைப்பாடு தமிழகத்தில் அதிர்ச்சியையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Ramadoss

தமிழகத்துக்கு சொந்தமானது

கச்சத்தீவு இலங்கைக்கு சொந்தம் என்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகும். 1966-ஆம் ஆண்டில் இலங்கை அமைச்சரவைச் செயலாளர் பி.பி. பெரிஸ் வெளியிட்ட அறிக்கையில், கச்சத்தீவில் இலங்கைக்கு எந்த உரிமையும் இல்லை. அது இராமநாதபுரம் மன்னருக்கு சொந்தமானது என்று விக்டோரியா அரசி காலத்திலேயே ஆங்கிலேய அரசு அதிகாரப்பூர்வ அறிவிக்கையை வெளியிட்டிருக்கிறது என்று கூறியுள்ளார். இவ்வாறு இராமநாதபுரம் சமஸ்தானத்தின் ஓர் அங்கமாக இருந்த கச்சத்தீவை 1974-ஆம் ஆண்டில் இலங்கைக்கு மத்திய அரசு தாரை வார்த்ததையும், அதன்பின் அங்கு மீன் பிடிக்கும் உரிமை பறிக்கப்பட்டதையும் தமிழக மக்கள் ஒருபோதும் ஏற்றுக் கொள்ளவில்லை.

கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்டதைக் கண்டித்து கடந்த 40 ஆண்டுகளாகவே குரல் கொடுத்து வருகிறார்கள். உண்மை இவ்வாறு இருக்க கச்சத்தீவு இலங்கைக்கு சொந்தமான பகுதி என்று கூறுவது முழுப் பொய் ஆகும்.

600 மீனவர் படுகொலை

கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்டதற்கு பின்னர் 600-க்கும் அதிகமான மீனவர்களை சிங்களப்படை சுட்டுக் கொன்றிருக்கிறது; ஆயிரக்கணக்கான மீனவர்கள் தாக்கப்பட்டிருக்கின்றனர்; லட்சக்கணக்கான மீனவர்கள் சிறை பிடிக்கப்பட்டுள்ளனர்; கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள மீனவர்களின் உடமைகளை சிங்களப் படை அழித்துள்ளது. இதற்கெல்லாம் அடிப்படைக் காரணம் கச்சத்தீவை தாரை வார்த்தது என்பது தான் என்பதால், அதை மீட்க வேண்டும் என்ற குரல் தமிழகத்தில் ஒலித்துக் கொண்டிருக்கிறது. ஆனால், அண்மையில் பிரதமரை சந்திக்க தில்லி வந்த இலங்கை அமைச்சர் ஜி.எல்.பெரிஸ் கச்சத்தீவு இலங்கைக்கு சொந்தமானது என்றும், அதை திரும்பத் தருவது என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும் மார்தட்டினார். இந்நிலையில் தான் மத்திய அரசு தமிழக மக்களின் உணர்வுகளை சிறிதும் மதிக்காமல், சிங்கள அமைச்சரின் குரலாக மாறி கச்சத்தீவை மீட்க முடியாது என்று கூறியிருக்கிறது.

அதுமட்டுமின்றி, கச்சத்தீவு குறித்து தமிழகத்தை சேர்ந்த உறுப்பினர்கள் மக்களவையில் பிரச்சினை எழுப்ப முயன்ற போது, அது நட்பு நாடான இலங்கையின் உறவை பாதிக்கும் என்று கூறி அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது. இலங்கை தொடர்பான எந்த சிக்கலாக இருந்தாலும் அதில் தமிழகத்தின் நலனை கைவிட்டு விட்டு சிங்களர்களை ஆதரிப்பதே மத்திய அரசின் வழக்கமாக உள்ளது. இது தமிழகத்திற்கு இழைக்கப்படும் மிகப்பெரிய துரோகம் ஆகும். இதை தமிழக மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள்.

இந்திய அரசியல் சட்டத்தின்படி நாட்டின் எந்த ஒரு பகுதியையும் அண்டை நாடுகளுக்கு தாரை வார்க்கும் அதிகாரம் மத்திய அரசுக்கு கிடையாது; நாடாளுமன்றத்திற்கு மட்டுமே அந்த அதிகாரம் உண்டு. கச்சத்தீவு தொடர்பான ஒப்பந்தத்திற்கு நாடாளுமன்றத்தின் ஒப்புதல் பெறப்படவில்லை. இந்த ஒரு காரணத்தை வைத்தே 1974-ஆம் ஆண்டு ஒப்பந்தத்தை ரத்து செய்து கச்சத்தீவை மீட்க முடியும். ஆனால், அதை செய்ய மத்திய அரசு தயாராக இல்லை. ஆனால், 1987-ஆம் ஆண்டு இந்தியப் பிரதமர் இராஜீவ் காந்தியுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தை சிறிதும் மதிக்காமல் கொழும்பு உச்சநீதிமன்றத்தின் துணையுடன், வடக்கு- கிழக்கு மாநிலங்கள் இணைப்பு செல்லாது என்று இலங்கை அரசு அறிவித்தது. சட்டத்தை மீறுவதில் இலங்கை அரசுக்கு உள்ள துணிச்சல் கூட அரசியல் சட்டத்தை பாதுகாப்பதில் இந்திய அரசுக்கு இல்லாதது வேதனை அளிக்கிறது.

அனைத்துக் கட்சிகள் ஒன்று சேர வேண்டும்!

மத்திய அரசின் இந்த அணுகுமுறை தமிழ்நாட்டு மீனவர்களுக்கு ஈடு செய்ய முடியாத பாதிப்பை எற்படுத்திவிடும். தமிழக நலன் சார்ந்த விவகாரங்களில் மத்திய அரசு தொடர்ந்து துரோகம் செய்து வருவதற்கு தமிழக கட்சிகளிடையே போதிய ஒற்றுமை இல்லாததும் ஒரு காரணமாகும். எனவே, இந்தப் பிரச்சினையில் மத்திய அரசின் அணுகுமுறையை மாற்றுவதற்காக தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றுபட்டு அழுத்தம் தர வேண்டும்; மத்திய அரசின் நிலைப்பாட்டைக் கண்டித்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தமிழகத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் குரல் எழுப்ப வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

English summary
PMK founder Dr Ramadoss has condemned the Centre's statement on Katchatheevu row in the Supreme court
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X