Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

எடியூரப்பாவுடன் நெருக்கம்.. தமிழர்கள் பற்றி சர்ச்சையை கிளப்பிய மத்திய அமைச்சர்.. யார் இந்த ஷோபா?

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: ‛‛தமிழகத்தில் பயிற்சி பெற்றவர்கள் கர்நாடகாவுக்கு வந்து எங்கள் ஓட்டலில் வெடிகுண்டுகளை வைக்கிறார்கள்'' என்று சர்ச்சையாக பேசிய மத்திய அமைச்சர் ஷோபா கரந்தலாஜே மீது நடவடிக்கை எடுக்க இந்திய தேர்தல் ஆணையம் கர்நாடகா தேர்தல் அதிகாரிக்கு கடிதம் எழுதி உள்ளது. மேலும் 48 மணிநேரத்தில் அவர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை பற்றி அறிக்கை கேட்டுள்ள நிலையில் எடியூரப்பாவின் நெருங்கிய ஆதரவாளான ஷோபா கரந்தலாஜே யார்? என்பது பற்றிய விபரம் வருமாறு:

கர்நாடகாவில் பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவராக இருப்பவர் ஷோபா கரந்தலாஜே. இவர் கர்நாடகாவின் உடுப்பி - சிக்கமகளூர் தொகுதி எம்பியாக உள்ளார். மேலும் பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் விவசாயம் மற்றும் விவசாயிகள் நலத்துறையின் இணையமைச்சராக உள்ளார்.

Controversy Remark Who is Union Minister Shobha karandlaje and How she Close to BJP leader yediyurappa

வரும் லோக்சபா தொகுதியில் ஷோபா கரந்தலாஜே பெங்களூர் வடக்கு தொகுதியில் போட்டியிட உள்ளார். தொடர்ந்து 2 முறை அவர் வென்ற உடுப்பி - சிக்கமகளூர் தொகுதியில் இருந்து அவர் பெங்களூர் வடக்கு தொகுதிக்கு மாறியுள்ளார்.

இந்நிலையில் தான் ஷோபா கரந்தலாஜே கூறிய கருத்து சர்ச்சையை கிளப்பி உள்ளது. பெங்களூரில் தமிழர்கள் தான் குண்டு வைத்தார்கள் என்பது போல் அவர் கூறி பரபரப்பை கிளப்பினார். ‛‛தமிழகத்தில் பயிற்சி பெற்றவர்கள் கர்நாடகாவுக்கு வந்து எங்கள் ஓட்டலில் வெடிகுண்டுகளை வைக்கிறார்கள். கர்நாடகா மீது தாக்குதல் நடத்தும் அவர்கள் மீது கர்நாடகா காங்கிரஸ் அரசு எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. பாகிஸ்தான் ஜிந்தாபாத் என்று கோஷம் போடுவோர் மீதும் நடவடிக்கை எடுப்பதில்லை''எனக்கூறினார்.

அதாவது கடந்த மார்ச் 1ம் தேதி பெங்களூரில் உள்ள ராமேஸ்வரம் கஃபே உணவகத்தில் திடீரென்று குண்டுவெடித்தது. இதில் 10 பேர் காயமடைந்தனர். அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் ஏற்படவில்லை. இதுபற்றி என்ஐஏ விசாரணை நடத்தி வரும் நிலையில் ஷோபா கரந்தலாஜே இந்த கருத்தை தெரிவித்தது சர்ச்சையை கிளப்பியது. முதல்வர் ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உள்பட பல்வேறு தரப்பினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதற்கிடையே ஷோபா கரந்தலாஜே மன்னிப்பு கோரி தனது கருத்தை வாபஸ் பெற்றார்.

இருப்பினும் திமுக அமைப்பு செயலாளர் ஆர்எஸ் பாரதி சார்பில் இந்திய தேர்தல் ஆணையத்துக்கு ஷோபா கரந்தலாஜே மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என இ-மெயிலில் கடிதம் அனுப்பினார். இதையடுத்து ஷோபா கரந்தலாஜே மீது தேர்தல் நடத்தை விதிக்கு உட்பட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுதொடர்பாக தொடர்பாக 48 மணிநேரத்தில் அறிக்கை அளிக்க வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் தான் ஷோபா கரந்தலாஜே யார்? கர்நாடகா பாஜக தலைவர் எடியூரப்பா ஆதரவில் எப்படி அவர் மத்திய அமைச்சர் பதவி வரை சென்றார்? என்பது பற்றிய விபரம் வருமாறு:

ஷோபா கரந்தலாஜே கர்நாடகா மாநில புத்தூரில் பிறந்தார். இவருக்கு வயது 58. இவர் இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை. ஒக்கலிகர் சமுதாயத்தை சேர்ந்த இவர் தொடக்க முதலே ஆர்எஸ்எஸ்ஸில் செயல்பட்டார். அதன்பிறகு ஆர்எஸ்எஸ் மூலம் அரசியலுக்குள் நுழைந்தார். கர்நாடகாவில் பாஜகவில் செல்வாக்கான தலைவராக இருக்கும் எடியூரப்பாவின் தீவிர ஆதரவாளராக மாறினார். எடியூரப்பாவும் இவருக்கு முக்கிய பொறுப்புகளை கொடுக்க தொடங்கினார். 2004 முதல் 2008 வரை கர்நாடகா மேல்சபை உறுப்பினர் (எம்எல்சி) செயல்பட்டார்.

அதன்பிறகு 2008 சட்டசபை தேர்தலில் பெங்களூர் யஷ்வந்தபுரம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்எல்ஏவானார். அப்போது பாஜக ஆட்சியை பிடித்தது. எடியூரப்பா முதல்வராக இருந்தார். ஷோபா கரந்தலாஜே ஊரக வளர்ச்சித்துறை அமைச்சரானார். ஓராண்டு மட்டுமே அவர் அமைச்சரானார். 2009ல் கர்நாடகாவில் அரசியல் குழப்பம் ஏற்பட்டது. எடியூரப்பாவுக்கு எதிராக பாஜகவில் செல்வாக்காக இருந்த ரெட்டி சகோதரர்கள் முடிவு செய்தனர். எம்எல்ஏக்களுடன் அவர்கள் தனியே சென்றனர்.

இதையடுத்து பாஜக மேலிடம் தலையிட்டு ரெட்டி சகோதரர்களை சமாதானம் செய்தது. மேலும் ரெட்டி சகோதரர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக எடியூரப்பா அறிவித்தார். அப்போது ரெட்டி சகோதரர்களின் கோரிக்கையை ஏற்று ஷோபா கரந்தலாஜே அமைச்சர் பொறுப்பை ராஜினாமா செய்தார். ஷோபா கரந்தலாஜேவுக்கு எடியூரப்பா முக்கியத்துவம் அளித்தது ரெட்டி சகோதரர்களுக்கு பிடிக்கவில்லை. இதையடுத்து முதல்வர் பதவியை காக்க ஷோபா கரந்தலாஜேவை ராஜினாமா செய்ய எடியூரப்பா பணித்தார்.

இருப்பினும் அடுத்த ஓராண்டுக்குள் மீண்டும் ஷோபா கரந்தலாஜே அமைச்சரானார். அப்போது அவருக்கு உணவு மற்றும் பொது வினியோகத்துறை வழங்கப்பட்டது. அதன்பிறகு மின்சாரத்துறையும் வழங்கப்பட்டது. இதற்கிடையே ஊழல் வழக்கில் எடியூரப்பா சிறை சென்றார். பாஜகவுடன் ஏற்பட்ட மனக்கசப்பால் அவர் கேஜேபி கட்சியை தொடங்கினார். ஷோபா கரந்தலாஜேவும் பாஜகவில் இருந்து வெளியேறி எடியூரப்பா கட்சியில் சேர்ந்தார். அவருக்கு கேஜேபி கட்சியின் செயல் தலைவர் பதவி வழங்கப்பட்டது. 2013 தேர்தலில் கேஜேபி சார்பில் பெங்களூர் ராஜாஜிநகர் தொகுதியில் போட்டியிட்டு தோற்றார்.

அதன்பிறகு மீண்டும் எடியூரப்பா பாஜகவில் இணைந்தார். ஷோபா கரந்தலாஜேவும் மீண்டும் பாஜகவுக்குள் வந்தார். 2014ல் நடந்த லோக்சபா தேர்தலில் உடுப்பி சிக்கமகளூர் தொகுதியில் போட்டியிட்டு எம்பியானர். அதன்பிறகு 2019ல் நடந்த லோக்சபா தேர்தலில் மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 2021ல் ஷோபா கரந்தலாஜேவுக்கு மத்திய அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டது. கர்நாடகாவில் எடியூரப்பா முதல்வர் பதவியை ராஜினாமா செய்த நிலையில் அவர் அதிருப்தியில் இருந்தார். எடியூரப்பாவை சமாதானம் செய்யும் வகையில் ஷோபா கரந்தலாஜேவுக்கு மத்திய அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.

இத்தகைய சூழலில் தான் தற்போது அவர் தமிழ்நாட்டை பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார். விரைவில் லோக்சபா தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இது பாஜகவுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியது. அதாவது எடியூரப்பாவின் மகன் ராகவேந்திரா சிவமொக்கா லோக்சபா தொகுதியில் போட்டியிட்டுள்ளார். இந்த தொகுதியில் பத்ராவதி எனும் பகுதி உள்ளது. இங்கு ஏராளமான தமிழ் மக்கள் வசிக்கின்றனர். அதேபோல் சிவமொக்காவிலும் கணிசமான அளவில் தமிழர்கள் வசிக்கின்றனர்.

அதேபோல் ஷோபா கரந்தலாஜே வரும் லோக்சபா தேர்தலில் உடுப்பி - சிக்கமகளூர் லோக்சபா தொகுதிக்கு பதில் பெங்களூர் வடக்கு தொகுதியில் போட்டியிடுகிறார். இந்த தொகுதியில் கணிசமான அளவில் தமிழர்கள் உள்ளனர். இத்தகைய சூழலில் ஷோபா கரந்தலாஜேவின் இந்த பேச்சு என்பது லோக்சபா தேர்தலில் எடியூரப்பாவின் மகன் ராகவேந்திரா மற்றும் ஷோபா கரந்தலாஜே ஆகியோருக்கு பின்னடைவை ஏற்படுத்தலாம். இதனை உணர்ந்து தான் ஷோபா கரந்தலாஜே உடனடியா தனது கருத்துக்கு மன்னிப்பு கேட்டு அதனை திரும்ப பெற்றுள்ளார்.

மேலும் கர்நாடகாவில் எப்போதெல்லாம் எடியூரப்பா செல்வாக்கான பொறுப்பில் இருந்தாரோ, அப்போதெல்லாம் ஷோபா கரந்தலாஜே தொடர்பான சர்ச்சை கிளம்பும். தற்போதும் எடியூரப்பா முதல்வர், எம்எல்ஏ என எந்த பதவியிலும் இல்லை. வயது முதிர்வால் அவர் அரசியலில் ஓய்வு பெற்றாலும் கூட அவர் பாஜக மேலிடத்துடன் தொடர்பில் உள்ளார். மேலும் கர்நாடகா மாநில தலைவராக எடியூரப்பாவின் இளைய மகன் விஜயேந்திரா உள்ளார். அவருக்கு தேர்தல் வியூகங்களை எடியூரப்பா வகுத்து கொடுக்கிறார்.

அதுமட்டுமின்றி கடந்த ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் கர்நாடகாவில் பாஜக தோற்க முக்கிய காரணம் எடியூரப்பாவை முதல்வர் பதவியில் இருந்து நீக்கியது தான் காரணம் என்பதை பாஜக மேலிடம் உணர்ந்துள்ளது. இதனால் லோக்சபா தேர்தலுக்காக முன்பாக எடியூரப்பாவுடன் பாஜக மேலிட தலைவர்கள் நெருக்கம் காட்டி வருவதோடு அவரது மகன் விஜயேந்திராவுக்கு மாநில தலைவர் பதவியையும் வழங்கினர். இதனால் எடியூரப்பாவின் செல்வாக்கு மீண்டும் பாஜக மேலிடத்தில் உயர்ந்துள்ளது. அதோடு லோக்சபா தேர்தலில் கர்நாடகாவில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்கள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அதில் பெரும்பான்மையானவர்கள் எடியூரப்பாவின் ஆதரவாளர்கள் ஆவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+