ஆஹா.. இது என்ன புதுசா இருக்கு.. இப்படி ஒரு ரோடு எச்சரிக்கை பலகை பார்த்திருக்கீங்களா?
பெங்களூரு: நாடு முழுவதும் சாலை போக்குவரத்து விரிவாக்கப்பட்டு வரும் நிலையில் சாலை விதிகள் தீவிரமாக அமல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் பெங்களூரு சாலையில் உள்ள ஒரு எச்சரிக்கை பலகை குறித்து அம்மாநில போக்குவரத்து காவல்துறையினர் டிவிட்டர் வழியாக விளக்கமளித்துள்ளனர்.
வித்தியாசமாக நான்கு கருப்பு புள்ளிகள் வைக்கப்பட்டிருந்த வெள்ளை நிற பலகை ஒன்றை டிவிட்டர் பயனாளர் பதிவிட்டு அம்மாநில போக்குவரத்து காவல் அதிகாரிகளிடம் சந்தேகம் கேட்டிருந்தார்.
இதற்கு முன் நாமும் பெரும்பாலும் பார்த்திராத இந்த வகை எச்சரிக்கை பலகை டிவிட்டரில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. இந்நிலையில் போக்குவரத்து காவல் அதிகாரிகள் அதற்கு விளக்கம் அளித்துள்ளனர்.
பெங்களூரு: தலைமுடி கொட்டியதால் கல்லூரி மாணவி தற்கொலை - கடிதத்தைக் கைப்பற்றி போலீசார் விசாரணை

சாலை விபத்து
மனிதர்கள் மற்ற எந்த வழிகளிலும் உயிரிழப்பதை விடவும் சாலை விபத்துகளில் உயிரிழப்பதுதான் மிகவும் கொடுமையாக பார்க்கப்படுகிறது. மட்டுமல்லாது விபத்துகளால் உடனடியாக உயிர்கள் பலியாகிவிடுகின்றன. உலகம் முழுவதும் நாளொன்றுக்கு சராசரியாக 10 பேர் (உதாரணத்திற்காக) வரை சாலை விபத்துகளில் உயிரிழக்கிறார்கள் எனில் அதில் ஒருவர் நிச்சயம் இந்தியாவை சேர்ந்தவராக இருக்கிறார் என உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது. அதாவது ஒரு நாளில் உலகம் முழுவதும் நிகழும் சாலை விபத்து மரணங்களில் 10ல் 1 சதவிகிதம் இந்தியாவில் ஏற்படுகிறது என புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

உயிரிழப்பு
கடந்த 2020 ஆம் ஆண்டில் மட்டும் மொத்தம் 3,66,138 சாலை விபத்துகள் பதிவாகியுள்ளன. இதில் 1,31,714 பேர் உயிரிழந்துள்ளனர். 3,48,279 பேர் படுகாயமடைந்துள்ளனர். இதில் கவலைக்குரிய விஷயம் என்னவெனில் சாலை விபத்துக்களில் 18-45 வயதுக்குட்பட்டவர்கள்தான் மிகவும் மோசமாக பாதிக்கப்படுகின்றனர். பதிவு செய்யப்படும் மொத்த உயிரிழப்புகளில் இந்த வயதுக்கு உட்பட்டோரின் எண்ணிக்கை மட்டும் சுமார் 70%. இதிலிருந்து சாலை விபத்துக்கள் எவ்வளவு மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்று நம்மால் புரிந்துகொள்ள முடியும்.

சந்தேகம்
இந்த சூழலில்தான் சமீபத்தில் டிவிட்டரில் பயனாளர் ஒருவர் போக்குவரத்து விதி குறித்து எழுப்பிய கேள்வி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. அந்த பயனாளர் முக்கோண வடிவில் உள்ள ஒரு வெள்ளை நிற போக்குவரத்து எச்சரிக்கை பலகையை பகிர்ந்திருந்தார். அதில், நான்கு கருப்பு புள்ளிகள் உள்ளன. இதை டிவிட்டரில் பகிர்ந்து அம்மாநில போக்குவரத்து காவல்துறையை டேக் செய்து "இது என்ன போக்குவரத்து சின்னம்? இது ஹோப்ஃபார்ம் சிக்னலுக்கு சற்று முன்பு உள்ளது" என்று கேள்வியெழுப்பியிருந்தார். ஹோப்ஃபார்ம் பகுதியானது பெங்களூரு நகரத்தின் போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியாகும்.

பதில்
இந்நிலையில் இந்த கேள்விக்கு போக்குவரத்து போலீசார் தரப்பில் பதிலளிக்கப்பட்டது. அந்த பதில் ட்வீட்டில் "இது ஒரு போக்குவரத்து எச்சரிக்கை பலகை. அதாவது பார்வை சவாலுடைய மாற்றுத்திறனாளிகள் இந்த பகுதியில் அதிகம் உள்ளனர். எனவே இந்த பகுதியில் வாகனத்தை கவனமாக இயக்க வேண்டும் என்பதை இந்த பலகை வலியுறுத்துகிறது. ஹோப்ஃபார்ம் சந்திப்பில் பார்வை சவால் கொண்ட மாற்றுத் திறனாளிகளுக்கான பள்ளி ஒன்று இயங்கி வருகிறது" என விளக்கம் கொடுக்கப்பட்டது. இந்த ட்வீட் அதிக அளவில் பகிரப்பட்டதையடுத்து, பல பயனாளிகள் தங்களுக்கு இது என்ன எச்சரிக்கை பலகை என தெரியவில்லை என ஒப்புகொண்டனர். மேலும் நீங்கள் விளக்கம் கொடுத்த பிறகுதான் தெரிந்துகொண்டோம் என காவல்துறையினருக்கு நன்றியும் தெரிவித்து வருகின்றனர்.