'2019இல் காங்.-இல் இருந்து விலக.. பாஜக பணம் கொடுக்க தயாராக இருந்தது..' பாஜக எம்எல்ஏ பரபரப்பு பேச்சு
பெங்களூரு: கடந்த 2019ஆம் ஆண்டு கர்நாடகாவில் காங்கிரசில் இருந்து ராஜினாமா செய்துவிட்டு பாஜகவில் இணைந்த முக்கிய தலைவர்களில் ஒருவரான ஸ்ரீமந்த் பாலாசாகேப் பாட்டீல், பாஜகவில் இணைய தனக்கு எவ்வளவு பணம் கேட்டாலும் தரத் தாயாராக இருந்தார்கள் என கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
224 இடங்களைக் கொண்டு கர்நாடக சட்டசபைக்குக் கடந்த 2018ஆம் ஆண்டு தேர்தல் நடைபெற்றது. அதில் 104 இடங்களில் வென்று பாஜக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது.
அங்கு ஆட்சி அமைக்கக் குறைந்தது 113 இடங்களைப் பெற்றிருக்க வேண்டும். எந்தவொரு கட்சியினாலும் பெரும்பான்மைக்குத் தேவையான இடங்களைப் பெற முடியவில்லை.

கர்நாடக அரசியல்
பாஜக தனிப்பெரும் கட்சியாக இருந்த போதிலும், 80 இடங்களில் வென்ற காங்கிரசும் 40 இடங்களில் மதச்சார்பற்ற ஜனதா தளமும் இணைந்து ஆட்சியை அமைத்தது. மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் தலைவர் குமாரசாமி கர்நாடக முதல்வராகப் பதவியேற்றார். இருப்பினும், இந்த அரசு வெறும் 14 மாதங்கள் மட்டுமே நீடித்தது. 2019 மக்களவை தேர்தலுக்குப் பின்னர், ஜூலை மாதம் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 14 பேரும் மதச்சார்பற்ற ஜனதா தளத்தைச் சேர்ந்த மூன்று பேரும் வரிசையாக ராஜினாமா செய்தனர்.

புதிய அரசு
அவர்களில் ஒரு காங்கிரஸ் எம்எல்ஏ மட்டும் தனது ராஜினாமா திரும்பப்பெற்றார். மற்ற 16 பேரும் பாஜகவில் இணைந்தனர். இதனால் காங்கிரஸ் மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணி அரசு பெரும்பான்மை இழந்தது. கர்நாடக முதல்வராக இருந்த குமாரசாமி ராஜினாமா செய்தார். இதையடுத்து அப்போது புதிய முதல்வராக எடியூரப்பா பதவியேற்றார். அப்போது நடைபெற்ற இடைத்தேர்தலில் காங்கிரஸில் இருந்து விலகிய 12 பேர் பாஜக சார்பில் போட்டியிட்டு 12 எம்எல்ஏக்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

பணம் கொடுக்க தயார்
அப்படி பாஜகவில் இணைந்த முக்கிய காங்கிரஸ் தலைவர்களில் ஒருவர் ஸ்ரீமந்த் பாலாசாகேப் பாட்டீல். இன்று செய்தியாளர்களும் பேசிய ஸ்ரீமந்த் பாலாசாகேப் பாட்டீல், "நான் ஒரு ரூபாய் கூடப் பெறாமல் பாஜகவில் இணைந்தேன். கட்சியில் சேர எனக்குப் பணம் கொடுப்பதாகத் தெரிவித்தனர். அந்த சமயத்தில் நான் எவ்வளவு பணம் வேண்டுமானாலும் கேட்டிருக்கலாம். ஆனால் நான் பணத்தைக் கேட்கவில்லை, மக்களுக்குச் சேவை செய்ய வேண்டும் என்பதால் அமைச்சர் பதவியை மட்டுமே கேட்டேன்.

பரபரப்பு பேச்சு
இப்போதுள்ள அரசு எனக்கு ஏன் அமைச்சர் பதவி கொடுக்கவில்லை என எனக்குத் தெரியாது. ஆனால் அடுத்த அமைச்சரவை விரிவாக்கத்தில் எனக்கு அமைச்சர் பதவி அளிக்கப்படும் என உறுதியளித்துள்ளனர். இது தொடர்பாகக் கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மையுடன் கூட பேசியுள்ளேன்" என்றார். ஸ்ரீமந்த் பாலாசாகேப் பாட்டீலின் இந்த பேச்சு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதைக் காங்கிரஸ் உள்ளிட்ட அம்மாநிலத்தின் எதிர்க்கட்சிகள் கடுமையாகக் கண்டித்துள்ளனர்.

ஸ்ரீமந்த் பாலாசாகேப் பாட்டீல்
கடந்த 2019இல் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்து முக்கிய தலைவர்களில் ஒருவர் ஸ்ரீமந்த் பாலாசாகேப் பாட்டீல். எடியூரப்பாவின் அமைச்சரவையில் இவருக்கு அமைச்சர் பதவி அளிக்கப்பட்டிருந்தது. இருப்பினும், கடந்த சில மாதங்களுக்கு முன் எடியூரப்பா ராஜினாமா செய்து, கர்நாடகாவின் புதிய முதல்வராக பசவராஜ் பொம்மை பொறுப்பேற்றார். அவரது தலைமையிலான புதிய கர்நாடக அரசில் ஸ்ரீமந்த் பாலாசாகேப் பாட்டீலுக்கு அமைச்சர் பதவி அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications