காங்கிரஸ் தலைவர்களை சுட்டு தள்ள தனிச் சட்டம் வேண்டும்! கர்நாடக பாஜகவின் ஈஸ்வரப்பா மீண்டும் சர்ச்சை
பெங்களூர்: காங்கிரஸ் தலைவர்கள் தேசத் துரோகிகள் என்று விமர்சித்த பாஜக மூத்த தலைவர் கேஎஸ் ஈஸ்வரப்பா, அவர்களைச் சுட்டுக் கொல்ல தனியாகச் சட்டம் வேண்டும் என்று கூறியுள்ளது பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
கர்நாடகாவில் இப்போது சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு நடந்து வருகிறது. அதேநேரம் விரைவில் லோக்சபா தேர்தல் நடக்கும் நிலையில், அங்கு பாஜக தனது பிரச்சாரத்தை ஏற்கனவே ஆரம்பித்துவிட்டது.

சர்ச்சை: இதற்கிடையே கர்நாடக பாஜக மூத்த தலைவர் கேஎஸ் ஈஸ்வரப்பா கூறியுள்ள சில கருத்துகள் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. காங்கிரஸ் எம்பி டிகே சுரேஷ் மற்றும் எம்எல்ஏ வினய் குல்கர்னி ஆகியோரை கொலை செய்யச் சட்டம் கொண்டு வர வேண்டும் என்று அவர் சாடினார். இரு தலைவர்களையும் துரோகிகள் என்று விமர்சித்த ஈஸ்வரப்பா, அவர்கள் இருவரும் இந்தியாவைத் துண்டு துண்டாகப் பிரிக்க விரும்புகிறார்கள் என்றும் விமர்சித்தார்.
கர்நாடகாவின் தாவாங்கரே மாவட்டத்தில் புதிய பாஜக நிர்வாகிகள் பதவியேற்பு விழாவில் கலந்து கொண்ட ஈஸ்வரப்பா இந்த சர்ச்சை கருத்துகளைக் கூறினார். அந்த நிகழ்ச்சியில் அவர் மேலும் பேசுகையில், "அவர்கள் நாட்டை பிளவுபடுத்தும் வகையில் மீண்டும் பேசினால் டி.கே. சுரேஷ் மற்றும் வினய் குல்கர்னி ஆகியோர் தேசத் துரோகிகள் என்று நரேந்திர மோடியிடம் தெரிவிப்பேன். அவர்கள் இந்த தேசத்தைத் துண்டு துண்டாகப் பிரிக்க விரும்புகிறார்கள். அவர்களைச் சுட்டுக் கொல்ல சட்டம் வேண்டும்" என்று அவர் தெரிவித்தார்.
எதிர்ப்பு: ஈஸ்வரப்பாவின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. பல்வேறு தரப்பினரும் அவரது பேச்சுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக சமூக செயற்பாட்டாளர் கவிதா ரெட்டி, "கே.எஸ். ஈஸ்வரப்பாவை பொதுவெளியில் அடித்துக் கொல்ல வேண்டும் என்று நான் கூறியிருந்தால் பெங்களூர் போலீசார் என்னைக் கைது செய்திருக்கும்.. ஆனால் டி.கே. சுரேஷைக் கொல்ல வேண்டும் என ஈஸ்வரப்பா கூறியதற்காக எந்த நடவடிக்கையும் இல்லை.. இதனை என்னவென்று சொல்வது" என்று சாடியுள்ளார்.
மத்திய அரசு தென்மாநிலங்களுக்கு மிகக் குறைவான நிதியை ஒதுக்கீடு செய்வதாகக் கூறி டெல்லியில் கர்நாடக எம்பிக்கள் போராட்டம் நடத்திய நிலையில், ஈஸ்வரப்பா சர்ச்சைக்குரிய கருத்துகளைக் கூறியுள்ளார். அதேநேரம் ஈஸ்வரப்பா இதுபோல சர்ச்சை கருத்துகளைக் கூறுவது இது முதல்முறை இல்லை. ஏற்கனவே கடந்த காலங்களில் பல முறை அவரது பேச்சுகள் பரபரப்பைக் கிளப்பியுள்ளன.
முதல்முறை இல்லை: முன்னதாக கடந்த மாதம் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஈஸ்வரப்பா, "பல கோயில்கள் இடித்து அந்த கோயில் நிலங்களில் தான் மசூதிகளைக் கட்டியுள்ளனர். அந்த மசூதிகளை உடனே காலி செய்யுங்கள்.. மசூதிகளைத் தானாக முன்வந்து காலி செய்யாவிட்டால் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும்" என்று அவர் கூறியிருந்தார். அதேபோல கடந்த ஆண்டும் ஈஸ்வரப்பா மசூதிகள் இடிக்கப்பட்டு கோயில்கள் கட்டப்படும் என்று கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இப்போது நடந்து வரும் நிலையில், அதில் தென்மாநிலங்களுக்குக் குறைவாக நிதி ஒதுக்கப்படுவதாகத் தென்மாநில எம்பிக்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர். அது தொடர்பாகப் பேசும் போது கர்நாடக எம்பி டிகே சுரேஷ், தென்மாநிலங்களுக்குக் குறைந்த நிதி ஒதுக்கப்படுவதாகவும் இதனால் தென்மாநிலங்களுக்குத் தனி நாடு தேவை என்பது போலக் கூறி சர்ச்சையைக் கிளப்பியிருந்தார். அதன் பிறகு அவர் தென்மாநிலங்களுக்கு அதிக நிதி தேவை என்றே தான் கூறியதாக விளக்கமும் அளித்துவிட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications