குவிந்த லட்சக்கணக்கான மக்கள்! அலை அலையாக ரசிகர்கள் புனித் உடலுக்கு கண்ணீர் அஞ்சலி!
பெங்களூர்: மாரடைப்பால் மரணமடைந்த கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் உடலுக்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்திய வண்ணம் இருக்கிறார்கள். 46 வயதேயான கன்னட சூப்பர் ஸ்டார் நடிகர் புனித் ராஜ்குமார் நேற்று மாரடைப்பு காரணமாக மரணமடைந்தார்.
Recommended Video
திடீரென தலையில் இறங்கிய பேரிடி போன்ற இந்த சம்பவம் ரசிகர்களை அப்படியே நிலைகுலைய வைத்துவிட்டது. மாநிலம் முழுவதும் மக்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
இந்த நிலையில், புனித் ராஜ்குமார் உடலுக்கு முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்படும் என்று முதல் அமைச்சர் பசவராஜ் பொம்மை அறிவித்தார். புனித் ராஜ்குமார், கன்னட சூப்பர் ஸ்டார் நடிகர் ராஜ்குமார் மகனாகும் .

ரசிகர்கள் கூட்டம்
ராஜ்குமாருக்கு கர்நாடகா முழுக்க மிகப்பெரிய ரசிகர் கூட்டம் இருக்கிறது. இது தவிர புனித் ராஜ்குமாரின் அண்ணன் சிவராஜ்குமார், கன்னட திரையுலகின் முன்னணி நடிகராக இருக்கிறார். அவருக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருக்கிறது. இந்த நிலையில்தான் லட்சக்கணக்கான ரசிகர்கள் புனித் ராஜ்குமார் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக பெங்களூரு நோக்கி படையெடுத்து வந்த வண்ணம் இருக்கிறார்கள்.

லட்சக்கணக்கான ரசிகர்கள்
புனித் ராஜ்குமாரின் உடல் வடக்கு பெங்களூரில் உள்ள கண்டீராவா ஸ்டேடியம் பகுதியில் பொதுமக்கள் அஞ்சலிக்காக நேற்று மாலை முதல் வைக்கப்பட்டுள்ளது . பெங்களூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள ரசிகர்கள் நேற்று மாலை முதலே அஞ்சலி செலுத்திய நிலையில் தொலை தூரங்களில் உள்ள மக்கள் பஸ்கள் மற்றும் வாகனங்கள் மூலமாக பெங்களூர் கண்டீரவா ஸ்டேடியம் வந்து வரிசையாக நின்று கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

ஞாயிற்றுக்கிழமை புனித் ராஜ்குமார் உடல் தகனம்
புனித் ராஜ்குமார் மகள் வெளிநாட்டில் வசிப்பதால் அவர் பெங்களூர் வந்ததும் நாளை ஞாயிற்றுக்கிழமை புனித் ராஜ்குமார் உடல் தகனம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. புனித் ராஜ்குமார் மறைவுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பல்வேறு மொழிகளின் நடிகர் நடிகைகள் கிரிக்கெட் வீரர்கள் உள்ளிட்ட விளையாட்டு பிரபலங்கள் உள்ளிட்ட பல தரப்பினரும் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளனர்.

இயல்பு நிலை
முன்னதாக புனித ராஜ் குமார் தனது கண்களை தானம் செய்ததால் நேற்று புனித் ராஜ்குமார் விழித்திரை அகற்றப்பட்டது. தேவைப்படும் நபருக்கு அது, பொருத்தப்படும் . இதனிடையே புனித் ராஜ்குமார் மறைவு செய்தி வெளியானதும், கர்நாடாக முழுக்க பதட்டமான நிலை நிலவியது. கடைகள் மூடப்பட்டன, பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டது. இருப்பினும் இன்று பெங்களூரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் இயல்பு வாழ்க்கை திரும்பியுள்ளது. கடைகள் திறந்திருக்கின்றன. பள்ளிகள் ஆன்லைன் மூலமாக நடைபெறுகின்றன. தனியார் பள்ளி கூட்டமைப்பு பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து உள்ள போதிலும் அரசு அந்த மாதிரியான அறிவிப்பு வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications