2 வருட பிளான்! சறுக்கல்களுக்கு இடையே சாதித்த ஆம்ஆத்மி! பஞ்சாப்பில் ஆட்சியை பிடித்ததன் சீக்ரெட்!
சண்டிகர்: ஆம்ஆத்மி கட்சி அரசியல் சறுக்கல்களுக்கு மத்தியில் பஞ்சாப்பில் ஆட்சியை கைப்பற்றியுள்ளது. இந்த வெற்றிக்கு பின்னால் கடந்த 2 ஆண்டு கடின உழைப்பு மற்றும் அதுபற்றிய ரகசியம் என்ன என்பது குறித்த விபரம் வெளியாகி உள்ளது.
பஞ்சாப் சட்டசபை தேர்தலில் பஞ்சாப்பில் ஆம் ஆத்மி கட்சி அமோக வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சியை ஆட்சி கட்டிலில் இருந்து இறக்கி அரியனையில் ஏற உள்ளது. ஆம்ஆத்மி சார்பில் பகவந்த் மான் முதல்வராக பொறுப்பு ஏற்க உள்ளார்.
டெல்லியை தொடர்ந்து பஞ்சாப்பில் ஆட்சியை கைப்பற்ற ஆம்ஆத்மி கடுமையாக போராடி உள்ளது. முக்கிய நிர்வாகிகள் விலகல், பாராளுமன்ற தேர்தலில் சறுக்கல், டெல்லி-பஞ்சாப் நிர்வாகிகள் இடையேயான அதிகார போட்டி ஆகியவற்றை தாண்டி ஆம்ஆத்மி கட்சி இன்று வெற்றி பெற்றுள்ளது.

4 எம்பிக்கள்
ஆம்ஆத்மி கட்சி 2014 பாராளுமன்ற தேர்தல் மூலம் பஞ்சாப்பில் கால்பதித்தது. சந்தித்த முதல் தேர்தலிலேயே ஆம்ஆத்மி அனைவரின் புருவத்தையும் உயர்த்த செய்தது. சன்கூரில் பகவந்த் மான், பட்டியாலாவில் தரம்வீர் காந்தி, பரிட்காட்டில் சாதுசிங், பாடிகார்க் சாஹிப் தொகுதியில் ஷரீந்தர் சிங் கல்சா ஆகியோர் வெற்றி பெற்றனர். மொத்தமுள்ள 13 தொகுதிகளில் 4 இடங்களில் ஆம்ஆத்மி கட்சி வென்றது.

டெல்லி, பஞ்சாப் முகங்கள்
அதன்பிறகு படிப்படியாக கட்சி மாநிலத்தில் வளர துவங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சறுக்கலை சந்தித்தது. இதற்கு காரணம் ஒன்றே ஒன்று தான். அதாவது பஞ்சாப் ஆம்ஆத்மி கட்சிக்குள் டெல்லியில் உள்ளவர்கள் அதிகாரம் செலுத்த நினைத்ததும், இதற்கு பஞ்சாப் ஆம்ஆத்மி நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவித்ததும் தான் முக்கிய காரணமாகும். சஞ்சய் சிங் மற்றும் துர்கேஷ் பதக் ஆகிய தலைவர்கள், கெஜ்ரிவாலின் முக்கிய வியூக குழுவை ஒருங்கிணைந்தார்கள். இவர்கள் டெல்லி அணியின் முகமாக பார்க்கப்பட்டனர். மறுபுறம் பகவந்த் மான், சுச்சா சிங் சோட்பூர், எச்எஸ் பூல்கா ஆகியோர் பஞ்சாப் முகமாக பார்க்கப்பட்டனர்.

கெஜ்ரிவால் மன்னிப்பு
இவர்களுக்குள் சரியான புரிதல்கள் ஏற்படாமல் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் 2016, 2019ல் முறையே சுச்சா சிங் சோட்பூர், எச்எஸ் பூல்கா ஆகியோர் கட்சியில் இருந்து வெளியேறினர். பகவந்த் மான் மட்டும் ஆம்ஆத்மியில் நிலைத்திருந்தார். மேலும் 2018ல் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டதாகக் கூறி சிரோமணி அகாலி தள எம்எல்ஏ பிக்ரம் சிங் மஜிதியாவிடம் அரவிந்த் கெஜ்ரிவால் மன்னிப்பு கேட்டார்.

ஒரு இடத்தில் மட்டும் வெற்றி
இந்த விவகாரத்தில் அப்போது கட்சியிணை ஒருங்கிணைப்பாளராக இருந்த சுனம் எம்எல்ஏவான அமன் அரோரா, பகவந்த் மான் ஆகியோர் தங்கள் கட்சி பதவிகளை ராஜினாமா செய்தனர். இதில் அரவின் இந்த் கெஜ்ரிவால் அவர்களை சமாதானம் செய்தார். இதையடுத்து அவர்கள் கட்சியில் தொடர்ந்தனர். இந்த உள்கட்சி பூசல்கள் 2019 பாராளுமன்ற தேர்தலில் எதிரொலித்தது. 2014ல் பஞ்சாப்பில் 4 இடங்களில் வென்ற ஆம்ஆத்மி வெறும் ஒரு இடத்தில் மட்டுமே வென்றது. அதுவம் பகவந்த் மான் மட்டுமே வெற்றி பெற்றார்.

வெளியேறிய எம்எல்ஏக்கள்
முன்னதாக உள்கட்சி பூசல்களுக்கு நடுவே 2017 சட்டசபை தேர்தலில் ஆம்ஆத்மி அதிக கவனம் செலுத்தியது. ஆனால் அதில் வெறும் 20 இடங்களில் மட்டுமே ஆம்ஆத்மி வெற்றி பெற்றது. இதன்மூலம் எதிர்க்கட்சியாக உருவெடுத்தது. இதற்கிடையே 9 எம்எல்ஏக்கள் கட்சியை விட்டு வெளியேறினர். இதனால் ஆம்ஆத்மி கட்சி உருக்குலைந்து போன நிலையில் 2022 சட்டசபை தேர்தலில் அதிக கவனம் செலுத்தியது.

பஞ்சாப்பில் கவனம்
அதாவது 2020 சட்டசபை தேர்தலில் டெல்லியில் ஆம்ஆத்மி மீண்டும் வெற்றி பெற்றது. இதையடுத்து அவர்கள் பஞ்சாப் மீது கவனத்தை திருப்பினர். கிராமங்கள் தோறும் கட்சிகளை வளர்க்கும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டது. அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு மிகவும் நெருக்கமான டெல்லியை சேர்ந்த ராகவ் சதா மாநில பொறுப்பாளராக செயல்பட்டார். பகவந்த் மான் மாநில ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டார்.இருவரும் சேர்ந்து பணியாற்றினர்.அத்துடன் கட்சி மட்டத்தில் அதிகார போட்டி எழாதவாறு அரவிந்த் கெஜ்ரிவால் பார்த்து கொண்டார். மேலும் பெரும்பாலான நிகழ்ச்சிகளில் அரவிந்த் கெஜ்ரிவால் தன்னையே முன்நிறுத்தினார்.

வெற்றி எப்படி
இதற்கிடையே தான் தேர்தல் நெருங்கவே முதல்வர் வேட்பாளராக பகவந்த் மானை அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிக்கப்பட்டார். இது அவருக்கு உற்சாகத்தை அளித்தது. மேலும் அவரது எளிமை, மக்களிடம் உள்ள செல்வாக்கு உள்ளிட்டவை ஆம்ஆத்மி கட்சியை கிராமங்கள் முதல் நகரங்கள் வரை பிரபலப்படுத்தியது. இது இந்த சட்டசபை தேர்தலில் ஆம்ஆத்மிக்கு பிளஸ் பாயிண்டாக அமையலாம் என கூறப்பட்டது. இதை கருத்து கணிப்புகளும் கூறின. இது தற்போது உண்மையாகி உள்ளது. ஆம்ஆத்மி பஞ்சாப்பில் ஆட்சியை கைப்பற்றியுள்ளது. பகவந்த் மானுக்கு ஆதரவாக அரவிந்த் கெஜ்ரிவால், அவரது மனைவி சுனிதா, மகள் ஹர்ஷிதா உள்ளிட்டவர்கள் பிரசாரம் செய்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications