சீன்லயே காணோம்.. "துடைப்பத்தாலேயே" பாஜக, கதர் கட்சியை துடைத்தெறிந்த ஆம் ஆத்மி.. பஞ்சாப்பில் குஷிதான்
பஞ்சாப் தேர்தல் முடிவில் ஆம் ஆத்மி அபார வெற்றியை நோக்கி செல்கிறது
சண்டிகர்: காங்கிரசுக்கு மாற்று ஆம் ஆத்மியா என்ற பல ஆண்டு கேள்விக்கு இன்று பஞ்சாப்பில் விடை கிடைத்துள்ளது.. எதிர்த்துப் போட்டியிட்ட ஆளும் கட்சியான காங்கிரஸ் கட்சியை தலைதெறிக்க ஓட வைத்துள்ளது கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி.. இதையடுத்து, அக்கட்சியின் தொண்டர்கள் "ஸ்வீட் எடு கொண்டாடு" என மகிழ்ச்சியை பகிர்ந்து வருகிறார்கள்.
பஞ்சாப் மாநிலத்தில் தொங்கு சட்டசபை இருக்கலாம் என்றுதான் இத்தனை நாளும் பேசப்பட்டு வந்தது.. ஆனால், இதற்கு காரணம், தேர்தலில் 71.95 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகியிருந்தன..
இன்று காலை வாக்கு எண்ணிக்கை ஆரம்பமானது.. இதில், பஞ்சாப் மாநிலத்தின் சட்டசபையில் உள்ள 117 இடங்களில் ஆம் ஆத்மி கட்சி 89 இடங்களில் முன்னிலை என காலை 11 மணி நிலவரப்படியே தெரிந்துவிட்டது..

வாக்கு சதவீதம்
அதாவது ஆட்சி அமைக்க போதுமான இடங்களை நெருங்க தொடங்கிவிட்டது.. ஆனால் காங்கிரஸோ வெறும் 15 இடங்களில் மட்டுமே முன்னிலை பெற்றிருந்தது. : வாக்கு சதவீதம் தற்போது வரை: ஆம் ஆத்மி 42.16% ; காங்கிரஸ் 23.30%; அகாலி தள் 17.63%; பாஜக 6.73%; பகுஜன் சமாஜ் 1.92%; நோட்டா 0.71% என தெரியவந்துள்ளது.. முக்கிய நபர்கள், அதாவது ராஜ்யசபா எம்பி பிரதாப் சிங் பஜ்வா, முதல் முறையாக இங்கு பின்தங்கியுள்ளார்.. அதேபோல, அகாலி தளம் வேட்பாளர் குரிக்பால் சிங் மஹால் தொடர்ந்து முன்னிலையில் உள்ளார்..

ஆம் ஆத்மி
தல்வாண்டி சபோவின் சிட்டிங் எம்எல்ஏவான ஆம் ஆத்மி கட்சியின் பல்ஜிந்தர் கவுர், எஸ்ஏடியின் ஜீத்மோஹிந்தர் சிங் சித்துவை விட முன்னணியில் இருந்து வருகிறார்.. தற்போதைய நிலவரம் குறித்து பல்ஜிந்தர் சொல்லும்போது, "இது பஞ்சாபின் வெற்றி... நீண்ட காலமாக தேடி கொண்டிருந்த மாற்றம் இப்போது வந்துவிட்டது" என்றார். அதேபோல, ஆம் ஆத்மி கட்சியின் முதல்வர் வேட்பாளர் பகவந்த் மான் துரி தொகுதியில் காங்கிரஸின் தல்வீர் சிங் கோல்டியை விட 12,000 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றுள்ளார்..

நம்பிக்கை
இக்கட்சியின் இணைப் பொறுப்பாளர் ராகவ் சதா, ஆம் ஆத்மியின் முன்னேற்றம் குறித்து சொல்லும்போது, "ஆம் ஆத்மி காங்கிரசுக்கு மாற்றாக மாறும்" என்று நம்பிக்கையுடன் தெரிவித்தார். ராகவ் சத்தா செய்தியாளர்களிடம் சொல்லும்போது, "ஆம் ஆத்மி கட்சி புதிய தேசிய சக்தியாக உருவெடுத்துள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு இயற்கையான மாற்று சக்தியாக ஆம் ஆத்மி உருவெடுத்துள்ளது. தேசிய அளவில் மிகப் பெரிய தாக்கத்தை ஆம் ஆத்மி கொடுத்துள்ளது. அரவிந்த் கெஜ்ரிவால் தான் அடுத்த பிரதமர்" என்று நம்பிக்கையுடன் சொல்கிறார்.

அகாலி தளம்
லாம்பி தொகுதியின் வாக்கு எண்ணிக்கையின் முதல் சுற்றில் 1,400 வாக்குகள் வித்தியாசத்தில் சிரோமணி அகாலி தளம் கட்சியின் முக்கியத் தலைவரான பிரகாஷ் சிங் பாதல் பின்தங்கிவிட, ஆம் ஆத்மி கட்சியின் குர்மீத் சிங் குதியான் டாப் கியர் போட்டு முன்னிலை வகித்து வருகிறார்.. பஞ்சாப்பின் சீனியர் தலைவரான கேப்டன் அமரீந்தர் சிங், 5,864 வாக்குகள் வித்தியாசத்தில் பின்தங்கியுள்ளார்... அதுவும், தன்னுடைய கோட்டையான பாட்டியாலா நகரிலேயே இந்த தோல்வியை சந்தித்து கொண்டிருக்கிறார். அகாலிதளம் 10 இடங்களிலேயே நீண்ட நேரமாக திணறி கொண்டிருக்கிறது.

மகிழ்ச்சி
இதை சுருக்கமாக சொல்லப்போனால், தபால் வாக்குகள் எண்ணப்பட்ட முதல் ஒரு மணி நேரத்திலேயே ஆம் ஆத்மி கட்சி 14 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளதாக தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளதுதான் முக்கிய திருப்பமாக இன்றைய தினம் பார்க்கப்படுகிறது.. அக்கட்சி தொண்டர்கள் மகிழ்ந்துள்ளனர். பஞ்சாப் முழுவதும் அக்கட்சியினர் கொண்டாட்டங்களில் ஆட்டம் போட்டு வருகின்றனர்.. பட்டாசுகள் வெடித்தும், டான்ஸ் ஆடியும் மகிழ்ச்சியுடன் அதை கொண்டாடி வருகின்றனர்

தாக்கங்கள்
காங்கிரசுக்கு இது மிகப்பெரிய அதிர்ச்சிதான்.. அவமானகரமான தோல்விதான்.. ஒரு தேசிய கட்சி, அதுவும் நூற்றாண்டு கண்ட கட்சி, இப்போது வந்த ஆம் ஆத்மியுடன் தோற்றுபோய் நிற்பது, பலவித தாக்கங்களை ஏற்படுத்தி வருகிறது.. முதலில் டெல்லி, அடுத்து பஞ்சாப் என தன்னுடைய எல்லையை விரித்து கொண்டே வருகிறது ஆம் ஆத்மி.. அதேசமயம், தங்களுடைய தோல்விகளுக்கான காரணங்கள் என்ன என்ற சுயபரிசோதனைக்கு தன்னை உள்ளாக்கி கொள்ள வேண்டிய கட்டாயமும் கதர் கட்சிக்கு இன்று ஏற்பட்டுள்ளது..!












Click it and Unblock the Notifications