எம்ஜிஆர் முதல் எஸ்டிஆர் வரை..‘இந்த’ 10 விஷயங்கள் தான்! தமிழ் சினிமாவை வாழ வைக்கும் தாரக மந்திரங்கள்!
சென்னை : ஹாலிவுட், பாலிவுட், டோலிவுட் என திரை உலகம் பரந்து விரிந்திருக்கும் இந்த சூழலில் தமிழ் திரை உலகுக்கு என்று தனித்துவம் எப்போதும் இருக்கிறது. உலக அளவில் பல தமிழ் திரைப்படங்கள் வெற்றி கொடி நாட்டியிருக்கின்றன. அப்படி தமிழ் திரையுலகம் வெற்றி பெற்றதற்கான சில முக்கிய காரணங்கள் உள்ளது. அதில் 10 முக்கிய தாரக மந்திரங்களை தற்போது பார்ப்போம்.
தமிழில் பல வருடங்களுக்கு முன்பே பல திரைப்படங்களில் நாயகர்கள் பலர் நடித்து வந்திருந்தாலும் தியாகராஜ பாகவதரை விட ஒவ்வொரு வீட்டின் செல்ல பிள்ளையாக வலம் வந்தவர் எம்ஜிஆர். அவரது பாதையில் ரஜினிகாந்த், விஜய், சிம்பு உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர்.
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பாணியை பின்பற்றி கமலஹாசன், அஜித், விக்ரம், சூர்யா என தமிழ் திரை உலகில் பல நாயகர்கள் இருக்கிறார்கள், ஆனால் இவர்கள் அனைவரையும் ஒரே நேர்கோட்டில் சேர்க்கும் பத்து விஷயங்கள் குறித்து பார்க்கலாம்.
இது தவிர இடைப்பட்ட காலங்களில் ஆக்ஷன் படங்களில் கலக்கிய விஜயகாந்த், சத்யராஜ், சரத்குமார், அர்ஜுன், போன்ற நாயகர்களின் படங்களிலும் இனி நீங்கள் பார்க்கப் போகும் 10 தகவல்களை இவர்களின் அனைத்து திரைப்படங்களிலும் இந்த ஏதாவது ஒன்றை நிச்சயமாக நீங்கள் பார்த்திருப்பீர்கள். சண்டைக் காட்சி, காமெடி, டூயட், அம்மா சென்டிமென்ட், கிளைமாக்ஸ் என அங்காவது இந்த விசயங்கள் ஆங்காங்கே தூவப்பட்டிருக்கும். அப்படி என்ன அந்த 10 தகவல்கள் என விரிவாகப் பார்க்கலாம்.

மருத்துவர்கள்
பொதுவாக தமிழ் சினிமாவில் எந்த படங்களை எடுத்துக் கொண்டாலும் எத்தனை ஆண்டுகளுக்கு முன்பாக வந்திருந்தாலும் ஏதாவது ஒரு காட்சியில் நிச்சயம் ஒரு மருத்துவர் வருவார். கண்ணாடியை கழட்டி விட்டு பத்து நிமிடங்களுக்கு முன்னால் கொண்டு வந்திருந்தால் இவரை காப்பாற்றி இருக்கலாம் அல்லது பத்து நிமிஷம் கழிச்சு வந்திருந்தால் இவர் பொழச்சி இருக்க மாட்டார் என சொல்வார் அது மட்டுமல்லாமல் இட்ஸ் எ மெடிக்கல் மிராக்கிள் எனவும் சொல்வார்கள்.

காவல்துறை
தமிழ் சினிமாவில் மருத்துவர்கள் எப்படியோ அதைவிட காவல்துறையினருக்கு மிக முக்கிய பங்கு உண்டு. ஏதாவது ஒரு காட்சியில் நிச்சயம் ஒரு போலீஸ் ஆவது வந்து விடுவார். அல்லது கதாநாயகன் படம் முழுவதும் போலீசாகவே இருப்பார். தங்கப்பதக்கம் சிவாஜி தொடங்கி ஒஸ்தி சிம்பு வரை காக்கிச்சட்டை அணியாத கதாநாயகர்கள் இல்லை. ஆனாலும் கிளைமாக்ஸ்-ன் கடைசி காட்சியில் தான் போலீஸார்கள் லேட்டாக வருவார்கள் அல்லது இது நம்ம டிபார்ட்மெண்டுக்கு கேவலம் என சொல்லும் போது அனைவரும் தலை குனிந்து நிற்பார்கள்.

சண்டைக் காட்சிகள்
இன்று ரஜினி விஜய் உள்ளிட்ட ரசிகர்கள் அதிக ரசிகர் பட்டாளம் இருப்பதற்கு காரணம் ஆக்சன் காட்சிகள். அந்த ஆக்சன் காட்சிகளுக்கு என்று சில முக்கிய விதிமுறைகள் உள்ளது. எத்தனை வில்லன்கள் வந்தாலும் ஹீரோ ஒருத்தர் அவர்களை அடித்து துவம்சம் செய்வார். ஆனால் ஹீரோவை வில்லன்கள் எங்கு அடித்தாலும் அவரது வாய் ஓரத்தில் தான் ரத்தம் வரும் அதை தொட்டு பார்த்தவுடன் ஹீரோவுக்கு வீரம் வந்து எதிரிகளைப் பந்தாடுவார். அல்லது ஹீரோவின் உறவினர்கள் யாரை தாக்கினாலும் அவர்களது வாய் ஓரத்தில் தான் ரத்தம் வரும்.

வில்லன்கள்
ஒரு ஹீரோவுக்கு கதை, கதாநாயகிகளை விட வில்லன்கள் மிக மிக முக்கியம் ஏனென்றால் வில்லன்கள் தான் ஹீரோ ஆவதற்கு முக்கிய காரணம். எம்ஜிஆருக்கு ஒரு நம்பியார் என்றால், ரஜினிக்கு ஒரு ரகுவரன் அந்த வகையில் வில்லன்களை துவம்சம் செய்தால் தான் அவர் ஹீரோ. ஆனால் ஹீரோயின்களை கடத்திச் செல்லும் வில்லனை அடித்து துவைத்த ஹீரோ பின் அதே ஹீரோயினை கிண்டல் செய்து மலையில் பாடல் பாடுவார்.

டைம் பாம்
ரஜினி, விஜய், அஜித், விஜயகாந்த், அர்ஜுன், சரத்குமார், சத்யராஜ் என ஆக்சன் ஹீரோக்கள் யாராக இருந்தாலும் தங்களது படங்களில் ஒரு முறையாவது வெடிகுண்டுகளை கடந்து செல்லாமல் இருந்திருக்க மாட்டார்கள். எத்தனை குண்டுகள் வந்தாலும் அதனை பிடித்து எதிரிடம் தூக்கி எறிவது. ஒரு மணி நேரம் இருந்தாலும் கூட சாவகாசமாக டூயட் பாடி சண்டை போட்டுவிட்டு கடைசி ஒரு நொடியில் பாமை செயலிழக்க வைப்பது என டைம் பாம் இந்த வரிசையில் முக்கிய இடம் கிடைக்கிறது.

தங்கச்சி
எந்த சென்மென்ட் வேண்டுமானாலும் வெற்றி பெறாமல் போகலாம். ஆனால் தமிழ் சினிமாவில் தங்கச்சி சென்டிமென்ட் தோல்வி அடைந்ததாக சரித்திரம் இல்லை. தங்கைக்கோர் கீதம், பாசமலர், திருப்பாச்சி என தங்கை சென்டிமென்டாலேயே வெற்றி பெற்ற படங்கள் ஏராளம் உள்ளது. ஆனால் பாவம் எந்த வில்லனாக இருந்தாலும் ஹீரோவின் தங்கைகளை தான் பதம் பார்ப்பார்கள். அடித்து துன்புறுத்துவார்கள் அல்லது கொன்று விடுவார்கள் ஆனால் தங்கச்சி சென்டிமென்ட் மட்டும் தமிழ் சினிமாவில் தோற்றதே கிடையாது.

அதிசய குணங்கள்
தமிழ் சினிமாவில் கதாநாயகர் ஆவதற்கு சில முக்கிய தகுதிகள் இருக்கிறது. ஆயிரம் வில்லன்கள் இருந்தாலும் உரையாட்டு ஆளாக அடித்து துவம்சம் செய்ய வேண்டும். உலகத்தில் இருக்கும் அத்தனை திறமைகளும் அவருக்கு மட்டும் தான் இருக்க வேண்டும் நடனமாடத் தெரிய வேண்டும் பாட தெரிய வேண்டும் தெரிகிறதோ இல்லையோ நடிக்கவாவது செய்ய வேண்டும். ஆயிரம் துப்பாக்கி குண்டுகள் வந்தாலும் ஒரு குண்டு கூட ஹீரோ மீது படாது. ஆனால் ஹீரோ ஒரே ஒரு குண்டை சுட்டாலும் அதில் ஐந்து வில்லன்கள் சாவார்கள் இந்த மாதிரியான சில முக்கிய திறமைகளை டைரக்டர்கள் உருவாக்கி வைத்திருக்கிறார்கள்.

காதல் சோகம்
காதலில் வெற்றி பெற்று டூயட் பாடும் நாயகர்களை விட காதலை தோல்வி அடைந்து அதனால் வருத்தப்படும் நாயகர்களுக்கு சற்று மதிப்பு அதிகம் வைதேகி காத்திருந்தாள் உள்ளிட்ட படங்கள் அதற்கு உதாரணம். அதே நேரத்தில் கதாநாயகியின் தந்தை கதாநாயகனை காதலிக்க கூடாது என்றவுடன், அவர் வேகமாக ஓடிப் போய் ஒரு கட்டிலில் குப்புற விழுவார். இது கிட்டத்தட்ட ஒரு 200 படங்களிலாவது பயன்படுத்தப்பட்டு இருக்கும். இல்லையேல் நான் வாழ்ந்தால் அவரோடு தான் வாழ்வேன் இல்லை உயிரோடவே இருக்க மாட்டேன் என மிரட்டி படார் என்று கதவை சாத்திக் கொள்வார்கள் இதுவும் ஒரு நூறு படங்களில் பயன்படுத்தப்பட்டிருக்கும்.

ரகசியம், டைரி
கடந்த கால க்ரைம் படங்களில் ஏதாவது ஒரு பொருளை மையப்படுத்தியே கதை இருக்கும் ஆரம்பத்தில் ஒருவர் ரகசியத்தை சொல்லிவிட்டால் அந்த ரகசியம் கடைசி வரை என்னவென்று யாருக்கும் தெரியாது. கிளைமாக்ஸில் தான் தெரிய வரும். அல்லது டைரி, பென்டிரைவ், சிலை, தகடு, பத்திரம் உள்ளிட்ட ஏதாவது ஒரு பொருளை மையப்படுத்திய படம் இருக்கும். பல இடங்களிலும் தேடி கிடைக்காத நிலையில் கிளைமாக்ஸ்-ல் அதை கண்டுபிடிக்கும் ஹீரோ வெற்றி பெறுவார் அல்லது காவல்துறையில் ஒப்படைத்து வில்லனை மாட்டி விடுவார்.

கிளைமேக்ஸ்
பொதுவாக தமிழ் சினிமா கிளைமாக்ஸ் சுபம் என்று முடியும் வகையில் தான் இருக்கும் ஒரு சில படங்கள் மட்டும் இதற்கு விதிவிலக்கு கிளைமாக்ஸ் பொறுத்தவரை குடும்பங்கள் ஒன்று சேர்ந்து விடும் மரண படுக்கையில் இருப்பவர்கள் பிழைத்து விடுவார்கள் அல்லது நன்றாக இருப்பவர்கள் இறந்து விடுவார்கள் ஹீரோவை காப்பாற்ற ஹீரோயினோ அல்லது அவர் நெருங்கிய உறவினரோ துப்பாக்கியில் சுடும் போது கத்தியால் குத்தும்போது குறுக்கே வந்து விடுவார்கள் . அவ்வாறு இறப்பவர்கள் கண்களைத் திறந்து கொண்டே தான் மரணம் அடைவார்கள். அவர்களின் கண்களை ஹீரோ தான் மூடி விடுவார்.
இது மட்டுமல்லாமல் இன்னும் பல தகவல்களும் இருக்கிறது. அப்படி உங்களுக்கு தெரிந்த தகவல்களை கமெண்ட் செய்யவும்.












Click it and Unblock the Notifications