போட்டி தேர்வுக்கு ரெடியாகுறீங்களா.. அப்போ இதை நோட் பண்ணுங்க, நோட் பண்ணுங்க.. ரீவைண்ட் 2022
சென்னை: 2022 ஆம் ஆண்டின் முக்கிய நிகழ்வுகளை அனைவரும் தெரிந்து கொள்ளும் வகையில் அனைத்து முக்கிய செய்திகளும் தொகுத்து கொடுக்கப்பட்டுள்ளன. முதல் பகுதியாக ஜனவரி முதல் மார்ச் வரையிலான நிகழ்வுகள் இங்கே இடம் பெற்றுள்ளன.
2022 ஆம் ஆண்டு முடிந்து 2023 ஆம் ஆண்டு பிறக்க இன்னும் இரண்டு வாரங்களுக்கும் குறைவான நாட்களே உள்ளன. புத்தாண்டை வரவேற்க தயராக இருக்கும் நாம்.. 2022 ஆம் ஆண்டில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளையும் ஒருமுறை ரிவைண்ட் செய்து தெரிந்து கொள்ளும் வகையில் நடப்பு ஆண்டின் முக்கிய நிகழ்வுகள் கொடுக்கப்பட்டுள்ளன. ஜனவரி முதல் மார்ச் வரையிலான நிகழ்வுகள் இதில் கொடுக்கப்பட்டுள்ளன. போட்டித்தேர்வுகளுக்கு தயராகும் தேர்வர்களுக்கும் பயனுள்ள வகையில் தொகுக்கப்பட்டு கொடுக்கப்பட்டுள்ளன.
2022 ஆம் ஆண்டின் முக்கிய நிகழ்வுகளை அனைவரும் தெரிந்து கொள்ளும் வகையில் அனைத்து முக்கிய செய்திகளும் தொகுத்து கொடுக்கப்பட்டுள்ளன. முதல் பகுதியாக ஜனவரி முதல் மார்ச் வரையிலான நிகழ்வுகள் இங்கே இடம் பெற்றுள்ளன.

ஜன. 1
*ஜம்மு காஷ்மீர் வைஷ்ணதேவி கோவிலில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் சிக்கி 16 பக்தர்கள் உயிரிழந்தனர்.
*தமிழகத்தில் சென்னை காவல் ஆணையகரம் 3 ஆக பிரிக்கப்பட்டு தாம்பரம், ஆவடி காவல் ஆணையகரங்கள் உருவக்கப்பட்டன. அதற்கான அலுவலகத்தை முதல்வர் மு.க ஸ்டாலின் திறந்து வைத்தார்.
* பி.எம் கிஷான் சம்மான் நிதி திட்டத்தின் கீழ் 10.09 கோடி விவசாயிகளுக்கு 10-வது தவணையாக ரூ.20,946- ரூபாய் நிதியை பிரதமர் மோடி விடுவித்தார்.
* இந்தியாவிலேயே முதன் முறையாக கேரள உயர் நீதிமன்றம் காகித பயன்பாடு இல்லாத நீதிமன்றமாக மாறியது.

ஜன. 03
* இந்தியாவில் 15 வயது முதல் 18 வயது சிறார்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கியது
* திருவான்மியூர் மெட்ரோ ரயில் நிலையத்தில் 1.32 லட்சம் கொள்ளை போனதாக ரயில்வே ஊழியர் நாடகம்...மறுநாளே போலீசார் விசாரணை நடத்தி ரயில்வே ஊழியரையும் அவரது மனைவியையும் கைது செய்தனர்.
* டெஸ்லா நிறுவனத்தின் ஆட்டோ பைலட் குழுவுக்கு முதல் முறையாக அசோக் எல்லுசாமி என்ற இந்தியர் தேர்வு செய்யப்பட்டார்.
ஜன: 04
* இந்த ஆண்டுக்கான (2022) முதல் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் ஜனவரி 4 ஆம் தேதி தொடங்கியது. கொரோனா பரவல் காரணமாக சென்னை கலைவாணர் அரங்கில் இந்தக் கூட்டத்தொடர் நடைபெற்றது.
* கொரோனா தடுப்பூசி போடாததால் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டித்தொடரில் பங்கேற்க முன்னணி டென்னிஸ் வீரர் ஜோகோவிச்சிற்கு ஆஸ்திரேலிய அரசு விசா மறுத்தது.
ஜன.05
* பிரதமர் மோடி பஞ்சாப் சென்ற போது பாதுகாப்பில் குளறுபடி ஏற்பட்டதாக பெரும் சர்ச்சை வெடித்தது. இது தொடர்பாக தனது பயணத்தை ரத்து செய்து விட்டு பிரதமர் மோடி டெல்லி திரும்பினார். பாதுகாப்பு குளறுபடி தொடர்பாக மாநில அரசிடம் மத்திய அரசு விளக்கம் கேட்டது
ஜன: 06
* தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரிப்பால் இரவு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது
* பல்கலைக்கழகங்களில் துணை வேந்தர்களை தமிழக அரசே நியமிக்க சட்ட திருத்தம் கொண்டு வரப்படும் என்று முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவித்தார்.
* தமிழக சட்டப்பேரவை வரலாற்றில் முதல் தடவையாக கேள்வி நேரம் நேரலையில் ஒளிபரப்பானது.
ஜனவரி 07
* செங்கல்பட்டு அருகே போலீசார் மீது நாட்டு வெடிகுண்டுகள் வீசி தாக்குதல் நடத்த முயற்சித்த இரட்டைக் கொலையில் தொடர்புடைய நபர்கள் மீது போலீசார் என்கவுண்டர் நடத்தினர். இதில் 2 ரவுடிகள் உயிரிழந்தனர். 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
* மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கையில் ஓபிசிக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் அரசாணை செல்லும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
*தமிழகத்தில் 6 மாநகராட்சிகள், 2 காவல் ஆணையரகங்களை தொடங்கியது உள்பட 13 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன.
*மகாஹாளி ஆற்றின் குறுக்கே தார்கலாவில் பாலம் கட்ட இந்தியா - நேபாளம் இடையே கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் கொடுத்தது.
ஜன; 08
உத்தர பிரதேச மாநிலம், பஞ்சாப், உத்தரகாண்ட், மணிப்பூர், கோவா ஆகிய மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்தது. உத்தர பிரதேசத்தில் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. மணிப்பூரில் இரண்டு கட்டங்களாகவும் ஏனைய மாநிலங்களில் ஒரே கட்டமாகவும் தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
* நீட் தேர்வை ரத்து செய்வதற்கான சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ள அனைத்துக் கட்சி கூட்டத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பாஜக இந்தக் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தது. நீட் விலக்கு கோரும் மசோதாவுக்கு தமிழக ஆளுநர் ஒப்புதல் அளித்து ஜனாதிபதிக்கு அனுப்பாத நிலையில், இந்தக் கூட்டம் நடைபெற்றது.
ஜன: 09
* கொரோனா பரவல் அதிகரிப்பால் ஞாயிற்றுக்கிழமையான இன்று தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால், சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.
* கொரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக சுகாதாரத்துறை உயர் அதிகாரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.
* சீக்கிய குருகோவிந்த் சிங் மகன்களின் நினைவாக டிச.26 ஆம் தேதி வீர் பால் தினம் கொண்டாடப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்தார்.
ஜன: 10
* தமிழகத்தில் முன்கள பணியாளர்கள், 60-வயதைக் கடந்தவர்களுக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடும் திட்டத்தை முதல்வர் மு.க ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.
* தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போட்டு இருக்க வேண்டும் என்பன போன்ற கட்டுப்பாடுகளுடன் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த தமிழக அரசு அனுமதி வழங்கியது.
* டெல்டா- ஒமைக்ரான் இணைந்து உருவான புதிய வைரஸ் 'டெல்டாகிரான்' சைப்ரஸ் நாட்டில் கண்டறியப்பட்டது.
*அமெரிக்க வரலாற்றில் முதல் முறையாக கருப்பின பெண் எழுத்தாளர் மாயா ஏஞ்சலோ உருவம் பொறித்த நாணயம் வெளியிடப்பட்டது
* சென்னையை சேர்ந்த 14- வயது ஆன பரத் சுப்ரமணியம் இந்தியாவின் 73-வது கிராண்ட் மாஸ்டர் அந்தஸ்து பெற்றார்.
ஜன: 11
* முன்கள பணியாளர் என்ற முறையில் முதல்வர் மு.க ஸ்டாலின் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தினார்.
* போர்க்கப்பல்களை தாக்க்கி அழிக்கும் மேம்படுத்தப்பட்ட பிரம்மோஸ் ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடைபெற்றது.
* உலகிலேயே முதல் முறையாக பன்றியின் இதயத்தை மனிதனுக்கு பொருத்தி அமெரிக்க மருத்துவர்கள் மருத்துவ உலகில் புதிய சாதனையை நிகழ்த்தினர்.
ஜன:12
* தமிழகத்தில் புதிதாக 11 மருத்துவக் கல்லூரிகளை பிரதமர் மோடி காணொலி வாயிலாக திறந்து வைத்தார்.
*இஸ்ரோ புதிய தலைவராக விஞ்ஞானி சோம்நாத் நியமனம் செய்யப்பட்டார்.

ஜன: 15
* 2022 ஆம் ஆண்டுக்கான அய்யன் திருவள்ளூவர் விருது பெங்களூருவில் வசிக்கும் மு. மீனாட்சி சுந்தரத்துக்கும் 2021 ஆம் ஆண்டுக்கான பெருந்ததலைவர் காமராஜர் விருது குமரி அனந்தனுக்கும் வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.
* 2022-ல் இஸ்ரோ சார்பில் 13 ஆய்வு திட்டங்களை செயல்படுத்த திட்டமிடப்பட்டது. இவற்றில் சந்திராயன் -3, ஆதித்யா எல் -1 உள்ளிட்ட விண்கல பரிசோதனை முக்கியமானவை.
* முல்லை பெரியாறு அணையை கட்டிய கர்னல் பென்னிகுயிக் சிலை இங்கிலாந்தில் உள்ள கேம்பர்ளி நகரில் நிறுவப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.
* இந்திய கிரிக்கெட் அணியின் டெஸ்ட் கேப்டன் பொறுப்பில் இருந்து விராட் கோலி விலகுவதாக அறிவித்தார்.
* இந்தியாவில் ஆண்டு தோறும் இனி ஜனவரி 16 ஆம் தேதி தேசிய ஸ்டார்ட் அப் தினமாக கொண்டாடப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்தார்.
ஜன: 16
* இந்தியாவில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கி இன்றுடன் ஓராண்டு நிறைவு ஆனது. ஒராண்டில் மட்டும் 157 கோடி டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளதாகவும் இதற்காக விஞ்ஞானிகள், சுகாதார ஊழியர்களுக்கு பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்வதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.
ஜன: 17
* தமிழகத்தில் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இன்று நடைபெற்றது. ஜல்லிக்கட்டில் காளையை அடக்கிய வீரர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
* குடியரசு தின விழா அணி வகுப்பில் தமிழக அரசின் ஊர்திக்கு மத்திய அரசு அனுமதி மறுக்கப்பட்டது பெரும் விவாதப்பொருளானது
ஜன: 18
* கொரோனா பரவல் காரணமாக நடப்பு ஆண்டு குடியரசு தின விழாவில் வெளிநாட்டு தலைவர்கள் பங்கேற்கவில்லை என்று மத்திய அரசு தெரிவித்தது.
* உலகின் மிக வயதான நபராக கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த ஸ்பெயின் நாட்டை சேர்ந்த சாடர்னினோ டிலாப்யுண்டே காலமானார். தன்னுடைய 112-வது வயதில் காலமானார்.
ஜன: 19
* டெல்லியில் நடைபெறும் குடியரசு தின அணி வகுப்பில் பங்கேற்க நிராகரிக்கப்பட்ட தமிழக ஊர்திகள், சென்னை குடியரசு தின விழாவில் அணி வகுக்கும் என்று தமிழக அரசு அறிவித்தது.
ஜன: 20
* இளநிலை முதுநிலை மருத்துவ படிப்புகளில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கான (ஒபிசி) 27 சதவித இட ஒதுக்கீடு செல்லும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
* இந்தியா - ரஷ்யாவும் இணைந்து உருவாக்கியுள்ள அதி நவீன பிரம்மோஸ் ஏவுகணை சோதனை வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. கடலில் உள்ள இலக்குகளை தாக்கும் திறன் கொண்டது இந்த ஏவுகணை
ஜன: 21
* ஆந்திராவில் அரசு ஊழியர்களின் ஓய்வு வயது 62 ஆக நிர்ணயம் செய்து அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
* இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தானில் இருந்து செயல்படும் 35 யூடியூப் சேனல்களை மத்திய அரசு முடக்கியது
*டெல்லியில் தேசிய போர் நினைவுச் சின்னத்தில் உள்ள அணையா விளக்குடன் அமர் ஜவான் ஜோதி முப்படைகளின் மரியாதையுடன் இணைக்கப்பட்டது.
* உயில் எழுதாவிட்டாலும் தந்தையின் சொத்துக்களை பெற மகள்களுக்கு வாரிசு அடிப்படையில் முழு உரிமை உள்ளது என மேல் முறையீட்டு வழக்கு ஒன்றில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
* டென்னிஸ் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக சானியா மிர்சா அறிவித்தார்.
ஜன: 23
*இந்தியா கேட் பகுதியில் நேதாஜியின் மின் ஒளி சிலையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
* பொதுத்துறை பணியிடங்கள் குரூப் 4, 2 தேர்வுகளுடன் சேர்க்கப்படுவதாக தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்தது.
* சையது மோடி பாட்மின்டன் தொடரில் பி.வி சிந்து சாம்பியன் பட்டம் வென்றார்.
ஜன: 24
* தமிழகத்தின் விருதுநகரை சேர்ந்த 8 வயது சிறுமி விஷாலினிக்கு ராஷ்ட்ரிய பால புரஸ்கர் விருதை பிரதமர் மோடி வழங்கினார். புத்தாக்கம், சமூக சேவை, கல்வி, விளையாட்டு, கலை, கலாசாரம் வீர உள்லிட பிரிவுகளின் கீழ் சிறப்பான சாதனை புரிந்த 15-வயதுக்கு உட்பட்ட சிறார்களுக்கு இந்த விருதுகள் அறிவிக்கப்பட்டன.
ஜன: 25
* குடியரசு தினத்தை முன்னிட்டு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டன. இதில், மறைந்த முப்படை தளபதி பிபின் ராவத், உள்பட 128 பேருக்கு பத்ம விருதுகளை மத்திய அரசு அறிவித்தது. சவுகார் ஜானகி, கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை உள்பட தமிழகத்தை சேர்ந்த 7 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டன.
* சிறப்பாக பணி புரிந்த தமிழக காவல்துறை அதிகாரிகள் 20 பேருக்கு ஜனாதிபதி விருது வழங்கப்பட்டுள்ளது.
ஜன: 26
* இந்தியாவின் குடியரசு தினம் நாடு முழுவதும் கோலகலமாக கொண்டாடப்பட்டது. டெல்லி செங்கோட்டையில் அப்போதைய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தும் தமிழகத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவியும் மூவர்ணக் கொடியை ஏற்றினர்.
* தமிழ் வளர்ச்சிக்கு பங்காற்றியதற்காக நாஞ்சில் சம்பத்துக்கு அண்ணா விருதும், பட்டிமன்ற பேச்சாளர் பாரதி பாஸ்கருக்கு கம்பர் விருதும், கிருஷ்ணகுமாருக்கு மகாகவி பாரதியார் விருதும் வழங்கப்பட்டது. மறைமலை அடிகள் விருது சுகி சிவத்திற்கும் இளங்கோவடிகள் விருது நெல்லை கண்ணனுக்கும் அயோத்தி தாச பண்டிதர் விருது ஞான அலாய்சியஸுக்கும் வழங்கப்பட்டது.
ஜன: 27
* பொதுத்துறை நிறுவனமாக இருந்த ஏர் இந்தியா டாடா குழுமத்திடம் ஒப்படைக்கப்பட்டது.
ஜன: 28
* கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் போடப்பட்டு இருந்த இரவு ஊரடங்கு ரத்து செய்யப்பட்டது.
* சீனாவில் புதிய வகை நியோகோவ் வைரஸ் கண்டறியப்பட்டது. இந்த வைரஸ் மனிதர்களுக்கு பரவக்கூடும் என விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்தனர்.
* பிலிப்பைன்ஸ் ராணுவம் இந்தியாவின் பிரம்மோஸ் ஏவுகணையை வாங்குவதற்கு ஒப்பந்தம் மேற்கொண்டது. ரூ. 2812 கோடிக்கு இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.
ஜன: 29
* தெற்கு ரயில்வேயின் தலைமை அலுவலக கட்டிடத்தின் நூற்றாண்டு விழாவை ஒட்டி சிறப்பு அஞ்சல் உறை வெளியிடப்பட்டது.
பிப்: 1
* கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு பள்ளிகள் மீண்டும் இன்று முதல் நேரடி வகுப்புகள் திறக்கப்பட்டன
* மத்திய பட்ஜெட்டை பாராளுமன்றத்தில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். புதிய டிஜிட்டல் கரன்சி அறிமுகம் செய்யப்படும் என்ற முக்கியமான அறிவிப்பும் இந்த பட்ஜெட்டில் வெளியானது.
பிப்: 2
* 2021 ஆம் ஆண்டின் சாகித்ய அகாடமி யுவ புரஸ்கர் விருது கார்த்திக் பாலசுப்ரமணியனுக்கு அறிவிக்கப்பட்டது. நட்சத்திரவாசிகளின் நாவலுக்காக இந்த விருது வழங்கப்பட்டது.
பிப்:03
* நீட் விலக்குக் கோரி தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பினார்
பிப் 04
* அமெரிக்க படைகள் நெருங்கியதால் ஐஎஸ் பயங்கரவாத இயக்கத்தலைவர் தற்கொலை செய்து கொண்டதாக அமெரிக்க ராணுவ தலைமையகம் அறிவித்தது.
* சீனாவின் தலைநகர் பெய்ஜிங்கில் குளிர் கால ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கின. இந்த ஒலிம்பிக்கில் 91 நாடுகளை சேர்ந்த 2,871 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.
பிப் 05
* தமிழகத்துக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு கோரும் சட்ட மசோதாவை சட்டப்பேரவையில் மீண்டும் நிறைவேற்ற அனைத்துக்கட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

* ஐதரபாத்தில் 216 அடி உயரத்தில் அமைந்துள்ள ராமானுஜர் சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
பிப்: 06
* இந்தியாவின் நைட்டிங்கேல் என்று அழைக்கப்படும் லதா மங்கேஷ்கர் காலமானார். பத்மபூஷன், பத்ம விபூஷன், பாரத ரத்னா, தாதா சாகேப் பால்கே என பல விருதுகளை பெற்றுள்ளார்.
* பெங்களூருவில் ஆசியாவின் மிகப்பெரிய அனிமேஷன் மையம் திறக்கப்பட்டது.
பிப்: 07
* நான்காம் கட்ட இந்திரதனுஷ் தடுப்பூசி திட்டத்தை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தொடங்கி வைத்தார்.
பிப்: 08
* நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் மசோதவை நிறைவேற்றுவதற்காக தமிழக சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் நீட் மசோதா ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
* வங்கிக் கணக்கில் மோசடி வாடிக்கையாளர் பணத்தை மீட்க 155260 ஹெல்ப் லைனை சைபர் கிரைம் போலீஸ் அறிவித்தது.
*ஆசிய பணக்காரர்கள் பட்டியலில் கவுதம் அதானி முதலிடம் பிடித்தார். முதலிடத்தில் இருந்த முகேஷ் அம்பானி 2-வது இடத்திற்கு தள்ளப்பட்டார்.
பிப்: 09
* ஹிஜாப் விவகாரத்ர்தில் பள்ளிகளில் சீருடை மட்டுமே அணிய வேண்டும் என்ற கர்நாடக அரசின் உத்தரவுக்கு அம்மாநில உயர் நீதிமன்றம் தடைவிதிக்க மறுத்துவிட்டது.
பிப்: 10
* உத்தர பிரதேசத்தில் முதல் கட்ட தேர்தல் நடைபெற்றது. 58 தொகுதிகளுக்கு முதல் கட்ட தேர்தல் நடைபெற்றது.
* சென்னை தியாயராயநகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. பெட்ரோல் குண்டு வீசிய ரவுடி கருக்கா வினோத் என்பவரை போலீசார் கைது செய்தனர்.
பிப் 11
* கதி சக்தி திட்டத்தின் கீழ் சென்னை துறைமுகத்தில் 7 வளர்ச்சி திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்று துறைமுக பொறுப்பு கழகத்தலைவர் தெரிவித்தார்.
பிப்: 14
* பிஎஸ் எல்.விசி 52 ரக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. 3 செயற்கை கோள்களும் திட்டம்ட்டபடி சுற்று வட்டப்பாதையில் நிலை நிறுத்தப்பட்டன.
* நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் உள்ளதாக 54 சீன செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்தது.
* கோவா சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் 19.61 சதவீத வாக்குகள் பதிவானது.
பிப்: 15
* கால்நடைத்தீவினம் ஊழல் தொடர்பான மேலும் ஒரு வழக்கில் லாலு பிரசாத் யாதவ் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
ரயில்வே துறை சார்பில் மிகப்பெரிய மல்யுத்த அகடமியை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது.
பிப்: 17
உத்தர பிரதேசத்தில் திருமண விழாவின் போது கிணற்றில் போடப்பட்டு இருந்த இரும்பு வலை உடைந்ததில் அதில் அமர்ந்து இருந்த 13 பேர் பலியாகினர்.
பிப்: 18
* தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பாக அமைக்கப்பட்ட அருணா ஜெகதீசன் ஆணையத்தின் விசாரணை நிறைவு பெற்றது.
* 2008 ஆம் ஆண்டு அகமதாபாத்தில் நடந்த குண்டு வெடிப்பு வழக்கில் தொடர்புடைய 38 தீவிரவாதிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. 11 பேருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
* கேரளாவின் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள அய்மனம் கிராமம் உலகின் தலைசிறந்த 30 சுற்றுலாத்தளங்கள் பட்டியலில் இடம் பிடித்துள்ளது. பிரபல வெளிநாட்டு இதழான காண்டே நாஸ்ட் இந்த அங்கீகாரத்தை கொடுத்தது.
பிப்: 19
* தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.
பிப் 20:
* உக்ரைனில் வசிக்கும் இந்திய மாணவர்கள் வெளியேற வேண்டும் என்று இந்திய தூதரகம் அறிவுறுத்தல் விடுத்தது.
* 9 வயதில் யோகா மாஸ்டர் ஆகி ரேயான்ஷ் சுரானி என்ற சிறுவன் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தான்.
* பஞ்சாப் சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இதில் 70 சதவீத வாக்குகள் பதிவானது.
* சீன தலைநகர் பெய்ஜிங்கில் நடைபெற்ற குளிர் கால ஒலிம்பிக் போட்டிகள் நிறைவடந்தன. 16 தங்கம், 8 வெள்ளி, 13 வெண்கலம் என 37 பதக்கங்களுடன் நார்வே பதக்க பட்டியலில் முதலிடம் பிடித்தது.
பிப்: 21
* திமுகவை சேர்ந்த நபரை அரை நிர்வாணமாக அழைத்துச் சென்ற விவகாரத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் டி ஜெயக்குமார் கைது செய்யப்பட்டார்.
* எர்திங்ஸ் மாஸ்டர்ஸ் செஸ் போட்டியில் தமிழகத்தை சேர்ந்த 16-வயது வீரர் பிரக்ஞானந்தா, கார்சலனை தோற்கடித்து சாதனை படைத்தார்.
பிப்: 22
* உள்ளாட்சி தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்றது.

பிப்: 23
* உலக நாடுகளுக்கு குறைந்த விலையில் கொரோனா தடுப்பூசி வழங்கும் இந்திய நிறுவனங்களுக்கு பில்கேட்ஸ் பாராட்டு தெரிவித்தார்.
பிப்: 24
* உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்தது. ரஷ்யாவுக்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. ரஷ்யாவுக்கு எதிராக ஜி 7 நாடுகள் பொருளாதார தடையும் விதித்தன.
* நாசாவின் செயற்கைகோள்களால் கண்டறிய முடியாத சூரிய புரோட்டான் நிகழ்வுக்ளை சந்திராயன் 2 விண்கலம் கண்டறிந்ததாக இஸ்ரோ தெரிவித்தது.
*திருப்பதி உதயமான நாள் இன்று கொண்டாடப்பட்டது.
பிப்: 25:
உக்ரைன் மீது போர் தொடுத்த ரஷ்யாவுக்கு எதிராக ஐநா சபையின் பாதுகாப்பு கவுன்சிலில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி ரஷ்யா தோற்கடித்தது. இந்த தீர்மானத்தின் மீது இந்தியா வாக்களிக்கவில்லை.
பிப்: 26
* மன்னார் வளைகுடா, பாக் ஜலசந்தி கடலில் இந்தியாவின் முதல் கடல் பசு பாதுகாப்பகம் ரூ.5 கோடி செலவில் அமைக்க தமிழக அரசு அனுமதி அளித்தது.
* எல்.ஐ.சியின் பங்குகளை விற்கும் நோக்கத்தில் 20 சதவீத அன்னிய நேரடிய முதலீட்டுக்கு மத்திய அமைச்சரவை அனுமதி வழங்கியது.
பிப்: 28
* முதல்வர் மு.க ஸ்டாலின் எழுதிய 'உங்களில் ஒருவன்' நூலை ராகுல் காந்தி வெளியிட்டார்.
* செபியின் முதல் பெண் தலைவராக மாதாபி புரி நியமனம் செய்யப்பட்டர்.
மார்ச்: 01
* உக்ரைனின் கார்கிவ் நடந்த தாக்குதலில் இந்திய மாணவர் நவீன் உயிரிழந்தார்.
* அனைத்து மாணவர்கள், இளைஞர்களையும் தகுதி மிக்கவர்களாக மாற்றும் 'நான் முதல்வன்' முதல்வர் மு.க ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
மார்ச்: 02
*அரசுப் பணி நியமனங்களில் மூன்றாம் பாலினத்தவருக்கு தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மார்ச்: 03
*வங்கக் கடலில் 28 ஆண்டுகளுக்குப் பிறகு மார்ச் மாதத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியது.
* தமிழக மாணவர்கள், புலம் பெயர்ந்தவர்களை மீட்க உக்ரைனின் அண்டை நாடுகளுக்கு செல்ல தமிழக ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் அடங்கிய குழுவை நியமித்து முதல்வர் மு.க ஸ்டாலின் உத்தரவிட்டார்.
* அமராவதிதான் ஆந்திராவின் தலைநகரம் என்று நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்தது.
மார்ச்: 04
சென்னை மாநகராட்சி மேயராக பிரியா பதவியேற்றார்.

* ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழல்பந்து வீச்சாளர் ஷேன் வார்னே மரணம் அடைந்தார்.
மார்ச்: 05
* சேலம் கல்லூரி மாணவர் கோகுல் ராஜ் கொலை வழக்கில் யுவராஜ் உள்பட 10 பேர் குற்றவாளிகள் என மதுரை நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
* மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் அமன் லேகி தன்னுடைய பதவியை ராஜினாமா செய்து சட்டத்துறை அமைச்சருக்கு கடிதம் அனுப்பினார்.
* மணிப்பூரில் 60 தொகுதிகளுக்கு ந் இரு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இதில் 86.01 சதவீத வாக்குகள் பதிவானது.
மார்ச்: 7
தூத்துக்குடியில் ஆயிரம் கோடி மதிப்பீட்டில் 1,500 ஏக்கரில் பர்னிச்சர் பூங்காவிற்கு முதல்வர் மு.க ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
*உக்ரைனில் சிக்கிய இந்தியர்களை மீட்பது தொடர்பாக உக்ரைன் மற்றும் ரஷ்ய அதிபர்களுடன் பிரதமர் மோடி பேசினார்.
*சர்வதேச மகளிர் தினத்தை ஒட்டி மத்திய அரசு வழங்கிய 2020 ஆம் ஆண்டுக்கான மகளிர் சக்தி விருது நீலகிரியை சேர்ந்த கைவினைக் கலைஞர்கள் ஜெயமுத்து, தேஜம்மாளுக்கு வழங்கப்பட்டது
மார்ச் 08
* கோகுல்ராஜ் கொலை வழக்கு குற்றவாளிகளான யுவராஜ் உள்பட 10 பேருக்கு ஆயுள் முழுக்க சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
* 2022 ஆம் ஆண்டுக்கான அவ்வையார் விருது கிரிஜா குமார்பாபவுக்கு வழங்கப்பட்டது. பெண்கள், குழந்தைகளுக்காக பணியாற்றியதற்காக இந்த விருது வழங்கப்பட்டது.
* தமிழக நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய வீடுகள் இனி குடும்பத் தலைவிகளின் பெயரில் வழங்கப்படும் என்று முதல்வர் அறிவித்தார்.
மார்ச்: 09
* நிலவின் மேற்பரப்பில் ஆர்கான் -40 வாயு இருப்பதை சந்திராயன் 2 விண்கலம் கண்டறிந்துள்ளதாக இஸ்ரோ தெரிவித்தது.
* முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 31 ஆண்டுகளாக சிறையில் இருந்த பேரறிவாளனுக்கு ஜாமின் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
மார்ச்: 10
* உத்தர பிரதேசம், உத்தரகாண்ட், கோவால், மணிப்பூர் மாநிலங்களுக்கு நடந்த சட்டமன்ற தேர்தலில் பாஜக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. பஞ்சாபில் ஆம் ஆத்மி ஆட்சியை பிடித்தது.
மார்ச்: 11
*நில அபகரிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது.
*இந்தியாவில் உருவாக்கப்பட்ட விமானிகள் பயிற்சி விமானமான ஹன்சா - என்.ஜி.இயின் கடல் மட்ட்ட சோதனை வெற்றிகரமாக நடந்தது.
* இந்தியாவில் முதல் முறையகா முழுவதும் பெண்களால் நிர்வகிக்கப்படும் தொழில் பூங்கா ஐதராபாத்தில் தொடங்கப்பட்டது.
மார்ச்: 12
* ராஜஸ்தானில் நிலை நிறுத்தப்பட்டு இருந்த இந்திய ஏவுகணை பாகிஸ்தானுக்குள் தவறுதலாக பாய்ந்தது. இது தொடர்பாக உயர்நிலை விசாரணைக்கு இந்திய உத்தரவிட்டது.
* பி.எப் வட்டி விகிதம் 8.1 சதவிகிதமாக குறைக்கப்பட்டது.
மார்ச்: 15
* முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணிக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர்.
* ஆசிய இளையோர் ஜூனியர் குத்துச்சண்டையில் சென்னையை சேர்ந்த விஷ்வநாத் சுரேஷ் தங்க பதக்கம் வென்றார். இந்தியா 39 பதக்கங்களை வென்றது. ஜோர்டானின் அம்மான் நகரில் இந்த போட்டிகள் நடைபெற்றது.
மார்ச்: 16
* இந்தியாவில் 12 வயது முதல் 14 வயதுக்கு உள்பட்ட சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி இன்று தொடங்கியது.
* சூப்பர் ஸ்பெஷிலிட்டி மருத்துவ படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கியது செல்லும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
* பஞ்சாப் மாநில முதல்வராக பகவந்த் மான் பதவியேற்றார்.
மார்ச்: 17
* கடும் பொருளதார நெருக்கடியில் சிக்கி தவித்த இலங்கைக்கு 7,500 கோடி கடன் உதவியை இந்தியா வழங்கியது
*ராணுவ ஆராய்ச்சிக்காக 45 நாட்களில் 7 மாடி கட்டிடம் கட்டி டி.ஆர்.டி ஓ சாதனை படைத்தது. பெங்களூருவில் இந்தக் கட்டிடம் உள்ளது.
2021 அம் ஆண்டுக்கான உலக அழகியாக போலந்து நாட்டின் கரோலினா பிலாவ்ஸ்கா தேர்வானார்.
மார்ச் 18
*தமிழத்தில் புதிய வரிகள், கட்டண உயர்வு இல்லாத பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது
மார்ச் 19:
தமிழகத்தில் 2-வது ஆண்டாக வேளாண் துறைக்கென தனியாக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.
பிரதமர் மோடியுடன் ஜப்பான் பிரதமர் சந்திப்பு: இந்தியாவில் 3.20 லட்சம் கோடி முதலீடு செய்வதாக அறிவிப்பு
மார்ச்: 21
மணிப்பூர் முதல்வராக வீரேன் சிங் இரண்டாவது முறையாக பொறுப்பேற்றார்.

சீனாவில் விமானம் விபத்து:123 பயணிகள் உள்பட 132 பேர் உயிரிழப்பு
மேகதாது அணைக்கு நிதி ஒதுக்கிய கர்நாடக அரசை கண்டித்து தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்
மார்ச் 22
* ஜெயலலிதா மரணத்தில் எந்த சந்தேகமும் தனக்கு தனிப்பட்ட முறையில் இல்லை என்று ஆறுமுகசாமி விசாரனை ஆணையத்தில் ஓபிஎஸ் தெரிவித்தார்.
* மத்திய பல்கலைக்கழகங்களில் வரும் கல்வியாண்டு முதல் இளநிலை படிப்புகளில் சேர நுழைவுத்தேர்வு கட்டாயம் என்றும் பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை இல்லை எனவும் யுஜிசி அறிவித்தது.
மார்ச்; 23
* இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. இதனால் பல இடங்களில் மக்கள் போராட்டம் வெடித்தது
* உத்தரகாண்ட் முதல்வராக புஷ்கர் சிங் தாயி பதவியேற்றார்.
மார்ச்: 24
* தமிழகத்திற்கு அதிக முதலீடுகள் ஈர்க்கும் நோக்கத்தில் முதல்வர் மு.க ஸ்டாலின் துபாய் சென்றார்.
மார்ச் 25
* உத்தர பிரதேச முதல்வராக 2-வது முறையாக யோகி ஆதித்யநாத் பதவியேற்றார்.
மார்ச்: 26
* துபாயில் முதல்வர் மு.க ஸ்டாலின் முன்னிலையில் ரூ. 2,600 கோடி முதலீட்டுக்கு ஒப்பந்தம் போடப்பட்டது. இதன் மூலம் 9,700 பேருக்கு வேலை கிடைக்கும் என தெரிவிக்கப்பட்ட்டது.
* வேலூரில் வீட்டில் சார்ஜ் போட்டு இருந்த எலக்ட்ரிக் பைக் வெடித்தததில் தந்தை, மகள் உயிரிழந்த துயர சம்பவம் நடைபெற்ற்றது.
* ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 15-வது சீசன் தொடங்கியது.
மார்ச் 27
* இந்தியாவில் இருந்து 2 ஆண்டுக்ளுக்குப் பிறகு சர்வதேச விமான சேவை தொடங்கியது
மார்ச்: 28
* பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டன. இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
* கோவா முதல்வராக பிரமோந்த் சாவந்த் பொறுப்பேற்றார்.
மார்ச் 29
* யாழ்ப்பாணம் பகுதியில் 3 மின் திட்டப் பணிகளை மேற்கொள்ள இந்தியாவுடன் இலங்கை அரசு ஒப்பந்தம் மேற்கொண்டது. சீன நிறுவனத்திற்கு வழங்கிய பணிகளை ரத்து செய்தது.
* முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் முதல் முறையாக மாற்றம் செய்யப்பட்டது. போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த ராஜகண்ணப்பன் பிற்படுத்தப்படோர் நலத்துறைக்கு மாற்றப்பட்டு அத்துறையில் இருந்த சிவசங்கர் போக்குவரத்து துறை அமைச்சராக நியமிக்கப்பட்ட்டார்.
மார்ச்: 31
* வன்னியருக்கான 10.5 சதவீத உள் இட ஒதுக்கீடு செல்லாது என்ற சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது.
* பிரதமர் மோடியை முதல்வர் ஸ்டாலின் டெல்லியில் சந்தித்து பேசினார். அப்போது நீட் விலக்கு உள்ளிட்ட கோரிக்ககள் அடங்கிய மனுவை அளித்தார்.












Click it and Unblock the Notifications