3 ஏரியா.. விருதுகள்.. ‘கார்’.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய அண்ணாமலை.. அப்போ அந்த விமர்சனம் உண்மைதானா?
சென்னை : தமிழ்நாட்டில் பாஜகவை வலுவாகக் காலூன்ற வைக்கும் நோக்கத்தோடு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை.
மத்திய பாஜக அரசு யாருக்காவது விருது கொடுத்தாலே, அவர்களை தூக்க பிளான் போட்டுவிட்டது என அர்த்தம் என எதிர்க்கட்சியினர் முணுமுணுக்கின்றனர். அதை உறுதிப்படுத்தும் சம்பவங்கள் அவ்வப்போது நடந்து வருகின்றன.
நாடு முழுவதும் பல்வேறு துறைகளிலும் பிரபலமானவர்கள் தங்கள் கட்சியில் சேர்த்து, கட்சியை பலப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகிறது பாஜக.
கட்சியில் சேர்ப்பது ஒருபக்கம் என்றால், மக்கள் அபிமானமுள்ள பிரபலங்களுக்கு முக்கியமான விருதுகள், பதவிகளைக் கொடுத்து, அவர்களது ஆதரவாளர்களை வாக்கு வங்கியாக பாஜகவில் சேர்க்கும் திட்டத்தையும் செயல்படுத்தி வருகிறது.

அசைன்மெண்ட்
தமிழகத்தில் பாஜகவை வலுப்படுத்துவதற்காக, மாற்றுக்கட்சிகளில் அதிருப்தியில் இருப்பவர்களை தங்கள் பக்கம் இழுக்க முயற்சித்துவரும் பாஜக, வேறு சில திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது. விளையாட்டு, கலை உள்ளிட்ட துறைகளில் பிரபலமானவர்களை சமீப காலமாக அதிகமாக ஈர்த்து வருகிறது பாஜக. இதற்காக முக்கிய நிர்வாகிகளுக்கு அசைன்மெண்ட் கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று 3 முக்கியமான காரியங்களைச் சாதித்துள்ளது தமிழக பாஜக.

அனிதா பால்துரை
18 ஆண்டு காலம் இந்திய கூடைப்பந்து அணிக்கு கேப்டனாக இருந்த அனிதா பால்துரைக்கு தமிழக பாஜக சார்பில் 15 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கார் இன்று பரிசாக வழங்கப்பட்டது. தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, கார் பரிசை அனிதா பால்துரைக்கு வழங்க அதை அவர் மகிழ்வுடன் ஏற்றுக்கொண்டு பாஜகவுக்கு நன்றி தெரிவித்தார். இவருக்கு கடந்த 2021ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருதும் மத்திய அரசால் வழங்கப்பட்டது. அனிதா பால்துரை இனி பாஜகவுக்கு ஆதரவாகச் செயல்படுவார் எனக் கூறப்படுகிறது.

பாடி பில்டர் பாஸ்கரன்
இதேபோல, 2019ஆம் ஆண்டு பாடி பில்டிங்கிற்காக அர்ஜுனா விருது பெற்ற பாஸ்கரன் தன்னை பாஜகவில் இணைத்துக்கொண்டார். தேசிய, ஆசிய, உலக அளவிலான பாடி பில்டிங் போட்டிகளில் பங்கேற்று சாதித்த பாஸ்கரனையும் பாஜகவில் சேர்த்துள்ளனர். இதுபோல, பல்வேறு துறைகளைச் சேர்ந்த பிரபலங்களையும் கட்சியில் சேர்ப்பதற்கான அசைன்மெண்ட் நடந்து வருகிறதாம். இதனால், பாஜக அரசு யாருக்காவது விருது கொடுத்தாலே சந்தேகம் வருகிறது என்று கூறுகின்றனர் எதிர்க்கட்சியினர்.

நீட் தேர்ச்சி பெற்ற மாணவி
நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவி அகிலாண்டேஸ்வரி இன்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை சந்தித்து வாழ்த்து பெற்றார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாணவி சாமுண்டீஸ்வரி வெறும் 45 நாட்களில் பயிற்சி எடுத்து நீட் தேர்வு எழுதினேன், நீட் தேர்வு கடினமானது இல்லை, அனைத்து மாணவர்களும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனத் தெரிவித்தார்.

நீட் அரசியல்
நீட் தேர்வு விவகாரத்தில் திமுக உள்ளிட்ட கட்சிகள் பாஜக அரசை கடுமையாக விமர்சித்து வரும் நிலையில், நீட் தேர்வு எளிதானது என்றும், தமிழக மாணவர்கள் அதிகமாக பங்கேற்று வருகின்றனர் என்றும், திமுக தான் திட்டமிட்டு அரசியல் செய்கிறது என்றும் பிம்பத்தை ஏற்படுத்த முயலும் பாஜக, அதன் ஒரு பகுதியாகவே நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவியை அழைத்டு இவ்வாறு பேச வைத்துள்ளது என்கிறார்கள்.

அண்ணாமலை
தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று பாஜக அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தபோது கூட, "நீட் தேர்வை வைத்து பாஜக ஒருபோதும் அரசியல் செய்யவில்லை 2016, 2017, 2018 ஆகிய ஆண்டுகளில் ஆரம்பத்தில் நீட் தேர்வு எழுத கடினமாகத்தான் இருந்தது. ஆனால் அது தற்போது சரி செய்யப்பட்டுள்ளது.ஆனால் திமுக அரசு மாணவர்களின் கண்ணையும், கைகளையும் கட்டி வைத்து விட்டு எந்த பயிற்சியும் தராமல் நீட் தேர்வு எழுதிய மாணவர்கள் தேர்ச்சி ஆகவில்லை என கூறினால் என்ன சொல்வது?" எனப் பேசியுள்ளார்.

நீட் விவகாரம்
மேலும் பேசிய அண்ணாமலை, "நீட் தேர்வின் தற்கொலைகளுக்கு திமுகவினரே காரணம். அடுத்து யார் தற்கொலை செய்து கொள்வார்கள் என்ற ரேஞ்சுக்கு ரேஞ்ச் ரோவர் காரில் உதயநிதியும், கனிமொழி ஓட்டமும் நடையுமாக இருந்து வருகின்றனர். இவர்களின் செயல்கள் நீட் தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் வகையில் இருந்து வருகிறது, அதுபோன்ற செயலில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஈடுபடுவது வெட்கக்கேடானது." எனக் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications