எங்க கூட்டணியில் பாஜக இருக்கு.. ஆனா பாஜக கூட்டணியில் பல கட்சிகள் இருக்கு.. எடப்பாடியின் அடடே பதில்
சென்னை: அடுத்தாண்டு நடக்கும் சட்டசபைத் தேர்தலுக்கு அதிமுக பாஜக கூட்டணி இறுதியாகியுள்ளது. அதேநேரம் பாஜக கூட்டணியில் ஓபிஎஸ், டிடிவி இருப்பதால் இந்த விவகாரத்தில் ஒரு தெளிவு இல்லாமலேயே இருந்தது. இதற்குக் குறித்து எடப்பாடி பழனிசாமியிடம் கேள்வி எழுப்பப்பட்ட போது, அவர் தேர்தல் அறிவிப்பு வந்த பிறகே கூட்டணியில் எந்த எந்த கட்சிகள் இருக்கிறார்கள் என்பது தெரிய வரும் எனப் பதிலளித்தார்.
தமிழ்நாட்டில் அடுத்தாண்டு தான் சட்டசபைத் தேர்தல் என்றாலும் கூட இப்போதே அரசியல் களம் சூடுபிடித்துவிட்டது. ஆளும் தரப்பு, எதிர்க்கட்சி தரப்பு என அனைவரும் தீவிர பிரச்சாரத்தை ஆரம்பித்துள்ளனர். திமுகவை பொறுத்தவரை இதுவரை கூட்டணியில் எந்தவொரு பெரிய குழப்பமும் இல்லாமல் இருக்கிறது. சில அதிருப்தி குரல்கள் இருந்தாலும் பெரிய சிக்கல் இல்லை.

அதிமுக பாஜக கூட்டணி
மறுபுறம் எதிரக்கட்சிகளைப் பொறுத்தவரை ஏற்கனவே அதிமுக பாஜக கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேநேரம் எடப்பாடி பழனிசாமி தரப்பால் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓபிஎஸ், டிடிவி தினகரன் ஆகியோர் பாஜக கூட்டணியில் இருக்கிறார்கள். இதனால் பாஜக கூட்டணியில் என்ன நடக்கும்.. அந்த கூட்டணி உடையுமா எனப் பல கேள்விகள் எழுந்தன.
எடப்பாடியின் அடடே பதில்
இது குறித்த கேள்விக்கு எடப்பாடி பழனிசாமி வினோதமான ஒரு பதிலைக் கொடுத்திருக்கிறார். திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி இது குறித்த கேள்விக்கு, "என்டிஏ கூட்டணியில் அதிமுக பாஜக கட்சிகள் உள்ளன. பாஜக கூட்டணியில் பல கட்சிகள் உள்ளன. இன்னும் தேர்தலுக்கு 8 மாதங்கள் உள்ளன. தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு கூட்டணியில் யார் யார் இருக்கிறார்கள் என்பதைத் தெளிவாகச் சொல்லிவிடுகிறேன்" என்றார்
பாஜக கூட்டணியில் டிடிவி தினகரன், ஓபிஎஸ், சசிகலா வந்தால் அதிமுக நிலைப்பாடு என்ன என்ற கேள்விக்கு எடப்பாடி பழனிசாமி, "நீங்கள் கற்பனையான கேள்வி கேட்கிறீர்கள். அதற்கெல்லாம் யூகத்தின் அடிப்படையில் பதில் சொல்ல முடியாது. அந்த கட்சித் தலைவர்களிடம் கேளுங்கள்" என்றார். காங்கிரஸ் தவெக இடையே கூட்டணி உருவாகுமா என்ற கேள்விக்கு அவர், "இன்னும் 8 மாதம் இருக்கிறது. என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். யூகத்தின் அடிப்படையில் பதில் சொல்ல முடியாது. ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு நிலைப்பாடு, கொள்கை இருக்கிறது. அதன் அடிப்படையிலேயே முடிவு எடுக்கும்" என்றார்.
10.5% இட ஒதுக்கீடு
வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு குறித்த கேள்விக்கு அவர், "அதெல்லாம் இது முடிந்த போன விஷயம். மக்களிடம் குழப்பத்தை உண்டாக முயல வேண்டாம். சிலர் விஷமத்தனமாக முயல்கிறார்கள். இந்த விவகாரத்தில் மத்திய அரசு ஒரு உத்தரவைப் போட்டுள்ளது. அவ்வளவு தான்" என்றார். மத்திய அரசு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த உத்தரவிட்டுள்ள நிலையில், அதைக் குறிப்பிடும் வகையிலேயே எடப்பாடி பழனிசாமி இந்த பதிலை அளித்தார்.
விவசாயக் கடன் சிபில் ஸ்கோர்
தொடர்ந்து விவசாயக் கடன் குறித்துப் பேசிய அவர், "சிபில் ஸ்கோர் வைத்துத் தான் கடன் வழங்க வேண்டும் என்று சில வாரங்களுக்கு முன்பு அறிவிப்பு வெளியானது. இதனால் விவசாயிகள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டனர். குறிப்பாக டெல்டா பகுதி விவசாயிகள் கடன் கேட்கச் சென்றால் ஏகப்பட்ட ஆவணங்களைக் கேட்கிறார்கள். இதன் கடன் பெற முடியாத சூழலே இருப்பதாக விவசாயிகள் என்னிடம் கோரிக்கை வைத்தனர். விவசாயிகள் பிரதான கோரிக்கையாக இது தான் இருந்தது.
பிரதமர் மோடி தமிழ்நாடு வந்திருந்த போது, அவரை நேரில் சந்தித்து இது குறித்து கோரிக்கை வைத்தேன். அதை ஏற்றுக் கொண்டு சரி செய்வதாகப் பிரதமர் மோடி சொன்னார். நான் மோடியிடம் இந்த கோரிக்கை வைத்தது தெரிந்த உடன் தமிழக அரசு பழைய நடைமுறையே தொடரும் எனச் சொல்லி இருக்கிறது. எங்களைப் பொறுத்தவரை ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்கள் பிரச்சினைக்குத் தான் முக்கியத்துவம் தருவோம்" என்றார்.


Click it and Unblock the Notifications
