நாளைக்கு திமுககாரங்களுக்கு மட்டும் ஓட்டுரிமை கொடுத்தா ஏத்துக்குவீங்களா? - புது குண்டு போட்ட கேசிபி!
சென்னை : ஓபிஎஸ்ஸுக்கு சசிகலா மீது பயம், ஈபிஎஸ்ஸுக்கு தான் மட்டுமே இருக்க வேண்டும். எனக்கு அது போன்று எதுவும் கிடையாது. ஓபிஎஸ்ஸும் வாங்க, ஈபிஎஸ்ஸும் வாங்க, சசிகலாவும் வாங்க எனத் தெரிவித்திருக்கிறார் அதிமுக முன்னாள் எம்.பி கே.சி.பழனிச்சாமி.
அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இடையே கடுமையான அதிகாரப்போட்டி நிகழ்ந்து வரும் நிலையில், முக்கிய நிர்வாகிகள் பலரும் இரு தரப்பில் ஒருவருக்கு ஆதரவாக இருந்து வருகின்றனர்.
ஆனால், அதிமுக முன்னாள் எம்.பி. கே.சி.பழனிச்சாமியோ, ஓபிஎஸ், ஈபிஎஸ் இரு பிரிவினருக்கும் எதிரான கருத்துகளைக் கூறி வருகிறார். இரண்டு பேர் மீதும் அதிருப்தியில் இருப்பவர்களை தன் பக்கம் திரட்டும் முயற்சிகளிலும் கே.சி.பழனிச்சாமி ஈடுபட்டு வருவதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆகியோர் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டதே தவறானது என குண்டைத் தூக்கிப் போட்டுள்ளார் கே.சி.பழனிச்சாமி.

எனக்கு பயமே கிடையாது
அதிமுக முன்னாள் எம்.பி கே.சி.பழனிச்சாமி பேட்டியின்போது பேசுகையில், "இன்றைய அதிமுகவில் எடப்பாடி பழனிச்சாமியைப் பொறுத்தவரை வேறு யாருமே இருக்கக்கூடாது, அவர் மட்டும்தான் இருக்க வேண்டும் என்று சொல்வார். ஓ.பன்னீர்செல்வத்தை பார்த்தீர்கள் என்றால், சசிகலா வந்தால் நம்மைக் கவிழ்த்து விடுவார் என்ற பயம் இருக்கும். எனக்கு அது போன்று எதுவும் கிடையாது. ஓபிஎஸ்ஸும் வாங்க ஈபிஎஸ்ஸும் வாங்க, சசிகலாவும் வாங்க. எனக்கு யார் மீதும் பயம் கிடையாது. உங்களுக்கு வேண்டுமென்றால் வாருங்கள். இல்லை என்றால் விட்டுவிடுங்கள்.

தொண்டர்கள் இல்லை டெண்டர்கள் தான்
எடப்பாடி பழனிச்சாமியை ஏற்றுக்கொள்வதுதான் அதிமுக தொண்டர்களின் எதிர்ப்பார்ப்பு என்று இல்லையே. அதிமுக தொண்டர்கள் எதை ஏற்கிறார்கள்? எதை விரும்புகிறார்கள்? என்றுதான் நான் பார்க்கிறேன். எடப்பாடி பழனிசாமியிடம் நிச்சயமாக தொண்டர்கள் இல்லை. டெண்டர்கள் தான் இருக்கிறார்கள். அவர் பக்கம் எல்லாரும் டெண்டர் பார்ட்டிகளாகத்தான் வந்துள்ளார்கள். டெண்டர் எடுத்தவர்கள் மட்டும்தான் ஈபிஎஸ் பக்கம் இருக்கிறார்கள்.

தொண்டர்கள் வாக்களிக்கவில்லை
எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் டிசம்பரில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் எனத் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். அப்போது அவர்கள் இரண்டு பேரும் உட்கட்சி தேர்தலால் தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கிறார்கள், தமிழகம் முழுவதும் இருக்கும் தொண்டர்கள் வாக்களித்து அது நடக்கவில்லை.

இது ஜனநாயகமா?
இவர்களால் மேலே இருந்து மாவட்ட செயலாளர், அந்த மாவட்ட செயலாளரில் இருந்து ஒன்றிய செயலாளர், கீழே கிளை வரைக்கும் நியமனங்கள் தான் நடந்தது. அப்போது இவர்களால் நியமிக்கப்பட்ட பொதுக்குழு உறுப்பினர்கள், அந்த பொதுக்குழுவால் நியமிக்கப்பட்ட ஈபிஎஸ், ஓபிஎஸ். இது எப்படி ஒரு ஜனநாயக முறையிலான தேர்தலாக இருக்கும்?

உங்கள் கூட்டத்திற்குள்ளேயே தேர்தலா
எல்லா அதிமுக தொண்டர்களுக்கும் உறுப்பினர் அட்டைகள் கொடுப்போம். எம்ஜிஆர் காலத்தில் இருந்து இந்த இயக்கத்தோடு ஒன்றியவர்களுக்கு உறுப்பினர் அட்டைகள் கொடுப்போம். நீங்கள் ஆளுக்கு ஒரு கூட்டத்தை சேர்த்து அவர்களுக்கு மட்டும் உறுப்பினர் அட்டைகளை கொடுத்து அவர்களை வைத்து தலைவரை தேர்ந்தெடுத்தீர்கள் என்றால் எப்படி?

திமுகவினருக்கு மட்டும் வாக்குரிமை கொடுக்கலாமா?
இதை ஒரு உதாரணத்தோடு சொல்கிறேன். இன்றைய முதலமைச்சர் நாளைக்கு சட்டமன்ற தேர்தல் நடக்கும்போது இடைக்கால முதலமைச்சர் தானே. தமிழ்நாடு முழுக்க வாக்காளர் அடையாள அட்டையை திமுகவிற்கு ஓட்டு போடுபவர்களுக்கு மட்டும் கொடுத்துவிட்டு, ஒரு சட்டமன்றத் தேர்தல் நடத்தினால் அதனை தமிழக மக்கள் ஏற்றுக் கொள்வார்களா? அதிமுக தொண்டர்கள் ஏற்றுக் கொள்வார்களா?

ஏற்புடையதாக இல்லை
அதைத்தான் எடப்பாடி பழனிசாமி செய்கிறார். தன்னைச் சுற்றி இருக்கிறவர்களை வைத்துக்கொண்டு ஒன்றை உருவாக்குகிறார். மேலிருந்து கீழாக இது நடக்கிறது. அதை வைத்து நீதிமன்றத்தில் நீங்கள் போய் உங்கள் பலத்தை அந்தக் கூட்டத்தில் காட்டுங்கள் அதுதான் உண்மையானது என்று சொல்வது ஏற்புடையதாக இல்லை" எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications