மீண்டும் சீனுக்கு வந்த சிவி சண்முகம்.. ‘ஜால்ரா.. வாயை வாடகைக்கு விட்டு’.. பாலகிருஷ்ணன் மீது தாக்கு!
சென்னை : தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பான அருணா ஜெகதீசன் கமிஷன் அறிக்கையை முன்வைத்து எடப்பாடி பழனிசாமி மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என சிபிஐஎம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்திய நிலையில், இத்தனை நாட்கள் கடந்தபிறகு அவருக்கு பதிலடியாக நீண்ட அறிக்கையை வெளியிட்டுள்ளார் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம்.
கடந்த சில வாரங்களாக பெரிதாக பிரஸ்மீட், பொதுக்கூட்டங்கள் எதிலும் தலைகாட்டாமல் இருந்து வந்த சி.வி.சண்முகம், ஆவேசமாக களத்தில் குதித்து, சிபிஐஎம் மாநில செயலாளர் பாலகிருஷ்ணனை கடுமையாகத் தாக்கியுள்ளார்.
வீதி வீதியாக உண்டியல் குலுக்கி சேர்க்கும் பணத்தில் டீ குடித்து, கட்சிக்காக உழைத்த கம்யூனிஸ்ட் தொண்டர்களின் தியாகங்களை மண்ணில் போட்டு மிதிக்கும் வகையில் சிலர் இன்று தங்கள் இயக்கத்தையே அறிவாலயத்தின் கொத்தடிமையாக மாற்றியுள்ளார்கள் என சி.வி.சண்முகம் விமர்சித்துள்ளார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலாகிருஷ்ணனுக்கு அதிமுக எம்.பி சி.வி.சண்முகம் கண்டனம் தெரிவித்து வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு :
"தமிழகத்தில் உள்ள முக்கியமான அரசியல் கட்சிகளுக்கு சிறப்பான பாரம்பரியம் உண்டு. குறிப்பாக கம்யூனிஸ்ட் இயக்கங்கள் எம்.கல்யாணசுந்தாம். பி.ராமமூர்த்தி போன்றவர்கள் தலைமையில், கண்ணியமாகவும், நாணயமாகவும் அரசியல் செய்தனர். திராவிட முன்னேற்றக் கழகத்திலிருந்து, நம்மை ஆளாக்கிய எம்.ஜி.ஆர் தூக்கி எறியப்பட்டபோது அவருக்கு தோளோடு தோள் நின்ற கம்யூனிஸ்ட் தலைவர்கள் புடம் போட்ட தங்கங்கள். கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆனது போல் இன்றைய கம்யூனிஸ்ட் இயக்கங்களின் நிலைமை உள்ளது.
மாநகராட்சி -நகராட்சிகளுக்கு கூடுதல் அதிகாரம்! இனி எல்லாம் அதிரடி தான்! தமிழக அரசு அரசாணை!

வாயை வாடகைக்கு விட்டு
வீதி வீதியாக உண்டியல் குலுக்கி சேர்க்கும் பணத்தில், டீ குடித்து கட்சிக்காக உழைத்த கம்யூனிஸ்ட் தொண்டர்களின் தியாகங்களை மண்ணில் போட்டு மிதிக்கும் வகையில் இன்றைக்கு தலைவர்கள் என்று சொல்லிக்கொள்ளும் நபர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்திடமிருந்து பல கோடிகளைப் பெற்று தங்கள் இயக்கத்தையே அறிவாலயத்தின் கொத்தடிமையாக மாற்றியுள்ளார்கள். தற்போதைய பொம்மை முதலமைச்சரின் குரலாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளராக இருக்கக்கூடிய கே.பாலகிருஷ்ணன் திமுக சொல்வதையெல்லாம் மென்று விழுங்கி மீண்டும் வாந்தி எடுத்துள்ளார். பாலகிருஷ்ணன், அவருடைய வாயை வாடகைக்கு விடுவது பற்றி எங்களுக்கு கவலை இல்லை. ஆனால், ஆட்டைக் கடித்து, மாட்டைக் கடித்து மனிதனைக் கடிப்பது போல் ஆற்றல் மிகு எங்கள் இயக்கத்தின் இடைக்காலப் பொதுச்செயலாளர், முன்னாள் முதலமைச்சர் எடப்பாடியாரை, தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் தொடர்புபடுத்தி முறையற்ற கருத்துக்களை உமிழ்ந்திருக்கிறார்.

ஆட்சியாளர்களுக்கு ஜால்ரா
ஒரு ஆட்சியில் சந்தர்ப்ப சூழ்நிலைகளுக்கேற்ப காவல் துறையினரால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளுக்கெல்லாம் முதலமைச்சரை பொறுப்பாக்கி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்த நபர் வலியுறுத்துவாரேயானால், கடந்த கால திமுக ஆட்சியின் போது நடைபெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவங்களுக்கும் அன்றிருந்த முதலமைச்சரையும், துணை முதலமைச்சரையும் பொறுப்பாக்குவாரா? இந்த விடியா அரசின் 18 மாத ஆட்சியில், பல்வேறு காவல் நிலையங்களில் காவல்துறையினரால் பலர் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவங்களுக்கு தற்போதைய முதலமைச்சர் ஸ்டாலினை பொறுப்பாக்க வற்புறுத்துவாரா? தன்னுடைய சுயநலத்திற்காக இந்த ஆட்சியாளர்களுக்கு ஜால்ரா அடித்து வயிறு வளர்க்க வேண்டும் என்ற நிலையில் உள்ள இந்த நபருக்கு நாவடக்கம் தேவை.

டிவியில் தான் பார்த்தார்
துப்பாக்கிச்சூடு என்ற சம்பவம் ஒன்றை, தான் தொலைக்காட்சியின் வாயிலாக பார்த்து அறிந்தேன் என்று எங்களின் முதலமைச்சர் அன்று சொன்னது நூற்றுக்கு நூறு உண்மை. தமிழகமெங்கும் எந்தவொரு சம்பவம் நடந்தாலும் மூன்றாவது கண்ணாக இருக்கக்கூடிய காட்சி ஊடகத் துறையினார் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறார்கள். ஆதலால்தான், தொலைக்காட்சியில் பார்த்தேன் என்று அவர் சொன்னார். எந்தவொரு இடத்திலும் தூத்துக்குடியில் 99 நாட்களாக அமைதியாக நடந்த ஆர்ப்பாட்டங்கள் பற்றி தனக்குத் தெரியாது என்று அவர் சொல்லவில்லை. பாலகிருஷ்ணன் தனது அறிக்கையில், இந்த துப்பாக்கிச் சூடு, தமிழ்நாட்டின் பெருமை குலைவதற்கு இட்டுச் சென்ற மிக மோசமான சம்பவம் என்பதால் ஆரம்பம் தொட்டு அதன் காரணங்களை ஆராயச் சொல்கிறார். கீழே குறிப்பிடப்பட்டுள்ள சிலவற்றை மீண்டும் அவருக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன்.

ஆரம்பம் தொட்டு ஆராயலாமா?
* ஸ்டெர்லைட் நிறுவனம் தமிழகத்தில் பரிணமித்ததற்கு முந்தைய 1996-2001-ல் கருணாநிதி தலைமையிலான திமுக அரசில், மாசுக் கட்டுப்பாட்டு வாரிய நிபந்தனைகள் எதையும் உறுதிப்படுத்தாமல் 14.10.1996-ல் ஸ்டெர்லைட் ஆலையை இயக்குவதற்கான இசைவாணையை வழங்கியது தான் இன்றைய அனைத்துப் பிரச்சனைகளுக்கும் மூல காரணம்.
* 20.5.1999 அன்று கூடுதல் உற்பத்தி செய்வதற்கு இசைவாணையை வழங்கியது அன்றைய கருணாநிதி தலைமையிலான திமுக அரசு.
* தொடர்ந்து 2006-2011 காலக்கட்டத்தில் 15.11.2006 அன்று ஆலையின் 2வது விரிவாக்கத்தை இயக்குவதற்கான இசைவாணையையும், 14.8.2009 அன்று ஆலையை புதுப்பித்தலுக்கான இசைவாணையையும் வழங்கியது கருணாநிதி தலைமையிலான திமுக அரசு.

திமுக ஆட்சியில்
* குறிப்பாக, தற்போது முதலமைச்சராக உள்ள ஸ்டாலின் அவர்கள், 2006-2011-ல் துணை முதலமைச்சராகவும், தொழில் துறை அமைச்சராகவும் இருந்தபோது, சட்டமன்றத்தில், 'தூத்துக்குடியில் அமைந்துள்ள ஸ்டெர்லைட் நிறுவனம் ரூ.1,500 கோடி மதிப்பீட்டில் விரிவாக்கத் திட்டத்தை மேற்கொண்டிருக்கிறது என்று அறிவித்தார். ஸ்டாலின் தொழில் துறை அமைச்சர் என்ற முறையில் இவ்வாலையின் விரிவாக்கத்திற்குத் தேவையான 89.36 ஏக்கர் நிலத்தை ஒப்படைத்தார். மேலும், திமுக ஆட்சியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு 243.84 ஏக்கர் நிலம் கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டு ஆலையின் இரண்டாவது விரிவாக்கம் நடைபெற்றது.
* ஏற்கெனவே, தூத்துக்குடி மற்றும் அதனைச் கற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டுமென்று தொடர் போராட்டத்தைப் பல ஆண்டுகளாக நடத்தி வந்தார்கள். அதைப் பொருட்படுத்தாமல் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காமல், இரண்டாவது விரிவாக்கத்திற்கு திமுக அரசு அனுமதி கொடுத்ததால் மக்கள் கொதித்தெழுந்தனர். அன்றிலிருந்தே, இப்போராட்டம் நடைபெறும் சூழ்நிலை உருவானது.

காரணமே திமுக அரசு தான்
* திமுக உரிய காலத்தில் அப்பகுதி மக்களுடைய குரலுக்கு மதிப்பளித்து ஆலையின் இரண்டாவது விரிவாக்கத்திற்கு அனுமதி அளிக்காமல், அந்த ஆலை மூடப்பட வேண்டும் என்ற அப்பகுதி மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து நடந்திருந்தால், இப்படிப்பட்ட ஒரு சம்பவம் நடைபெற்றிருக்காது. எனவே, இச்சம்பவம் நடைபெறுவதற்கு முழுக்காரணம் அப்போதைய (தொழில்துறை) மற்றும் துணை முதலமைச்சரும், இப்போதைய முதலமைச்சருமான ஸ்டாலினும், திமுக அரசும்தான். அதே நேரம், இந்த ஆலையால் சுற்றுச் சூழல் மாசு ஏற்பட்டு மக்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்ற புகார்கள் வந்தவுடன் அதை மூடுவதற்கான அனைத்து முயற்சிகளையும் அதிமுக ஆட்சி எடுத்தது.

அதிமுக ஆட்சியில்
2013-ல் ஜெயலலிதா பொதுமக்களிடம் இருந்து பெற்ற புகார்களை ஆலைக்கு அனுப்பி, அவர்களிடம் இருந்து விளக்கம் பெறப்பட்டு, 29.3.2013 அன்று ஆலையை மூடுவதற்கும், மற்றும் மின் இணைப்பை துண்டிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. எனினும், இந்நிறுவனம் தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் மூலம் இதற்கு தடையாணை பெற்றது. மேலும், 31.3.2018 வரை வழங்கப்பட்ட இசைவாணையை புதுப்பிப்பதற்கு ஸ்டெர்லைட் நிறுவனம் 31.1.2018 அன்று தமிழ் நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு விண்ணப்பம் செய்தது. இந்த புதுப்பித்தல் விண்ணப்பத்தினை தமிழ் நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் 9.4.2018 அன்று நிராகரித்தது. மேலும், 12.4.2018 நாளிட்ட நடப்பாணையில் வாரியத்தின் முன் அனுமதி இல்லாமல் தொழிற்சாலை இயங்கக்கூடாது என்று அறிவுறுத்தியுள்ளது.

தீக்கதிரே வெளியிட்டது
அன்றைய செய்தித் துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ செய்தியாளர்களிடம் பேசுகையில், ஸ்டெர்லைட் ஆலை குறித்து வந்த புகார்களை அடுத்து தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தற்காலிகமாக ஸ்டெர்லைட் ஆலையை மூடிவைக்க உத்தரவிட்டுள்ளது என்று பேட்டியளித்திருந்தார். இந்தச் செய்தியை 7.4.2018 அன்று உங்கள் கட்சியிள் அதிகாரபூர்வ நாளேடான 'தீக்கதிர்' முதல் பக்கத்தில் தெளிவாக பிரசுரிக்கப்பட்டுள்ளது. அதை பாலகிருஷ்ணன் படிக்கவில்லையா? அல்லது வசதியாக பறந்துவிட்டாரா?

நன்றிக்கடனா?
மக்களுடைய உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு உண்டான சட்ட ரீதியிலான அனைத்து நடவடிக்கைகளும் அதிமுக ஆட்சியில் எடுக்கப்பட்டு வந்தது. ஆனால், ஆலை விரிவாக்கத்திற்கும், அந்த ஆயை தொடர்ந்து இயங்குவதற்கும் ஸ்டாலினும், திமுக அரகம் துணை போனது. பாலகிருஷ்ணன், திமுக தலைவர் ஸ்டாலின் அவர்களை திருப்திப்படுத்துவதற்காக, ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்காக அதிமுக கழக அரசு எடுத்த நடவடிக்கைகளை மறைத்து பேட்டி அளித்துள்ளதைப் பார்க்கும்போது, தேர்தல் நேரத்தில் திமுக-விடமிருந்து, கம்யூனிஸ்ட் கட்சி, தேவையான தேர்தல் நிதியை பெற்றதாக பத்திரிகைகளில் வந்திருந்த செய்தியினை உறுதிப்படுத்துகிறது. அதற்கு நன்றிக் கடனாக பாலகிருஷ்ணன் இப்போது செயல்படுகிறார்.

குரல் எழுப்பாமல்
தமிழகத்தில் இந்த விடியா திமுக அரசின் 18 மாத ஆட்சி காலத்தில், மின் கட்டண உயர்வு பற்றியோ, சொத்து வரி உயர்வு பற்றியோ, குடிநீர் கட்டண உயர்வு பற்றியோ, சட்டம் ஒழுங்கு சீர்குலைவு பற்றியோ, விவசாயிகள் உற்பத்தி செய்த நெல்லை அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்ய முடியாமல் உள்ள நிலையைப் பற்றியோ, அரசு கொள்முதல் நிலையங்களில் நடைபெறும் முறைகேடுகள் பற்றியோ வாய் திறக்காமல் இருப்பது, மக்களுடைய பிரச்சனைகளைப் பற்றி குரல் எழுப்பாமல் இருப்பது திமுக-வுக்கு முட்டுக் கொடுப்பது போல் தெரிகிறது.

ஊருக்குத்தான் உபதேசம்
'ஊருக்குத்தான் உபதேசம், உனக்கில்லையடி" என்பதுபோல் எங்களுக்கு உபதேசம் செய்ய புறப்பட்டுள்ள பாலகிருஷ்ணன், கோவையில் கார் வெடிகுண்டு வெடித்து அதை இயக்கிய நபர் பற்றியோ, அவர்கள் தீட்டிய சதித் திட்டங்கள் பற்றியோ இன்றைய முதல்வர் இதுவரை வாய் திறக்காதது குறித்து கேள்வி எழுப்பியுள்ளாரா? மேலும் கள்ளக்குறிச்சி, கனியாமூர் தனியார் பள்ளியில் மாணவி ஒருவர் மர்மமான முறையில் மரணமடைந்தார். மாணவியின் பெற்றோர் மாவட்ட நிர்வாகத்தினரிடமும், காவல் அதிகாரியிடமும் உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி புகார் கொடுத்தார்கள். ஆனால், அந்த புகாரின் அடிப்படையில் 4 நாட்களாக காவல்துறை எந்தவித நடவடிக்கையும் எடுக்காத காரணத்தினால், ஆயிரக்கணக்கான பொதுமக்கள் ஒன்று திரண்டு அப்பள்ளியை சூறையாடி முழுமையாக தீக்கிரையாக்கினார்கள்.

முதல்வரை பொறுப்பாளி ஆக்கவில்லையே
இச்சம்பவத்தில் ஈடுபட்ட சுமார் 350-க்கும் மேற்பட்டோர் தற்போதும் காவல்துறையின் பிடியில் சிக்கி தவித்து வருகிறார்கள். இதற்கு காரணம், இந்த விடியா அரசு உரிய நேரத்தில் நடவடிக்கை எடுக்காததுதான். உரிய நேரத்தில் நடவடிக்கை எடுத்திருந்தால் இப்படி ஒரு சம்பவமே நடந்திருக்காது. இந்த நிகழ்வு குறித்தும் இந்த விடியா அரசின் முதல்வர் இதுவரை வாய் திறக்கவில்லை. அவதூறு பரப்ப வேண்டும் என்ற உள்நோக்கத்தோடு, தற்போது வாய் நீளம் காட்டும் பாலகிருஷ்ணன், இந்த முதலமைச்சரை மேற்கண்ட சம்பவங்களுக்கும் பொறுப்பாக்காதது ஏன்? பாலகிருஷ்ணன் கொள்கைப் பிடிப்புள்ள உண்மையான கம்யூனிஸ்ட் இயக்கத் தொண்டர்களை களங்கப்படுத்தும் வகையில் செயல்பட வேண்டாம். இனியாவது கம்யூனிஸ்ட் கட்சி தனித்தன்மையுடன் செயல்படும் என்று எதிர்பார்க்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.