ஜெயலலிதா நினைவுநாள் டிசம்பர் 4? டிசம்பர் 5? ஆறுமுகசாமி கமிஷன் அறிக்கையால் குழப்பத்தில் அதிமுக!
சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 2016-ம் ஆண்டு டிசம்பர் 4-ந் தேதியே மரணம் அடைந்ததாக ஆறுமுகசாமி ஆணையம் தெரிவித்துள்ள நிலையில் ஜெயலலிதாவின் நினைவு நாளை டிசம்பர் 4-ந் தேதி அனுசரிப்பதா? அல்லது டிசம்பர் 5-ல் அனுசரிப்பதா? என்பதில் அதிமுகவினர் குழப்பம் அடைந்துள்ளனர்.
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 2016-ம் ஆண்டு டிசமப்ர் 5-ந் தேதி மரணம் அடைந்ததாக அறிவிக்கப்பட்டது. ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன. இதனையடுத்து முந்தைய அதிமுக ஆட்சியில் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்த நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் கமிஷன் அமைக்கப்பட்டது.
ஜெயலலிதா நினைவுநாள் 'அன்றைக்கு'தான்.. ரெடியா? தொண்டர்களுக்கு திடீர் உத்தரவு போட்ட எடப்பாடி பழனிசாமி!

ஆறுமுகசாமி கமிஷன் அறிக்கை
கடந்த 6 ஆண்டுகளாக விசாரணை நடத்திய ஆறுமுகசாமி ஆணையம், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் தமது அறிக்கையை தாக்கல் செய்தது. இந்த விசாரணை அறிக்கை சட்டசபையிலும் முன்வைக்கப்பட்டு பகிரங்கப்படுத்தப்பட்டது. ஜெயலலிதாவுக்கு சரியான சிகிச்சை அளிக்க விடாமல் தடுத்ததாக சசிகலா உள்ளிட்டோர் மீது ஆறுமுகசாமி ஆணையம் குற்றம்சாட்டி இருந்தது.

ஆறுமுகசாமி கமிஷன் சொன்னது என்ன?
ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணையில், டிசம்பர் 4 -ம் தேதி மதியம் 3.30 -3.50 மணிக்குள் ஜெயலலிதா மரணம் என 2 பேர் சாட்சியம் அளித்துள்ளனர். மேலும் இதற்கு ஆதாரமாக ஜெயலலிதாவின் முதலாண்டு நினைவு தினத்தை டிசம்பர் 4-ந் தேதி மாலை 3.50 மணிக்கு அவரது
சகோதரர் ஜெயக்குமார் மகன் தீபக் திதி கொடுத்தார் என்பதையும் சுட்டிக் காட்டியிருக்கிறார் நீதிபதி ஆறுமுகசாமி.

திவாகரன் சொல்றது டிசம்பர் 4
சசிகலாவின் சகோதரர் திவாகரனும் நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், 2016-ம் ஆண்டு டிசமப்ர் 4-ந் தேதி இரவு மருத்துவமனைக்குச் சென்றேன். அன்று மாலை 5.15 மணிக்கே ஜெயலலிதா மாரடைப்பில் இறந்துவிட்டதாகத் தெரியவந்தது என கூறியிருந்தார். ஆனால் ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை வருவதற்கு முன்புவரை டிசம்பர் 5-ந் தேதிதான் ஜெயலலிதாவின் நினைவுநாள் என கடைபிடிக்கப்பட்டிருந்தது.

டிசம்பர் 5-ல் நினைவு தினம்: இபிஎஸ் கோஷ்டி
தற்போது ஜெயலலிதாவின் நினைவு நாள் டிசம்பர் 4-ந் தேதியா? 5-ந் தேதியா? என்கிற குழப்பம் ஏற்பட்டுள்ளது. அதிமுகவின் இபிஎஸ் கோஷ்டி, ஜெயலலிதாவின் நினைவு நாளை டிசம்பர் 5-ந் தேதி கடைபிடிப்பதாக அறிவித்துள்ளது. இது தொடர்பாக அதிமுக இபிஎஸ் கோஷ்டி வெளியிட்ட அறிக்கையில், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 6-ம் ஆண்டு நினைவு தினமான டிச.5-ம் தேதி காலை 10 மணியளவில், சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில், அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான பழனிசாமி மலர்கள் தூவி, அஞ்சலி செலுத்துகிறார். தொடர்ந்து, கட்சியின் தலைமை நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள், முன்னாள் அமைச்சர்கள், எம்.பி.,எம்எல்ஏ-க்கள் உள்ளிட்டோர் மரியாதை செலுத்த உள்ளனர். பின்னர், முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா நினைவிடவளாகத்தில் உறுதிமொழி மேற்கொள்ள உள்ளனர் என தெரிவித்துள்ளது. எப்படி எல்லாம் குழப்பம் வருது?