சசிகலாவுடன் ஓபிஎஸ் பேசுவார்.. அதிமுகவிலிருந்து எடப்பாடி வெளியேற்றப்படுவார்.. சொல்கிறார் புகழேந்தி
சென்னை: அதிமுக தொண்டர்கள் வேறுகொடியை பிடிக்கக்கூடாது, எடப்பாடி பழனிச்சாமியின் தலைமை மாறப்போகிறது, அதுவரை காத்திருக்க வேண்டும் என்று, அதிமுக முன்னாள் செய்தி தொடர்பாளர் புகழேந்தி தெரிவித்துள்ளார்.
Recommended Video
அதிமுகவில் இருந்து நீக்கம் செய்யப்பட்ட அதிமுக முன்னாள் செய்தி தொடர்பாளர் புகழேந்தி, எடப்பாடி பழனிச்சாமி மற்றும் பன்னீர்செல்வம் மீது கிரிமினல் மானநஷ்ட வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணைக்காக, புகழேந்தி, இன்று, சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜரானார்.
சென்னை உயர் நீதிமன்ற வளாகத்திற்கு வெளியே செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:

வியூகம் சரியில்லை
வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்புகளை வழங்கி இருக்கும் சென்னை உயர்நீதிமன்றம் விரைவில் தீர்ப்பு வழங்கும் என காத்திருக்கிறேன். தேர்தலில் தோற்பதற்கு சரியான வியூகம் அமைக்கப்படாததுதான் காரணம் என அண்ணன் ஓபிஎஸ் தெரிவித்திருந்தார். உண்மைதான் தினகரன் மற்றும் சசிகலாவுடன் சேர்ந்து சரியான வியூகம் அமைத்து இருந்தால் நிச்சயமாக வெற்றி பெற்றிருக்க முடியும். ஆனால் மீண்டும் எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக வந்திருப்பார்.

சட்டையில் மோடி படம்
அப்படி வந்திருந்தால், எடப்பாடி பழனிச்சாமி மற்றும் 2 சீனியர் அமைச்சர்கள் சட்டைப்பையில் மோடியின் படம் இருந்திருக்கும். சரியான வியூகம் அமைக்கப்படாததுதான் சரி.

எடப்பாடியை விரட்டுவார்கள்
காலில் விழுந்து முதலமைச்சர் பதவி வாங்கியவரை மக்கள் வெறுக்கிறார்கள். அதற்காக, அதிமுகவின் உண்மை தொண்டர்கள் வேறு கொடியை பிடிக்க கூடாது. எடப்பாடி பழனிச்சாமியின் தலைமை மாறும் வரை காத்திருக்க வேண்டும். எடப்பாடி பழனிச்சாமியை அதிமுகவில் இருந்து விரட்டும் நிலைமை வரும். அதுவரை தொண்டர்கள் பொறுமை காக்கவும்.

சசிகலாவுடன் ஓபிஎஸ் பேச வேண்டும்
உள்ளாட்சித் தேர்தலில் பாமக எடுத்த முடிவு சரியானதே. அவர்கள் அதிமுகவை விட பெரியவர்கள் என நிரூபிக்க உள்ளாட்சி தேர்தலை பயன்படுத்திக் கொள்கிறார்கள். ஓபிஎஸ், உடனடியாக சசிகலாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி அதிமுகவை காப்பாற்ற வேண்டும். அத்தகைய நிலை உருவாகும்.

அரசு நடவடிக்கை எடுக்கவில்லை
கொலை,கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டவர்களில் மீது ரெய்டு நடவடிக்கை எடுத்த திமுக அரசு அவர்களின் மீது கைது நடவடிக்கை எடுக்காதது வருத்தம் அளிக்கிறது. இவ்வாறு அதிமுக முன்னாள் செய்தி தொடர்பாளர் புகழேந்தி தெரிவித்துள்ளார். ஓபிஎஸ்சை விமர்சனம் செய்த பாமக தலைவர்களை புகழேந்தி விமர்சனம் செய்ததால் அவர் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications