Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மின்சாரக் கட்டணத்தை உயர்த்தும் திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும்.. அன்புமணி ராமதாஸ் அறிக்கை

Subscribe to Oneindia Tamil

சென்னை: மின்சாரக் கட்டணத்தை உயர்த்தும் திட்டம் தமிழக அரசுக்கு இருந்தால் அதை கைவிட வேண்டும் என பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் இழப்பை ஈடு கட்டுவதற்காக மின்சாரக் கட்டணத்தை உயர்த்துவதற்கு தமிழ்நாடு அரசு முடிவு செய்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த செய்திகள் உண்மையாக இருந்தால், அது ஏற்கனவே பெரும் துயரத்தில் இருக்கும் மக்களுக்கு கூடுதல் துயரத்தை ஏற்படுத்தும்.

பிப்ரவரி

பிப்ரவரி

தமிழ்நாட்டில் மின்சாரக் கட்டணத்தை 2022-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 15-ஆம் தேதிக்குள் உயர்த்த வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியிருப்பதாகவும், அதன்படி மின்சாரக் கட்டணத்தை உயர்த்துவதற்கான நடைமுறைகளை தமிழ்நாடு மின்சார வாரியம் தொடங்கக்கூடும் என்றும் ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

மின் கட்டணம்

மின் கட்டணம்

இதன் உண்மைத் தன்மையை தமிழக அரசுதான் தெரிவிக்க வேண்டும். ஆனால், கடந்த சில வாரங்களுக்கு முன்பு சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அப்போதைய நிதித்துறை செயலாளர் எஸ்.கிருஷ்ணன் தமிழ்நாட்டில் மின் கட்டணத்தை உயர்த்த வேண்டிய நேரம் வந்து விட்டதாக குறிப்பிட்டிருந்தார். இந்த இரு தகவல்களையும் வைத்துப் பார்க்கும்போது தமிழ்நாட்டில் மின் கட்டணம் உயர்த்தப்படுமோ? என்ற ஐயமும், கவலையும் எழுகிறது.

இரு ஆண்டுகள்

இரு ஆண்டுகள்

கொரோனா பரவல் காரணமாக கடந்த இரு ஆண்டுகளாக மக்கள் கடுமையான பாதிப்புகளை சந்தித்து வருகின்றனர். சாதாரணமான தொழிலாளர்கள் முதல் அமைப்பு சார்ந்த பணிகளில் இருப்பவர்கள் வரை பலரும் வேலை இழந்துள்ளனர். பெரும்பான்மையான பணியாளர்களின் மாத ஊதியம் குறைக்கப்பட்டு உள்ளன. ஊதிய உயர்வு என்ற பேச்சுக்கே கடந்த இரு ஆண்டுகளாக வாய்ப்புகள் இல்லை. அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் அகவிலைப்படி உயர்வு கூட தமிழ்நாட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. அண்மையில் பெய்த மழை அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரங்களை அடியோடு துடைத்து விட்டது.

விலகவில்லை

விலகவில்லை

தமிழ்நாட்டில் தொடர்மழை ஓய்ந்து விட்டாலும் அதன் பாதிப்புகள் இன்னும் விலகவில்லை. காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் பல மடங்கு உயர்ந்துள்ளன. அதனால் வாழ முடியாத சூழலுக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். இத்தகைய சூழலில் மின்சாரக் கட்டணம் உயர்த்தப் பட்டால், அதுவும் தமிழ்நாடு மின்சார வாரியம் உத்தேசித்துள்ளவாறு, 20% உயர்த்தப்பட்டால் ஏழைகள் மற்றும் நடுத்தர மக்களின் வாழ்க்கை நிலை மிகவும் மோசமாகி விடும். அதை அரசு தவிர்க்க வேண்டும்.

அதிக இழப்பு

அதிக இழப்பு

தமிழ்நாடு மின்சார வாரியம் ஒன்றரை லட்சம் கோடிக்கும் அதிக இழப்பில் இயங்குவதும், அதற்கு இணையான கடன் சுமை இருப்பதும் உண்மைதான். ஆனால், தமிழ்நாடு மின்சார வாரியத்தை லாபத்தில் இயக்குவதற்கு தேவை நிர்வாக சீர்திருத்தங்கள்தானே, மின்சாரக் கட்டண உயர்வு அல்ல. நிர்வாக சீர்திருத்தங்களை மேற்கொள்ளாமல் மின்சாரக் கட்டணத்தை மட்டும் உயர்த்துவது ஓட்டை வாளியில் தண்ணீர் பிடிப்பதற்கு சமமான செயலாகவே இருக்கும். அதனால் எந்த பயனும் ஏற்படாது.

இழப்பை சந்தித்தது

இழப்பை சந்தித்தது

தமிழ்நாடு மின்சார வாரியம் கடந்த 2014-15-ஆம் ஆண்டில் ரூ.12,750 கோடி இழப்பை சந்தித்தது. 2014-ஆம் ஆண்டு திசம்பர் மாதத்தில் மின்சாரக் கட்டணம் உயர்த்தப்பட்டதைத் தொடர்ந்து, மின்சார வாரியத்தின் இழப்பு 2015-16 ஆம் ஆண்டில் ரூ.5750 கோடியாகவும், 2016-17 ஆம் ஆண்டில் ரூ.4350 கோடியாகவும் குறைந்தது. ஆனால், அதற்கு அடுத்த ஆண்டிலிருந்து மின்வாரியத்தின் இழப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கி விட்டது. அதற்குக் காரணம் மின்சார வாரியத்தில் நடைபெற்ற முறைகேடுகளும், அதிக தொகைக்கு மின்சாரம் கொள்முதல் செய்யப்பட்டதும் தான் என்பது ஆய்வில் உறுதியாகியுள்ளது.

மின்சாரம் வாங்குவது

மின்சாரம் வாங்குவது

எனவே, தமிழ்நாடு மின்சார வாரியத்தின் சொந்த மின்னுற்பத்தியை அதிகரிப்பது, தனியாரிடமிருந்து மின்சாரம் வாங்குவதை முற்றிலுமாக நிறுத்திவிட்டு, மத்திய நிறுவனங்களிடமிருந்து அதிக அளவில் மின்சாரத்தை குறைந்த கட்டணத்தில் வாங்குவது தான் இன்றைய சூழலில் மின்வாரியத்தை லாபத்தில் இயக்கச் செய்வதற்கான சரியான நடவடிக்கைகளாக இருக்கும். தமிழ்நாடு மின்சார வாரியத்தின் கடனுக்காக ஆண்டுக்காக ரூ.16,000 கோடி வட்டி கட்டப்படுகிறது. அதை தவிர்த்தாலே மின்வாரியத்தின் இழப்பை கணிசமாக குறைத்து விட முடியும். இவற்றையெல்லாம் செய்யாமல் மின்சாரக் கட்டணத்தை உயர்த்தினால் மக்களின் துயரங்கள் தான் அதிகரிக்குமே தவிர, மின்வாரியத்தின் துயரங்கள் தீராது.

திமுக அரசு

திமுக அரசு

மின்சாரக் கட்டணத்தை உயர்த்துவதில் திமுக அரசுக்கும் உடன்பாடு இருக்காது என்றே கருதுகிறேன். அதனால், தான் ஆண்டுக்கு ரூ.6,000 வரை பயன் கிடைக்கும் வகையில், மாதத்திற்கு ஒருமுறை மின்சாரக் கட்டணம் செலுத்தும் திட்டம் அறிமுகப்படுத்தப்படும். மின்சாரக் கட்டணத்துடன் ரூ.50 வரை நிலைக் கட்டணம் வசூலிக்கும் முறை கைவிடப்படும் என்று தேர்தல் அறிக்கையில் திமுக வாக்குறுதி அளித்திருந்தது. அதனால், மின்சாரக் கட்டணத்தை உயர்த்தும் திட்டம் தமிழக அரசுக்கு இருந்தால் அதை கைவிட வேண்டும். இது குறித்த நிலைப்பாட்டை தமிழ்நாடு அரசு தெளிவுபடுத்த வேண்டும். இவ்வாறு அறிக்கையில் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+