ஹிந்தி முக்கியமான பாடம்.. தமிழ் முக்கியத்துவம் இல்லாத பாடமா ? கொதித்துப் போன அன்புமணி ராமதாஸ்
சென்னை : 10-ம் வகுப்பு சிபிஎஸ்இ தேர்வில் இந்தி மற்றும் ஆங்கிலம் பாடங்கள் முதன்மைப் பாடங்களாகவும் (Major Subjects), தமிழ் உள்ளிட்ட மாநில மொழிப் பாடங்கள் முக்கியத்துவம் இல்லாத (Minor Subjects) பாடங்களாக அறிவிக்கப்பட்டுள்ளதற்கு அன்பு மணி ராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
நவம்பர் 17-ம் தேதி தொடங்கும் பத்தாம் வகுப்பு சிபிஎஸ்இ தேர்வில் இந்தி மற்றும் ஆங்கிலம் உள்ளிட்ட பாடங்கள் முதன்மைப் பாடங்களாகவும் (Major Subjects), தமிழ் உள்ளிட்ட மாநில மொழிப் பாடங்கள் முக்கியத்துவம் இல்லாத (Minor Subjects) பாடங்களாக அறிவிக்கப்பட்டுள்ளதற்கு பஞ்சாப் அரசு கடும்கண்டனம் தெரிவித்துள்ளது. மாநில மொழிகளை அழிக்கும் செயல் என எச்சரித்துள்ளது.
மேலும் சிபிஎஸ்இயின் இந்த செயலுக்கு தமிழகத்திலும் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. 10-ம் வகுப்பு சிபிஎஸ்இ தேர்வில் தமிழ் உள்ளிட்ட மாநில மொழிப் பாடங்களை சிறுமைப்படுத்துவதா என்று அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழ் பாடங்கள்
இதுகுறித்து இன்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவுகளில்," நவம்பர் 17-ம் தேதி தொடங்கும் பத்தாம் வகுப்பு சிபிஎஸ்இ தேர்வில் இந்தி மற்றும் ஆங்கிலம் உள்ளிட்ட பாடங்கள் முதன்மைப் பாடங்களாகவும் (Major Subjects), தமிழ் உள்ளிட்ட மாநில மொழிப் பாடங்கள் முக்கியத்துவம் இல்லாத (Minor Subjects) பாடங்களாகவும் அறிவிக்கப்பட்டுள்ளன.

மதிப்பெண்
முக்கியத்துவம் வாய்ந்த பாடங்களுக்கான தேர்வை சிபிஎஸ்இ அமைப்பே நேரடியாக நடத்தி மதிப்பெண் வழங்குமாம். முக்கியத்துவம் இல்லாத பாடங்களுக்கான தேர்வுகளை அந்தந்தப் பள்ளிகளேயே நடத்தி மதிப்பெண் வழங்கிக் கொள்ளலாமாம். இது நியாயமல்ல.

சிறுமைப்படுத்தக்கூடாது
பத்தாம் வகுப்பு சிபிஎஸ்இ தேர்வுக்கான பாடங்களை முதன்மைப் பாடங்கள், முக்கியத்துவம் இல்லாத பாடங்கள் எனப் பிரித்திருப்பது இதுவே முதல்முறையாகும். இவ்வாறு வகைப்படுத்துவதன் மூலம் தமிழ் உள்ளிட்ட மாநில மொழிப் பாடங்களை சிறுமைப்படுத்த சிபிஎஸ்இ முயல்கிறது. இது கண்டிக்கத்தக்கது.

விரும்பி படிக்க மாட்டார்கள்
தமிழ் உள்ளிட்ட மாநில மொழிப் பாடங்களை முக்கியத்துவமற்ற பாடங்களாக அறிவிப்பதன் மூலம் அவற்றை மாணவர்கள் விரும்பிப் படிக்காத நிலை உருவாகி விடும். அந்த வகையில் இது மாநில மொழிப் பாடங்களுக்கு எதிரான செயல்தான். இதை சிபிஎஸ்இ கைவிட வேண்டும்'' இவ்வாறு அன்புமணி ராமதாஸ் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications