5 ஆண்டுகள்.. முடிவுக்கு வந்த போராட்டம்.. எப்போது அறிக்கையை தாக்கல் செய்கிறது ஆறுமுகசாமி ஆணையம்?
சென்னை : முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்தி வந்த ஆறுமுகசாமி ஆணையம் ஓரிரு நாளில் விசாரணை அறிக்கையை தமிழக அரசிடம் தாக்கல் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Recommended Video
ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணைக்காக அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி ஆணையத்திற்கு 14வது முறையாக வழங்கப்பட்ட கால அவகாசம் நிறைவடைய இருக்கிறது.
இந்நிலையில், எய்ம்ஸ் மருத்துவக்குழுவின் ஆய்வு அறிக்கை ஆறுமுகசாமி ஆணையத்துக்கு அனுப்பப்பட்டுள்ள நிலையில், தமிழக முதல்வரிடம் விரிவான விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்க இருக்கிறது ஆறுமுகசாமி ஆணையம்.
இந்த அறிக்கை சுமார் 500 பக்கங்களில் விரிவாக இருக்கும் என்றும், இந்த அறிக்கை, பல்வேறு முக்கிய தகவல்களைக் கொண்டிருக்கும் என்றும் கூறப்படுகிறது.

ஆறுமுகசாமி ஆணையம்
தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையத்தை அமைத்து 2017ஆம் ஆண்டு செப்டம்பர் 25ஆம் தேதி தமிழக அரசு உத்தரவிட்டது. முதற்கட்டமாக ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் காலம் 3 மாதங்களாக நிர்ணயிக்கப்பட்டது. விசாரணையை தொடங்கிய ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை குறிப்பிட்ட காலத்துக்குள் விசாரணை 2017 டிசம்பர் 24-ஆம் தேதியில் இருந்து 6 மாதங்களுக்கு, ஆணையத்தின் கால அவகாசத்தை தமிழக அரசு முதன்முதலாக நீட்டித்தது.

கால அவகாசம் நீட்டிப்பு
அதன்பின்னர் அடுத்தடுத்து ஆறுமுகசாமி ஆணையத்துக்கு கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுக் கொண்டே வந்தது. கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு கொண்டு வருவது கடுமையான விமர்சனத்தை ஏற்படுத்தி வந்த நிலையில், ஆறுமுகசாமி ஆணையத்துக்கு தடை கோரி அப்பல்லோ மருத்துவமனை சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கில் விசாரணை நடத்திய உச்சநீதிமன்றம், ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை நடத்துவதற்கு 2 ஆண்டுகள் இடைக்கால தடை விதித்தது. மருத்துவக் குழு அமைத்து விசாரணையை நடத்தவும் எய்ம்ஸ் இயக்குனரகத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

விசாரணை நிறைவு
அதன்படி, ஆறுமுகசாமி ஆணையத்துக்கு உதவ 6 உறுப்பினர்களைக் கொண்ட மருத்துவர்கள் குழுவை எய்ம்ஸ் நியமித்தது. அதைத் தொடர்ந்து ஜெயலலிதாவின் மரணம் தொடர்பான ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை தீவிரமாக நடைபெற்று வந்தது. ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை நிறைவு பெற்றதாக ஆறுமுகசாமி ஆணையம் கடந்த ஏப்ரல் மாதம் அறிவித்தது. விசாரணை ஆணையத்தின் அறிக்கை தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

14வது முறையாக நீட்டிப்பு
ஆறுமுகசாமி ஆணைய விசாரணைக்கான கால அவகாசம் ஆகஸ்ட் 3ஆம் தேதி நிறைவடைய இருந்த நிலையில், எய்ம்ஸ் மருத்துவக் குழு வினர் தங்கள் அறிக்கையை தாக்கல் செய்ய கொஞ்சம் அவகாசம் தேவை எனக் கடிதம் எழுதினர். இதனால், மேலும் மூன்று வார காலம் அவகாசம் கேட்டு தமிழக அரசுக்கு ஆறுமுகசாமி ஆணையம் கடிதம் எழுதியது. இதையடுத்து ஆறுமுகசாமி ஆணையத்தின் இறுதி அறிக்கை தாக்கல் செய்வதற்கான அவகாசம் 14வது முறையாக நீட்டிக்கப்பட்டது.

எய்ம்ஸ் குழு அறிக்கை
இந்த நிலையில் ஜெயலலிதாவுக்கு அளித்த சிகிச்சையில் எந்த தவறும் இல்லை என எய்ம்ஸ் மருத்துவக் குழு ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் மூன்று பக்க விசாரணை அறிக்கையை சமர்ப்பித்துள்ளது. எய்ம்ஸ் மருத்துவர் சந்தீப் சேத் தலைமையிலான எய்ம்ஸ் மருத்துவக் குழுவினர், ஜெயலலிதாவுக்கு உரிய சிகிச்சைகள் வழங்கப்பட்டன. அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் எந்த தவறும் இல்லை என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஓரிரு நாட்களில் அறிக்கை தாக்கல்
இந்நிலையில், ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையம் ஓரிரு நாளில் சுமார் 500 பக்கங்கள் கொண்ட விசாரணை அறிக்கையை முதல்வர் ஸ்டாலினிடம் தாக்கல் செய்ய உள்ளது. ஆணையம் அமைக்கப்பட்டு 5 ஆண்டுகளில் 14 முறை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு 158 பேரிடம் ஆணையம் விசாரணையை நிறைவு செய்துள்ள நிலையில், இந்த அறிக்கை அரசிடம் சமர்ப்பிக்கப்பட இருக்கிறது.












Click it and Unblock the Notifications