சென்னையில் பாஜக நிர்வாகி அட்டூழியம்.. வயதான பெண்ணின் வீட்டை பிடுங்கி கொண்டு.. வெளியான ஷாக் தகவல்
சென்னை: சென்னை நீலாங்கரையில் வயதான பெண்ணின் வீட்டை அபகரித்துக்கொண்டு கொலை மிரட்டல் விடுத்ததாக பாஜக நிர்வாகி சிவா அரவிந்த் என்பவரை சென்னை நீலாங்கரை போலீசார் 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
சென்னை பொத்தேரி கிரேட்டர் மான்செஸ்டர் தெருவில் வசிப்பவர் லீனா பெர்ணாண்டஸ் (வயது 55). இவருக்கு சொந்தமாக சென்னை நீலாங்கரையில் வீடு உள்ளது.
அவருக்கு சொந்தமான வீட்டினை பாஜகவைச் சேர்ந்த நிர்வாகி சிவா அரவிந்த் என்பவர் ஆக்கிரமித்து வைத்துள்ளதாக புகார் எழுந்தது. இதுபற்றி லீனா பெர்ணாண்டஸ் சென்னை காவல் ஆணையர் ஆலுவலகத்தில் புகார் அளித்தார்.

கண்ணப்பா நகர்
அந்த புகார் மனுவில், என் பெயர் லீனா பெர்ணாண்டஸ் (வயது 55). சென்னை பொத்தேரி கிரேட்டர் மான்செஸ்டர் தெரு என்ற முகவரியில் வசித்து வருகிறேன், எனது மருமகன் Amer Bin Ahmend Bakaraiba க்கு சொந்தமாக சென்னை மாவட்டம், திருவான்மியூர் வட்டம், கண்ணப்பா நகர் விரிவாக்கம் எண். 308, டெக்கன் நந்தினி வில்லா கார்டனில் உள்ளது.

வெளிநாட்டில் மருத்துவம்
எனது மருமகன் வெளிநாட்டில் உள்ள காரணத்தால் கடந்த 27 பிப்ரவரி 2007 ஆம் ஆண்டு என் கணவர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் அவரின் மூலம் Purchase Authority Power கொடுத்து அதன் அடிப்படையில் மேல் குறிப்பிட்டுள்ள சொத்தினை அந்த நாள் முதல் என் கணவர் பராமரிப்பில் இருந்து வந்தது. இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு என் கணவர் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் வெளி நாட்டிற்கு அழைத்துச் சென்று மருத்துவம் செய்தோம். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் இறந்து விட்டார்.

40000 வாடகை
அவரது இறப்பிற்கு பிறகு நான் மேல் குறிப்பிட்ட சொத்தினை பராமரித்து வந்தேன். பின்னர் ஏசி கம்பெனி என்ற நிறுவனத்தின் உரிமையாளரான திரு. சிவா அரவிந்த் என்பவருக்கு கடந்த 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ரூபாய் 2 லட்சம் முன்தொகையாக பெற்றுக்கொண்டு, மாத வாடகை ரூபாய் 40,000/- த்திற்கு வாடகைக்கு கொடுத்தேன்.

வீட்டை அபகரிக்க முயற்சி
சிவா அரவிந்த் நான்கு மாதங்கள் மட்டுமே வங்கி கணக்கு மூலம் எனது மகள் கணக்கிற்கு 4 மாதம் வாடகை கொடுத்த நிலையில் பின்பு சில மாதங்கள் வாடகை தரவில்லை பின்பு 11 மாத வாடகை நிலுவையில் உள்ள காரணத்தால் அவரை தொடர்பு கொள்ள முயன்றேன். சில நாட்களாக முடியவில்லை பின்பு இங்கு தொடர்பு கொள்ள உள்ள எனது திருவான்மியூர் வீட்டிற்குச் சென்று பார்க்கும் போது அங்கு வேறு ஒரு நபர் இருந்தார்கள். அவர்களை விசாரித்தபோது சிவா அரவிந்த் என்பவர் வீட்டினை மேல் வாடகைக்கு விட்டு இருப்பதாக தெரிவித்தனர்.

17 லட்சம்
இது தொடர்பாக நான் சிவா அரவிந்திடம் விசாரித்தபோது அவர் சில மாதத்தில் காலி செய்து தருவதாக என்னிடம் கூறியிருந்தார். பின்பு விசாரித்தபோது சிவா அரவிந்த் வீட்டினை வேறு ஒருவருக்கு ரூபாய். 17 லட்சத்திற்கு குத்தகைக்கு விட்டு இருப்பது தெரியவந்தது.

நடவடிக்கை தேவை
இது தொடர்பாக நான் சிவா அரவிந்திடம் கேட்டபொழுது என்னை ஆபாசமான வார்த்தையில் திட்டி, உன்னால் என்ன பண்ண முடியுமோ பண்ணிக்கோ நான் ஒன்றிய அரசின் (பாஜக) கட்சியில் முக்கிய பொறுப்பாளராக உள்ளேன். எனக்கு அரசியல் செல்வாக்கும் உள்ளது. என்னை பகைத்துக் கொண்டால் உன்னை இருக்கும் இடம் தெரியாமல் செய்துவிடுவேன். நீ தனியாக இருக்கிறாய் உன்னை ஏதாவது செய்தால் யாருக்கும் தகவல் வராது பார்த்து இருந்துக்கோ என்று கொலை மிரட்டல் விடுத்தார். எனவே ஐயா என்னை மோசடி செய்து வீட்டினை அபகரிக்கும் எண்ணத்தில் எனக்கு கொலை மிரட்டல் விடுத்த சிவா அரவிந்தின் மீது சட்ட நடவடிக்கை எடுத்து மேலே குறிப்பிட்டுள்ள சொத்தினை மீட்டு என்னிடம் தரும்மாறு மிகத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்" இவ்வாறு லீனா பெர்ணாண்டஸ் என்ற பெண் புகாரில் கூறியிருந்தார்.

3 பிரிவின் கீழ் கைது
இந்த புகாரை உடனே விசாரிக்க உத்தரவிட்ட சென்னை காவல் ஆணையரகம், சம்பந்தப்பட்ட காவல்துறைக்கு அனுப்பியது. இதையடுத்து நீலாங்கரை போலீசார் பாஜக நிர்வாகி சிவா அரவிந்த்தை கைது செய்தனர். அவர் மீது கொலை மிரட்டல் விடுத்தது, வீட்டை அபகரிக்க முயன்றது உள்பட மூன்று பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்திருப்பதாக போலீசார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட சிவா அரவிந்திடம் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications