நீட் தேர்வு பாதிப்பு.. நீதிபதி ஏ.கே.ராஜன் குழு அமைக்கப்பட்டதை எதிர்த்து பாஜக வழக்கு
சென்னை :நீட் தேர்வு பாதிப்புகளை ஆராய நீதிபதி ஏ.கே.ராஜன் குழு அமைத்ததற்கான அரசாணையை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் பாஜக வழக்கு தொடர்ந்துள்ளது.
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் உள்ள அனைத்து மருத்துவக்கல்லூரிகளுக்கான மாணவர் சேர்க்கை 'நீட்' நுழைவுத்தேர்வு மூலம் நடத்தப்படுகிறது இந்த தேர்வுக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு உள்ளது.
மாணவர்கள் 12 வருடம் படித்து அதில் பெரும் மதிப்பெண்களை திறமையின் அளவுகோளாக கருதாமல் நாடு முழுவதும் நீட் தேர்வு வைப்பது, நீட் கோச்சிங் மையங்களுக்கே சாதகம் என்று கூறி எதிர்ப்பு உள்ளது. வசதியானர்வர்கள் மட்டுமே நீட் கோச்சிங் செல்ல முடியும் என்பதுடன், அவர்களே மருத்துவர்கள் ஆகும் நிலை உள்ளது என்றும், இந்த முறை கிராமப்புற மாணவர்களை கடுமையாக பாதிக்கும் என்று தமிழகத்தில் எதிர்ப்பு உள்ளது.

சட்டம் ஏற்கப்படவில்லை
மேலும் பிளஸ்-2 மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கை நடைபெற வேண்டும் என்ற கோரிக்கையை அதிமுக, திமுக இரண்டுமே வலியுறுத்தி வருகின்றன. ஆனால் மத்திய அரசு இதை ஏற்க மறுத்துவிட்டது. மத்திய அரசு ஏற்காததால் நீட் தேர்வு தொடர்பாக தமிழக சட்டசபையில் கடந்த அதிமுக அரசு நிறைவேற்றிய தீர்மானத்தையும் குடியரசுத் தலைவர் திருப்பி அனுப்பிவிட்டார்.

நீதிபதி குழு அமைப்பு
இந்நிலையில் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று வாக்குறுதி கொடுத்த திமுக, தற்போது ஆட்சி பொறுப்புக்கு வந்துள்ளது. நீட் தேர்வை ரத்து செய்வது தொடர்பாக ஆராய ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்துள்ளது தமிழக அரசு. சமூகத்தில் பின் தங்கிய மாணவர்களுக்கு நீட் தேர்வு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதா என்று ஆராய, ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில், 8 பேர் கொண்ட உயர்மட்ட குழுவை அமைத்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார்.

எதிராக அதிக கருத்து
அந்த குழு இன்றுடன் 3 முறை கூடி ஆலோசனை நடத்தி உள்ளது. செய்தியாளர்களிடம் இது தொடர்பாக பேசிய ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே. ராஜன், 86,342 பேர் நீட் தேர்வு குறித்து கருத்துத் தெரிவித்துள்ளனர். நீட் தேர்வு வேண்டாம் என பலரும் கருத்துகள் தெரிவித்துள்ளனர். நீட் தேர்வுக்கு ஆதரவாகவும் கருத்துகள் வந்துள்ளன. நீட் குறித்து சிலர் விரிவான கருத்துகளை தெரிவித்துள்ளனர். அனைத்து கருத்தகளும் ஆராயப்பட்ட பிறகே அறிக்கை தாக்கல் செய்யப்படும். அனைத்துக் கருத்துகளும் நன்கு ஆராய்ந்து அறிக்கை தாக்கல் செய்யப்படும். ஒரு மாதத்துக்குள் ஆய்வை முடிக்க முயற்சிக்கிறோம். ஆய்வு முடியாவிட்டால் தள்ளிப் போகவும் வாய்ப்புள்ளது. 4-ஆம் கட்ட ஆலோசனை ஜூலை 4ஆம் தேதி நடைபெறும் என்றார்.

கரு.நாகராஜன்
இந்நிலையில் தமிழக பாஜக பொதுச் செயலாளர் கரு.நாகராஜன் நீட் தேர்வு பாதிப்புகளை ஆராய நீதிபதி ஏ.கே.ராஜன் குழு அமைத்ததற்கான அரசாணையை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் இந்த ஆண்டு நீட் தேர்வுக்கு மாணவர்கள் தயாராக வேண்டும் என்று ஏற்கனவே சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்,












Click it and Unblock the Notifications