மக்களே உஷார்.. கொடுங்கையூரில் நடந்த சம்பவத்தை கேள்விப்பட்டீங்களா.. எப்படியெல்லாம் ஏமாற்றுராங்கப்பா
சென்னை: சென்னை கொடுங்கையூரில் கேபிள் டிவி ரிப்பேர் செய்ய வந்தவர்கள் வீட்டில் இருந்த நகை மற்றும் பணத்தை திருடிய புகாரில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
கேபிள் டிவி ரிப்பேர் செய்ய வந்துள்ளதாக கூறிய நபர்கள் வீட்டில் மூதாட்டி தனியாக இருப்பதை தெரிந்து கொண்டு கைவரிசையை காட்டியதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நகை, பணம் திருடியதாக மூதாட்டி தந்த புகாரில் 3 பேரை கைது செய்த போலீசார் நகை மற்றும் பணத்தை அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்துள்ளனர்.

சென்னை கொடுங்கையூர் திருவள்ளூர் நகரில் சாந்தி என்ற மூதாட்டி வசித்து வருகிறார். இவரது கணவர் கிருஷ்ண மூர்த்தி ஏற்கனவே இறந்துவிட்ட நிலையில், சாந்தி தனியாக வசித்து வந்தார். இந்நிலையில் இவர்களது வீட்டில் உள்ள கேபிள் டிவி சில நாட்களாக பழுது ஏற்பட்டுள்ளது. இதை அடுத்து சம்பந்தப்பட்ட தனியார் டிஷ் டிவி நிறுவனத்திற்கு சாந்தி புகார் அளித்திருந்தார். அதன் பின்னர் டிசம்பர் மாதம் 25ம் தேதி கேபிள் டிவி பிரச்சனையை சரி செய்ய தனியார் டிஷ் டிவி நிறுவன ஊழியர்கள் 3 பேர் வந்துள்ளனர்.
மூதாட்டி சாந்தி வீட்டில்தனியாக வசிப்பதை தெரிந்து கொண்ட ஊழியர்கள் ரிப்பேரை சரி செய்வதாக கூறி 3 முறை வீட்டிற்கு வந்து சென்றுள்ளனர். வீட்டில் ரிப்பேர் செய்யும்போது சாந்தியின் கவனத்தை அவ்வப்போது திசை திருப்பி வீட்டில் கிடைத்தவற்றை சுருட்டியதாக தெரிகிறது. இந்நிலையில் கேபிள் டிவி ஊழியர்கள் வந்து சென்ற ஒரு வாரம் கழித்து சாந்தி பீரோவில் உள்ள பொருட்களை சரி பார்த்துள்ளார்.
அப்போதுதான் பீரோவில் வைத்திருந்த 4 சவரன் தங்க நகைகள், 37 ஆயிரம் ரூபாய் பணம் திருடு போனதை கண்டு அதிர்ச்சி அடைந்து உள்ளார் சாந்தி. இது தொடர்பாக கொடுங்கையூர் போலீசாரிடம் புகார் அளித்தார். சாந்தியின் புகாரை ஏற்றுக்கொண்ட போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வந்தனர். இந்நிலையில் கேபிள் டிவி ஆபரேட்டர் மோகன், உடந்தையாக இருந்த தண்டையார் பேட்டை மாரிமுத்து, லட்சுமிபுரம் ராஜா ஆகியோரை போலீசார் கைது செய்தனர். 3 பேரிடம் இருந்து 4 சவரன் தங்கச் செயின் மற்றும் 5 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்தனர். இதையடுத்து 3 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார் பின்னர் சிறையில் அடைத்தனர்.












Click it and Unblock the Notifications