வன்னியர்களுக்கு 10.5% உள் ஒதுக்கீட்டை ரத்து செய்தது சமூகநீதிக்கு எதிரானது - வேல்முருகன் கொதிப்பு
சென்னை: வன்னியர்களுக்கான 10.5 விழுக்காடு உள்ஒதுக்கீடு செல்லாது என உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு சமூக நீதிக்கு எதிரானது என தமிழ்நாடு வாழ்வுரிமைக் கட்சித் தலைவரும் எம்.எல்.ஏவுமான வேல்முருகன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு வழிவகை செய்யும் வகையில், 10.5 விழுக்காடு உள்ஒதுக்கீடு தமிழ்நாடு அரசால் நிறைவேற்றப்பட்டது.
இந்த இட ஒதுக்கீட்டை ரத்து செய்யக்கோரி, உயர்நீதிமன்ற மதுரைகிளையில் சிலர் உள்நோக்கத்துடன் வழக்கு தொடர்ந்திருந்தனர். இவ்வழக்கில், இட ஒதுக்கீட்டுக்கான சட்டம் சரியான தரவுகளுடன் இயற்றப்படவில்லை என்று கூறியதோடு, 10.5 விழுக்காடு உள் ஒதுக்கீடு செல்லாது என உயர்நீதிமன்ற மதுரைகிளை உத்தரவிட்டது.

சமூக நீதிக்கு எதிரான தீர்ப்பு
இந்த உத்தரவை எதிர்த்து, தமிழ்நாடு அரசு தரப்பிலும், தமிழக வாழ்வுரிமைக் கட்சி மற்றும் பல்வேறு வன்னியர் அமைப்புகள் சார்பிலும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இச்சூழலில், வன்னியர்களுக்கான 10.5 விழுக்காடு உள்ஒதுக்கீடு செல்லாது என உயர் நீதிமன்ற மதுரைகிளை அளித்துள்ள தீர்ப்பை, உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது. இத்தீர்ப்பு என்பது வேதனையையும் மனவருத்தத்தையும் ஏற்படுத்துவதோடு மட்டுமின்றி, சமூக நீதிக்கு எதிரானது.

69% இட ஒதுக்கீட்டிற்கும் பாதிப்பை ஏற்படும்
தமிழ்நாட்டில் இதுவரை வழங்கப்பட்ட இஸ்லாமியர்கள் உள் இடஒதுக்கீடு, அருந்ததியர் உள் இட ஒதுக்கீடு ஆகியவற்றுக்கு சென்னை உயர் நீதிமன்றமோ, உச்ச நீதிமன்றமோ தடை விதிக்காத நிலையில், வன்னியர்கள் உள் இடஒதுக்கீட்டுக்கு மட்டும் உச்ச நீதிமன்றம் தடை விதித்திருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு, வன்னியர்களுக்கு மட்டுமின்றி, தமிழ்நாட்டில் நடைமுறையில் உள்ள 69 விழுக்காடு இட ஒதுக்கீட்டிற்கும் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்.

மாணவர்கள் எதிர்காலத்தை கருத்தில்கொள்ளாமல் தீர்ப்பு
வன்னியர்கள் உள் இட ஒதுக்கீட்டுச் சட்டம் நிறைவேற்றப்பட்ட பிறகு, அதன் அடிப்படையில் லட்சக்கணக்கான மாணவர்கள் உயர்கல்வி நிறுவனங்களில் சேர்ந்துள்ளனர். ஆனால், அவர்களின் நலனையும் எதிர்காலத்தையும் கருத்தில் கொள்ளாமல் உச்சநீதிமன்றம் இப்படி ஒரு தீர்ப்பை வழங்கியிருப்பது, அச்சமுதாய மாணவர்களை பெரும் கவலையில் ஆழ்த்தியுள்ளது.

10.5% உள் ஒதுக்கீடு சட்டத்தை நிறைவேற்ற வேண்டும்
எனவே, வன்னியர்களுக்கான 10.5 விழுக்காடு இட ஒதுக்கீடு விவகாரத்தில் ஒரு குழுவை அமைப்பதோடு, அடுத்து வரும் சட்டமன்ற கூட்டத் தொடரிலேயே வன்னியர்களுக்கான 10.5 விழுக்காடு இட ஒதுக்கீடு மசோதாவை மீண்டும் கொண்டு வந்து, சட்ட ரீதியாகவோ, புள்ளி விபரங்கள் அடிப்படையிலோ, இதனை உயர்நீதிமன்றமோ, உச்சநீதிமன்றமோ தடுத்திடாத வகையில், புதிய சட்டத்தை இயற்றிட தமிழ்நாடு மாண்புமிகு முதல்வர் அவர்கள் முன்வர வேண்டுமென்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் வேண்டுகோள் விடுக்கிறேன்.

சாதிவாரி கணக்கெடுப்பு வேண்டும்
மேலும், தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தி அனைத்து சமூகத்தினருக்கும், உரிய இட ஒதுக்கீட்டை அவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்றவாறு வழங்கிட வலியுறுத்துவதோடு, சமூக நீதிக்கான போராட்டங்களை தமிழக வாழ்வுரிமைக் கட்சி தொடர்ந்து முன்னெடுக்கும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் தெரிவித்துக்கொள்கிறேன்." என்றார்.












Click it and Unblock the Notifications