ரூ20,000 முதல் ரூ1.50 லட்சம் வரை-ஒருநாள் கொரோனா அபராதத்துக்கு டார்கெட் நிர்ணயித்த சென்னை மாநகராட்சி
சென்னை: சென்னை மாநகராட்சியில் கொரோனா கட்டுப்பாடுகளை மீறியவர்களிடம் இருந்து நாள்தோறும் ரூ20,000 முதல் ரூ1.50 லட்சம் வரை அபராதம் வசூலிக்க வேண்டும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் பிறப்பித்திருக்கும் உத்தரவால் சர்ச்சை வெடித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. குறிப்பாக சென்னை நகரில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 1,000த்தை தாண்டியதாக இருந்த் வருகிறது.

சென்னையில் அபராதம்
இதனால் தமிழகம் முழுவதும் நாளை முதல் கட்டுப்பாடுகள் அமலுக்கு வருகின்றன. சென்னையில் பொது இடங்களில் முக கவசம் அணியாமல் சென்றால் ரூ200 அபராதம் விதிக்கப்படும் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

15 மண்டலன்ங்கள்
இது தொடர்பான சென்னை மாநகராட்சியின் உத்தரவில் இடம்பெற்றுள்ள இன்னொரு விவகாரம்தான் இப்போது சர்ச்சையாகி உள்ளது. அதாவது சென்னை மாநகராட்சியில் மொத்தம் 15 மண்டலங்கள் உள்ளன.

அபராதம் இலக்கு
இந்த 15 மண்டலங்களிலும் கொரோனா தொடர்பான ஒருநாள் அபராதத் தொகை இவ்வளவு வசூலித்தாக வேண்டும் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் மண்டல அலுவலர்கள், தங்களது கட்டுப்பாட்டின் கீழ் பணிபுரியும் அலுவலர்களைக் கொண்டு விதி மீறுபவர்களிடம் இருந்து அபராதத் தொகையை இந்த இலக்கின்படி வசூலித்து சென்னை மாநகராட்சி கருவூலத்தில் உடனுக்குடன் செலுத்த வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

ரூ20,000 குறைவு
ஒவ்வொரு மண்டலத்துக்குமான அபராதத் தொகை வித்தியாசப்படுகிறது. உதாரணமாக் மண்டலம் 1, 2- ஆகியவற்றுக்கு தலா ரூ25,000 அபராதத் தொகை இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுதான் மிகக் குறைவான தொகை

அதிகபட்சம் ரூ1.50 லட்சம்
5-வது, 9-வது மண்டலங்களுக்கான அபராதத் தொகை இலக்கு ரூ1,50,000 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 10-வது மண்டலத்துக்கு ரூ1,25,000 என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களிடம் ஒருநாளைக்கு மொத்தம் ரூ10 லட்சம் வசூலித்துதான் ஆக வேண்டும் என்கிற இந்த சென்னை மாநகராட்சி ஆணையரின் உத்தரவு சர்ச்சையாகி உள்ளது.