சென்னையில் முடங்கிய மெட்ரோ ரயில் சேவை.. 2 மணிநேரம் தவித்த பயணிகள்.. என்ன காரணம்?
சென்னை: சென்னையில் இன்று உயர் மின்அழுத்த கேபிளில் ஏற்பட்ட பிரச்சனையால் மெட்ரோ ரயில் சேவை பாதிக்கப்பட்டது. சுமார் 2 மணிநேரம் வரை பயணிகள் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து ஊழியர்கள் பிரச்சனையை சரிசெய்த நிலையில் மீண்டும் மெட்ரோ ரயில் சேவை இயல்பு நிலைக்கு வந்தது.
சென்னையில் உள்ள முக்கிய பொது போக்குவரத்தில் மெட்ரோ ரயில் சேவை முக்கியமான ஒன்றாகும். தினந்தோறும் ஏராளமான மக்கள் மெட்ரோ ரயிலில் பயணம் செய்து வருகின்றனர்.
சென்னையில் நிலவும் போக்குவரத்து பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வகையில் இந்த மெட்ரோ ரயில் சேவைகள் தொடங்கப்பட்ட நிலையில் நல்ல வரவேற்பு உள்ளது.

2 வழித்தடங்களில் மெட்ரோ
சென்னையில் தற்போது மெட்ரோ ரயில் 2 வழித்தடங்களில் இயக்கப்பட்டு வருகிறது. அதன்படி சென்னை விம்கோ நகரில் இருந்து அண்ணா சாலை வழியாக விமான நிலையம் வரையும், சென்னை சென்ட்ரலில் இருந்து கோயம்பேடு வழியாக விமான நிலையம் வரையும், கோயம்பேடு வழியாக செயின்ட் தாமஸ் மவுண்ட் வரையும் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

பயணிகள் எண்ணிக்கை அதிகம்
இந்த மெட்ரோ ரயில்களில் வார நாட்களில் தினமும் 2.15 லட்சம் முதல் 2.20 லட்சம் பேர் பயணம் செய்து வருகின்றனர். பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், தனியார் ஊழியர்கள், அரசு ஊழியர்கள் என அனைத்து தரப்பு மக்களும் இந்த மெட்ரோ ரயில் மூலம் பயனடைந்து வருகின்றனர். தற்போது மழைக்காலம் என்பதால் மெட்ரோ ரயிலில் பயணம் மேற்கொள்ளும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

மெட்ரோ ரயில் சேவை பாதிப்பு
இன்று மாலையில் சென்னை மெட்ரோவில் பயணம் செய்ய ஏராளமான பயணிகள் வந்திருந்தனர். இந்நிலையில் தான் சென்னை கோயம்பேடு முதல் செயிண்ட் தாமஸ் மவுண்ட் இடையேயான மெட்ரோ ரயில் சேவையில் இன்று மாலை சுமார் 6 மணியளவில் திடீரென்று பிரச்சனை ஏற்பட்டது. இதனால் அந்த வழித்தடத்தில் மெட்ரோ ரயில் சேவை பாதிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

என்ன பிரச்சனை
இதுபற்றி மெட்ரோ ரயில் நிறுவனம் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. அதன்படி, ‛‛சென்னை கோயம்பேடு, செயின்ட் தாமஸ் மவுண்ட் இடையே உயர் அழுத்த மின் கேபிளில் கோளாறு ஏற்பட்டது. இதனால் ஒவ்வொரு 20 நிமிடங்களுக்கு ஒரு முறை மட்டுமே வழித்தடத்தில் டவுன்லைனில் (சிங்கிள் லைன்) மெட்ரோ ரயில் இயக்கப்படுகின்றன. சென்ட்ரல்-ஏர்போர்ட் இடையேயான சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டு உள்ளது.'' என விளக்கம் அளிக்கப்பட்டு இருந்தது.

மீண்டும் இயக்கம்
இதன் தொடர்ச்சியாக இந்த பிரச்சனை சரிசெய்யப்பட்டது. இதையடுத்து மீண்டும் மெட்ரோ ரயில் சேவைகள் இரவு 8 மணிக்கு வழக்கம்போல் இயக்கப்பட்டன. சென்ட்ரல்-ஏர்போர்ட் இடையேயான சேவையும் மீண்டும் துவங்கப்பட்டது. இந்த பிரச்சனையால் ஏறக்குறைய 2 மணிநேரம் வரை மெட்ரோ பயணிகள் பாதிப்புக்கு உள்ளாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications