மூஞ்சிய பாத்தாலே MBCயா BCயானு சொல்லிருவேன்! அதிரவைத்த அனுராதா! சென்னை பச்சையப்பன் கல்லூரியில் ஷாக்!
சென்னை : மாணவர்களின் முகத்தைப் பார்த்தாலே பி.சி.யா, எம்.பி.சி.யா, அல்லது எஸ்.சி.யா என தெரிந்துவிடும் என சென்னை பச்சையப்பன் கல்லூரி தமிழ் துறை பெண் பேராசிரியர் ஒருவர் பேசி இருப்பது தமிழகம் முழுவதும் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.
Recommended Video
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக கல்வி நிலையங்களில் சாதி ரீதியான சர்ச்சைகளும் மாணவர்களை ஜாதி ரீதியாக பிரிப்பதும் அதிகரித்து வருகிறது.
குறிப்பாக ஜாதிகள் இல்லையடி பாப்பா என்று பாடம் சொல்லு மாணவர்களுக்கு ஒற்றுமையையும் சமத்துவத்தையும் வளர்க்க வேண்டிய ஆசிரியர்களே இதுபோன்ற அதிர்ச்சி தரும் செயல்களில் ஈடுபடுவது கடும் கண்டனங்களை பெற்று வருகிறது.

சாதி சர்ச்சை
பள்ளிகளில் சாதி சாயம் இருக்கக் கூடாது என்பதற்காக கைகளில் சாதி அடையாளம் கயிறுகளை கூட கட்டுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் ஆசிரியர்கள் சிலர் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவது மிகவும் கண்டனத்திற்குரியது என கல்வியாளர்கள் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு தென் மாவட்டத்தை சேர்ந்த ஒரு ஆசிரியை தனது மாணவனுடன் சாதி ரீதியாக பேசும் ஒரு ஆடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் எல்லோரும் சமம் தானே என அந்த மாணவன் பதில் அளிக்க அது தமிழகம் முழுவதும் பரவலாக பேசப்பட்டது.

என்ன சாதி
இந்நிலையில் தமிழகத்தின் தலைநகரான சென்னையில் கல்லூரி மாணவிகள் மத்தியில் ஆசிரியை ஒருவர் சாதி ரீதியாக பேசியிருக்கின்ற நிகழ்வானது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் உள்ள பிரபல கல்லூரியான பச்சையப்பன் கல்லூரியில் தமிழ்த்துறை தலைவராக பணியாற்றி வரும் பேராசிரியை அனுராதா என்பவர் தான் இந்த சர்ச்சையில் சிக்கி உள்ளார். கல்லூரியில் தனது துறை சார்ந்த மாணவர்களிடம் செல்போனில் பேசிய அனுராதா அப்போது சாதிய மாறுபாடுகளை மாணவர்கள் மத்தியில் விதைக்கும் வகையில் பேசி இருக்கிறார்.

அனுராதாவின் ஆடியோ
தற்போது அந்த ஆடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி கடும் விவாதங்களை ஏற்படுத்தி இருக்கிறது. ஆடியோவில் பேசும் அனுராதா "காலேஜுக்கு வரும் மாணவர்களின் முகத்தை பார்த்தாலே பிசியா எம்பிசியா அல்லது எஸ்சியா தெரிந்துவிடும். நீ என்ன கம்யூனிட்டி என்பது கூட எனக்கு தெரியாது. நீ என்ன கம்யூனிட்டி" என கேட்கிறார். மேலும் தனது வகுப்பில் படிக்கும் துறை சார்ந்த மாணவர்கள் பெயரை சொல்லும் அவர் அவர்களின் ஜாதி என்ன என கேட்கிறார்.

கடும் அதிர்வலைகள்
இந்த ஆடியோ தற்போது வெளியாகி கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் மாணவர்கள் மத்தியில் சாதிய பாகுபாடுகளை உண்டாக்கும் வகையில் தமிழ் துறை பேராசிரியர் ஒருவர் பேசி இருப்பது கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. தற்போது மட்டுமல்ல கடந்தாண்டு இதே போல் தான் அனுராதா பேசினார் எனவும், இதன் காரணமாக அவர் காஞ்சிபுரத்துக்கு மாற்றப்பட்டதாக கூறப்படுகிறது. மீண்டும் நீதிமன்றத்தில் தடைபெற்று சென்னைக்கே வந்துள்ள அனுராதா தற்போது அதே சர்ச்சையில் சிக்கி இருக்கிறார் என்கிற விவரம் தெரிந்தவர்கள்.