தொடர் கனமழை... வடியாத வெள்ளம் 6 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
பருமழை நீடிப்பதால் பல பகுதிகளில் வெள்ளம் வடியாமல் உள்ளது. தமிழகத்தில் சென்னை உள்பட 6 மாவட்டங்களுக்கு தொடர் மழை காரணமாக அனைத்துப் பள்ளி, கல்லூரிகளுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை: சென்னை, திருவள்ளூர் மாவட்டத்தில் தொடர்மழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்மழை காரணமாக செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
Recommended Video
வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று முன்தினம் கரையைக் கடந்தது. தாழ்வு மண்டலம் கரையை கடந்த போது காற்றின் வேகம் 45 முதல் 55 கி.மீ வேகத்தில் வீசியது.
சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் வெள்ளநீர் தேங்கியுள்ளது.சாலைகள், குடியிருப்புகளுக்குள் புகுந்துள்ள வெள்ளநீரை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் 3 வது நாளாக இன்றும் கனமழை நீடிக்கிறது.

எங்கெங்கு மழை
இன்றைய தினம் வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல், பெரம்பலூர் ,திருச்சிராப்பள்ளி, மதுரை, விருதுநகர் தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் மிதமான மழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.

முடங்கிய மக்கள்
சென்னை,செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் பல பகுதிகளில் கனமழையால் தேங்கிய வெள்ளநீர் வடியாமல் உள்ளது. அத்தியாவசிய பொருட்களை வாங்கக் கூட வெளியே வர முடியாமல் மக்கள் தவித்து வருகின்றனர். நீலகிரி, குமரி மாவட்டங்களிலும் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.

விடுமுறை அறிவிப்பு
பல பள்ளிகள் நிவாரண முகாம்களாக செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில் தமிழகத்தில் சென்னை உள்பட 6 மாவட்டங்களுக்கு தொடர் மழை காரணமாக அனைத்துப் பள்ளி, கல்லூரிகளுக்கும் இன்று விடுமுறை அளிக்கப்படுகிறது என அறிவிக்கப்பட்டு உள்ளது.

4 மாவட்டங்கள்
சென்னை, திருவள்ளூர், நீலகிரி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்படுகிறது என அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.

செங்கல்பட்டு காஞ்சிபுரம்
இதேபோல், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படுகிறது என அந்தந்த நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனிடையே வங்கக் கடலில் இன்று புதிய காற்றழுத்தம் உருவாக உள்ளதாகவும் அதன் காரணமாக கனமழை நீடிக்கும் எனவும் வானிலை மையம் அறிவித்துள்ளது.

தென் மாவட்டங்களில் மழை
திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், ஈரோடு, நீலகிரி, கோயம்புத்தூர், தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், புதுவை, காரைக்கால் கடலூர் மற்றும் ஏனைய வட உள் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
நெல்லை மாவட்டம் வள்ளியூர் கல்வி மாவட்டத்திற்கு உட்பட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர் மழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications