சென்னையில் அதிகாலையில் திறக்கப்பட்ட ஆலயங்கள் - கண் குளிர சாமி தரிசனம் செய்த பக்தர்கள்
சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூரில் அதிகாலை முதல் ஆலயங்கள் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய திறக்கப்பட்டன. காலை முதலே கோவிலுக்கு வந்த பக்தர்கள் கண் குளிர இறைவனை தரிசனம் செய்து வருகின்றனர்.
சென்னை: தமிழகத்தில் கூடுதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு இன்று காலை முதல் அமலுக்கு வந்துள்ளது. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் அதிகாலை முதல் ஆலயங்கள் பக்தர்கள் தரிசனத்திற்காக திறக்கப்பட்டன. 35 நாட்களுக்குப் பிறகு ஆலயங்கள் திறக்கப்பட்டதால் பக்தர்கள் காலை முதலே கோவிலுக்கு வந்து கண் குளிர சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
தமிழகத்தில் கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், பெருமளவில் தளர்வுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. வகை 1ல் உள்ள சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள அனைத்து கோவில், தேவாலயங்கள் மற்றும் மசூதிகளும் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளன.

இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிடப்பட்டுள்ளன. அதில் கோயில்களின் நுழைவுவாயிலில் கிருமி நாசினி வைப்பதுடன், கை, கால்களை சுத்தம் செய்வதற்கான ஏற்பாடுகளுடன், உடல் வெப்ப அளவை பரிசோதிக்கும் தெர்மல் ஸ்கேன் வசதியை ஏற்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பக்தர்களுக்கு இருமல், சளி போன்ற நோய் அறிகுறி இருந்தால் உள்ளே அனுமதிக்க கூடாது என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. கோயில்களுக்கு வரும் பக்தர்களுக்கு தீர்த்தம், திருநீறு, குங்குமம் உட்பட பிரசாதம் ஏதும் வழங்கக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. தனிமனித இடைவெளியைப் பின்பற்றி தரிசனம் மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் 10ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆலயங்களில் நேற்று முதலே சுத்தப்படுத்தப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. சென்னை மயிலாப்பூரில் உள்ள கபாலீஸ்வரர், காரணீஸ்வரர் ஆலயங்களிலும் பக்தர்கள் தரிசனத்திற்காக அனுமதிக்கப்பட்டனர். காலை 6 மணி முதலே பக்தர்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து கண் குளிர சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications