புது ரூல்ஸ்.. சென்னையில் வாகனங்களை விரட்டி விரட்டி பிடித்த போலீஸ்! முதல் நாளில் கிடைத்த 15 லட்சம்
சென்னை: போக்குவரத்து விதிகளை மீறுவோருக்கான அபராத தொகையை உயர்த்தும் மத்திய அரசின் திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டம் தமிழ்நாட்டில் நேற்று அமலுக்கு வந்தது. முதல் நாளான நேற்று சென்னையில் போக்குவரத்து விதிகளை மீறியவர்களை போலீசார் விரட்டி விரட்டி பிடித்து ஒரேநாளில் பல லட்சம் ரூபாயை அபராதமாக வசூலித்தனர். அதன் விபரம் வருமாறு:
இந்தியாவில் சாலை விபத்துகளால் தினமும் ஏராளமானவர்கள் இறந்து வருகின்றனர். மேலும் பலர் படுகாயமடைந்து வுருகின்றனர்.
போக்குவரத்து விதிகளை மீறி வாகனங்களை இயக்குவது தான் பெரும்பாலான விபத்துக்கு காரணமாக உள்ளது. இதனால் சாலை விபத்துக்களை தடுக்கும் மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வந்தது.

சட்டத்திருத்தம்
அதன்படி புதிய மோட்டார் வாகன திருத்த சட்டத்தை கடந்த 2019ம் ஆண்டு மத்திய அரசு கொண்டு வந்தது. இந்த சட்டத்தின்படி போக்குவரத்து விதிகளை மீறுவோரிடம் வசூலிக்கப்படும் அபராத தொகை என்பது பல மடங்கு உயர்த்தப்பட்டது. இந்த புதிய மோட்டார் வாகன திருத்த சட்டத்தை தமிழ்நாட்டில் அமல்படுத்த அரசாணை பிறப்பிக்கப்பட்டது. அதன்படி தமிழ்நாட்டில் நேற்று முதல் புதிய மோட்டார் வாகன திருத்த சட்டம் அமலுக்கு வந்தது.

அபராதத்தொகை உயர்வு
இதன்மூலம் ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள் உள்ளிட்ட உயிர்காக்கும் வாகனங்களுக்கு வழிவிடாமல் செல்லுதல், அதிவேகமாக வாகனம் ஓட்டுதல், பைக் ரேஸில் ஈடுபடுதல் உள்ளிட்டவற்றுக்கு ரூ.10 ஆயிரம் அபராதமாக நிர்ணயம் செய்யப்ப்டடுள்ளது. உரிய ஆவணங்கள் இன்றி வாகனம் ஓட்டினால் ரூ.5 ஆயிரம், செல்போன் பேசி வாகனம் ஓட்டினால் ரூ.100, சீட்பெல்ட் அணியாமல் வாகனம் ஓட்டினால் ரூ.1000, இன்சூரன்ஸ் இல்லாவிட்டால் ரூ.2 ஆயிரம் என அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

சென்னையில் ரூ.15 லட்சம் வசூல்
அதன்படி சென்னையில் நேற்று பல இடங்களில் போக்குவரத்து போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். போக்குவரத்து விதிகளை மீறியதாக 2,500 பேர் சிக்கினர். முதல் நாளான நேற்று ஒரே நாளில் இந்த 2,500 வாகன ஓட்டிகள் மீது திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டத்தின் படி வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இவர்களிடம் இருந்து ரூ. 15 லட்சம் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகர போக்குவரத்து காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிற மாவட்டங்களில் நடவடிக்கை
இதேபோல் தமிழ்நாட்டின் பிற மாவட்டங்களிலும் நேற்று போக்குவரத்து போலீசார் தீவிர வாகன சோதனை நடத்தி விதிகளை மீறியவர்களுக்கு அபராதம் விதித்தனர். அபராதத்தொகையை கேட்டு பலர் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். குறிப்பாக மதுபோதையில் வாகனம் ஓட்டியவர்கள் தகராறில் ஈடுபட்டனர். அதேவேளையில் சிலர் தங்களை விட்டுவிடும்படி கெஞ்சினர். மேலும் முதல் நாள் என்பதால் சில இடங்களில் பொதுமக்களை எச்சரித்து போலீசார் அனுப்பினர்.












Click it and Unblock the Notifications