எங்கள் நாட்டில் யோகா ரொம்ப காஸ்ட்லி.. ஆனா தமிழகத்தில் இலவசமா?.. நெகிழ்ந்த செஸ் ஒலிம்பியாட் வீரர்
சென்னை: எங்கள் நாடுகளில் யோகா பயிற்சியை கற்றுக் கொள்ள அதிக பணம் செலவிடும் நிலை உள்ளது. ஆனால் இந்தியாவில் இலவசமாக சொல்லி தருகிறீர்கள் என செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கு வந்த வீரர் ஒருவர் நெகிழ்ந்ததுடன் தமிழக அரசுக்கு அவர் நன்றியும் தெரிவித்துள்ளார்.
Recommended Video
சென்னை மாமல்லபுரத்தில் பூஞ்சேரியில் 44 ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டி கடந்த 28 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் 187 நாடுகளை சேர்ந்த 2500 வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர்.
இந்த போட்டிகள் வரும் ஆகஸ்ட் 9-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த போட்டியில் கலந்து கொண்ட வீரர்கள், வீராங்கனைகளுக்கு அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவமனை சார்பில் யோகா பயிற்சிகள் கொடுக்கப்பட்டு வருகின்றன.

மருத்துவர்கள்
இந்த பயிற்சியை 60-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் கலந்து கொண்டு பயிற்சி அளித்து வருகிறார்கள். இதுகுறித்து அரசு மருத்துவர் ஒய் தீபா ஒன் இந்தியாவுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில் வீரர், வீராங்கனைகளின் மனஅழுத்தம் குறைப்பதற்கும் விளையாட்டில் கவனம் செலுத்தி விளையாட வேண்டும் என்பதற்காகவும் அரசு சார்பில் இந்த பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.

21 ஹோட்டல்கள்
21 நட்சத்திர ஹோட்டல்களில் தங்கியுள்ள இந்த வீரர்களுக்கு இந்த பயிற்சி அளிக்கப்படுகிறது. குறிப்பாக தாடாசனம், விருக்ஷாசனம், அர்த்தக்கட்டி சக்ராசனம், புஜங்காசனம், மர்ஜரி ஆசனம், உத்தான பாதாசனம், கட்டி சக்ராசனம் ஆகிய ஆசனங்கள் அவர்களுடைய மனசோர்வை நீக்க வழங்கப்படுகிறது. இதனுடன் மூச்சு பயிற்சி, பிராமரி பிராணயாமம், பிராண முத்திரை, இருதய முத்திரை, யோகா நித்திரை, கண் பார்வைக்கு உகந்த த்ராடகம், சைக்கிக் மெடிடேஷன் உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன.

வீரர், வீராங்கனை
மேலும் வீரர்கள், வீராங்கனைக்கு ஏற்படும் அசவுகரியங்களை போக்க அக்குபிரசர் கொடுக்கப்படுகின்றன. லாஃப்பிங் தெரபி, கிளாப்பிங் தெரபி ஆகியவற்றையும் கொடுக்கிறார்கள். இந்த யோகா பயிற்சிகளை செய்த வெளிநாட்டு வீரர்கள் தமிழக அரசை வெகுவாக பாராட்டியுள்ளார்கள். இதுகுறித்து வீரர் ஒருவர் கூறுகையில் இது போன்ற யோகா பயிற்சிகள் எங்கள் நாடுகளில் மிக அதிக பணம் கொடுத்து கற்றுக் கொள்ள வேண்டும்.

இலவசம்
ஆனால் இந்தியாவில் எங்களுக்கு இலவசமாக சொல்லித் தருகிறீர்கள். போட்டிகள் முடிந்து ஊருக்கு போனாலும் தினமும் இந்த ஆசனங்களை செய்வேன் என்றார். இந்த பயிற்சி மேற்கொண்ட வெளிநாட்டு வீராங்கனை ஒருவர் இதுவரை எனது மனம் இந்த அளவுக்கு ரிலாக்ஸ்டு ஆனதில்லை என ஆனந்த கண்ணீர் விட்டார். மேலும் சில வீராங்கனைகள், சைக்கிள் மெடிடேஷனை தமிழக அரசு சார்பில் வீடியோவாக பதிவு செய்ய வேண்டும். அதை எங்கள் நாட்டினரும் பார்த்து தெரிந்து ஆரோக்கிய வாழ்வை வாழ வேண்டும் என்றார்கள்.

சிறுச்சேரி
இந்த பயிற்சியின் போது சிறுச்சேரியில் உள்ள நோவோடெல் ஹோட்டலில் தங்கியிருந்த நைஜீரியன் வீரர் ஒருவருக்கு ரத்த அழுத்தத்தை சோதனை செய்த போது 200/98 இருந்தது. இதையடுத்து பிராமரி பிராணயாமம், அக்குபிரஷர் ஆகியவற்றை கொடுத்து அவரது ரத்த அழுத்தத்தை 165/78 ஆக குறைத்தனர். உகாண்டாவை சேர்ந்த வீரர் ஒருவர் இந்த யோகாசன பயிற்சிகள் அற்புதமாக இருக்கின்றன. நான் ஆசிர்வதிக்கப்பட்டவராக இருப்பதற்கு நன்றி என்றார்.

அமெரிக்கா வீரர்
அமெரிக்காவின் விர்ஜின் தீவுகளை சேர்ந்த வீராங்கனை ஒருவர் இந்த யோகா பயிற்சிகளில் மூச்சுபயிற்சிகள் மூலம் மன அழுத்தம் குறைகிறது. இந்த பயிற்சிகள் எங்களுக்கு மனதையும் உடலையும் மன உளைச்சல் இல்லாமல் வைத்திருக்க உதவியது. மனம் அமைதியாக இருக்கிறது என நெகிழ்ச்சியுடன் கூறினார் என்றார் தீபா.












Click it and Unblock the Notifications