முதல்வர் ஸ்டாலினுக்கு காத்திருந்த இன்ப அதிர்ச்சி.. நேரா அங்க போய்.. குட்டி ‘கலைஞர்’களுடன் போஸ்!
சென்னை : தமிழகத்தின் தனிப் பெரும் தலைவரான கருணாநிதியின் 99-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் அமைந்துள்ள அவரது சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
கருணாநிதியின் பிறந்தநாள் விழாவையொட்டி, கருணாநிதி போலவே வேடமணிந்த சிறுவர்கள் பலர் ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் குழுமி நின்றனர்.
கருணாநிதியைப் போல வேடமணிந்த சிறுவர்களுடன் முதல்வர் ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ உள்ளிட்டோர் மகிழ்ச்சியாக புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

கருணாநிதி 99
தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 99-வது பிறந்த நாள், முதல் முறையாக அரசு விழாவாக இன்று கொண்டாடப்படுகிறது. மாநிலம் முழுவதும் அமைச்சர்களும், மக்கள் பிரதிநிதிகளும், கருணாநிதி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர். கருணாநிதி பிறந்தநாளை தமிழகம் முழுவதும் திமுக தொண்டர்களும் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர்.

முதல்வர் மரியாதை
கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள அவரது சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். பிறகு சென்னை மெரினா கடற்கரையில் உள்ள மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து முதல்வர் ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.

ஓமந்தூரார் அரசினர் தோட்டம்
சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள கருணாநிதி சிலையை, துணை குடியரசுத் தலைவர் வெங்கய்யா நாயுடு, கடந்த மாதம் 28-ஆம் தேதி திறந்து வைத்தார். கருணாநிதியின் 99-வது பிறந்தநாளை முன்னிட்டு, ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள கருணாநிதி சிலை அருகே வைக்கப்பட்டுள்ள கருணாநிதி புகைப்படத்திற்கு, முதலமைச்சர் மலர்தூவி மரியாதை செலுத்தினார். கருணாநிதி சிலைக்கு ட்ரோன் மூலம் மலர்தூவி மரியாதை செய்யப்பட்டது.

குட்டி கலைஞர்கள்
கருணாநிதிக்கு முதல்வர் ஸ்டாலின் மரியாதை செலுத்தியவுடன், கருணாநிதி போல வெள்ளை வேட்டி சட்டை, மஞ்சள் துண்டு, கருப்புக் கண்ணாடியுடன் சிறுவர்கள் நின்ற பகுதிக்குச் சென்ற ஸ்டாலின் அவர்களிடம் பேசி, அவர்களுடன் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டார். "போட்டோவுக்கு போஸ் கொடுங்க" என சிறுவர்களிடம் கூறிய அவர், அவர்களது தோளில் தட்டிக்கொடுத்தார்.

சிலை முன்பு சிறுவர்கள்
குட்டிக் கலைஞர்களுடன் முதல்வர் ஸ்டாலின் நிற்கும் புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் தீயாகப் பரவி வருகிறது. திமுக இளைஞரணி செயலாளரும் எம்.எல்.ஏவுமான உதயநிதி ஸ்டாலினும் கருணாநிதி வேடமிட்ட சிறுவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார். பின்னர் அந்தச் சிறுவர்கள் கருணாநிதியின் கம்பீர சிலை முன்பு கையசைத்தவாறு போஸ் கொடுத்தனர்.


Click it and Unblock the Notifications
