கொக்கென நினைத்தாரோ! காட்டமான கட்டுரைக்கு பின் நேருக்கு நேர் சந்தித்த ஆளுநர்-முதல்வர்.. என்ன நடந்தது
சென்னை: முரசொலியில் தமிழ்நாடு ஆளுநர் ஆர். என் ரவி குறித்து நேற்று காட்டமாக கட்டுரை வெளியான நிலையில் இன்று முதல்வர் ஸ்டாலினும், ஆளுநர் ஆர். என் ரவியும் நேருக்கு நேரு சந்தித்துக் கொண்டனர்.
தமிழ்நாடு ஆளுநர் குடியரசு தினவிழாவையொட்டி வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில் நீட் குறித்தும், இந்தி மொழி குறித்தும் பேசி இருந்தார். மற்ற மாநில மாணவர்களை போல தமிழ்நாடு மாணவர்களும் பிற மொழிகளை கற்க வேண்டும். நீட் தேர்வு மூலம் தமிழ்நாட்டில் மருத்துவ மாணவர்கள் சேர்க்கை உயர்ந்துள்ளது என்று ஆளுநர் ஆர். என் ரவி குறிப்பிட்டார்.
தமிழ்நாட்டில் நீட் எதிர்ப்பு, இந்தி திணிப்பு எதிர்ப்பும் கடுமையாக நிலவி வரும் நிலையில் ஆளுநர் ஆர். என் ரவி இப்படி பேசியது பெரிய அளவில் சர்ச்சையானது. இதையடுத்து திமுகவின் அதிகாரபூர்வ நாளேடான முரசொலியில் ஆளுநருக்கு எதிராக கட்டமான கட்டுரை ஒன்றும் வெளியிடப்பட்டது.

கட்டுரை
"'கொக்கென்று நினைத்தாரோ; தமிழக ஆளுநர் ரவி!" என்ற தலைப்பில் முரசொலியில் இந்த கட்டுரை வெளியானது. அதில், தமிழக ஆளுநர் பொறுப்பேற்றுள்ள ரவி சில நேரங்களில் தனது அதிகார எல்லை மீறி செயல்படத் தொடங்கியுள்ளாரோ என எண்ணிடத் தோன்றுகிறது? இன்றைய தமிழக ஆளுநர் ரவி, தமிழக ஆளுநராக பொறுப்பேற்கு முன் நாகாலாந்தின் ஆளுநராகப் பொறுப்பேற்றுப் பணியாற்றிய போது, அவர் நடந்து கொண்ட விதம் பெரும் விமர்சனத்திற்கு ஆளாகின.

முரசொலி ஆளுநர்
நாகாலாந்தின் தேசியவாத ஜனநாயக கட்சியின் தலைவர் சிங்பாங் கோன்யாக் (Chingwang Konyak) அங்கு ஆளுநராகப் பணியாற்றிய திருரவி குறித்து கருத்தறிவிக்கையில், "ஆளுநர் ரவியின் செயல் பாடு மகிழ்ச்சி தருவதாக இருந்ததில்லை.. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் செயல்பாடுகளில் அவரது குறுக்கீடு அதிகமிருந்தது" - என்று பகிரங்கமாகக் குற்றம்சாட்டியிருந்தார்! நமது ஆளுநராக வந்துள்ள ரவியின் அத்துமீறல்கள், நாகாலாந்து அரசு நிர்வாகத்தின்மீது மட்டுமல்ல அங்குள்ள ஊடகவியலாளர்கள் மீதும் இருந்துள்ளது!

ஆளுனர் ஆர். என் ரவி
நாகாலாந்து ஆளுநர் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு, தமிழக ஆளுநராக அவர் நியமிக்கப்பட்ட நேரத்தில் ஆளுநர் ரவிக்கு அந்த அரசு சார்பில் ஒரு பிரிவு உபச்சாரக் கூட்டம் நடத்தப்பட்டது; அப்போது பத்திரிக்கையாளர்கள் ஒட்டுமொத்தமாக ஆளுநர் ரவிக்குத் தரப்பட்ட பிரிவு உபச்சார விழாவைப் புறக்கணித்துள்ளார்கள்! அந்தப் பிரிவு உபச்சார விழாவில் கலந்து கொள்ளுமாறு பத்திரிகையாளர்களுக்கு பல வேண்டுகோள்கள் வைத்தும். அவர்கள் அதை ஏற்க முன்வரவில்லை, அந்தச் செய்தியாளர்களை அந்த அளவு கவர்னராக நாகாலாந்தில் இருந்த காலத்தில் புண்படுத்தியுள்ளார் ரவி. இத்தகைய வரலாற்றுப் பின்னணிகளோடு தமிழக ஆளுநராக நியமிக்கப்பட்டு பொறுப்பேற்றுள்ளார் ரவி!, என்று அந்த நீண்ட கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தி திணிப்பு நீட்
அதோடு ஆளுநர் இந்தி மொழி குறித்தும், நீட் குறித்தும் அந்த கட்டுரை காட்டமான விமர்சனங்களை செய்துள்ளது. மேலும், ரவி, ஆளுநர் பொறுப்பேற்றுள்ள தமிழ்நாடு, மற்ற இந்திய மாநிலங்களைப் போன்றது அல்ல; என்பதை முதலில் அவர் உணர் வேண்டும்! இந்த மண், அரசியலில் புடம் போடப்பட்ட மண்! இங்கே குக்கிராமங்களில் வசிப்பவர்கள் கூட அரசியல் நெளிவு மிகுந்தவர்கள். ஆளுநர் ரவி எத்தகைய கருத்தையும், தெரிவிக்குமுன் தமிழகத்தைப் புரிந்து கொண்டு - அதன் வரலாற்றைத் தெளிவாகத் தெரிந்து கொண்டு கூறுவது, அவரது பதவிக்குப் பெருமை சேர்க்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்!

நாகாலாந்து அல்ல
ஏறத்தாழ 7 கோடி தமிழ் மக்களின் பிரதிநிதிகள் அடங்கிய தமிழகச் சட்ட மன்றம் ஒருமனதாக நிறைவேற்றி ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பிய தீர்மானத்தின் மீது எந்தக் கருத்தும் தெரிவிக்காது - சட்டத்தின் சந்து பொந்துகளில் பதுங்கிக் கொண்டு இருப்பது எந்தவித நியாயம் என்பதை ஆளுநர் ரவி தெரிவிக்க வேண்டும்!., இது நாகாலாந்து அல்ல.. தமிழ்நாடு என்று இந்த கட்டுரையில் கடுமையாக விமர்சனம் செய்யப்பட்டுள்ளது.

சந்திப்பு
இந்த கட்டுரை இணையம் முழுக்க பெரிய விவாதங்களை ஏற்படுத்திய நிலையில் இன்று முதல்வர் ஸ்டாலினும், ஆளுநர் ஆர். என் ரவியும் நேருக்கு நேரு சந்தித்துக் கொண்டனர். கட்டுரை வெளியான பின் முதல்முறையாக இருவரும் நேருக்கு நேரு சந்தித்துக் கொண்டனர். இன்று சென்னை கடற்கரை காமராஜர் சாலையில் மகாத்மா காந்தியின் 75வது நினைவு நாள் விழா நடத்தப்பட்டது. இதில் முதல்வர் ஸ்டாலின், ஆளுநர் ஆர். என் ரவி இருவரும் கலந்து கொண்டனர். காமராஜர் சாலையில் உள்ள காந்தியின் திருவுருப்படத்துக்கு மாலை அணிவிக்க முதல்வர் ஸ்டாலின் சென்று இருந்தார்.

நேருக்கு நேர் சந்திப்பு
இதை தொடர்ந்து ஆளுநர் ஆர். என் ரவி அந்த இடத்திற்கு வந்தார். காரில் இருந்து இறங்கிய ஆளுநரை முதல்வர் ஸ்டாலின் வரவேற்றார். கும்பிட்டபடி ஆளுநர் ரவி முதல்வர் ஸ்டாலினுக்கு மரியாதை செலுத்தினார். இரண்டு பேரும் சிரித்தபடி பரஸ்பரம் மரியாதை செலுத்திக் கொண்டனர். நேற்று வெளியான காட்டமான கட்டுரை காரணமாக ஆளுநர் தரப்பிற்கு மனக்கசப்பு ஏற்பட்டு இருக்கலாம் என்று கூறப்பட்ட போதிலும் அதை எதையும் பொது வெளியில் காட்டிக் கொள்ளாமல் இரண்டு பேரும் நாகரீகமாக நடந்து கொண்டனர்.

பாஜக விமர்சனம்
முன்னதாக ஆளுநருக்கு எதிராக அதிமுகவின் அதிகாரப்பூர்வ இதழான முரசொலியில் வெளியான அந்த கட்டுரைக்கு பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தது. பாஜக தலைவர் அண்ணாமலை அளித்த பேட்டியில், முரசொலி பத்திரிகையில் தமிழ்நாடு ஆளுநர் பற்றி எழுதியிருப்பது அவதூறு. கருத்து விமர்சனம் செய்யாமல். அவர்கள் அவதூறு செய்துள்ளனர். அரசியலமைப்புச் சட்டத்தில் ஆளுநர் என்பவர் மிக முக்கியமான நபர். இதை நடுநிலையாக இருக்கக்கூடிய எல்லோரும் கண்டிக்க வேண்டும் என்று அண்ணாமலை விமர்சனம் செய்து இருந்தார்.












Click it and Unblock the Notifications