ஜனநாயகனுக்கு ஆதரவாக நிற்கும் ராகுல் காந்தி.. தவெக கூட்டணிக்கு அச்சாரமா? பிரவீன் சக்ரவர்த்தி பதில்!
சென்னை: விஜய்யின் ஜனநாயகன் படத்திற்கு ஆதரவாக ராகுல் காந்தி கருத்து பதிவிட்டதற்கும், கூட்டணிக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று காங்கிரஸ் கட்சியின் நிர்வாகி பிரவீன் சக்ரவர்த்தி தெரிவித்துள்ளார். காங்கிரஸ் தொண்டர்கள் தங்களின் உரிமையை சொல்லலாம் என்று கூறிய பிரவீன் சக்ரவர்த்தி, ராகுல் காந்தியின் தமிழ்நாடு வருகைக்கும் கூட்டணிக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் விளக்கம் அளித்துள்ளார்.
சென்சார் சான்றிதழ் அளிக்கப்படாததால் தவெக தலைவர் விஜய் நடித்துள்ள ஜனநாயகன் திரைப்படம் திட்டமிட்டபடி ரிலீஸாகவில்லை. சென்சார் சான்றிதழ் கோரி நீதிமன்றம் சென்ற போதும், தணிக்கை வாரியம் தரப்பில் பல்வேறு அதிர்ச்சிகளை படக்குழுவுக்கு கொடுக்கப்பட்டு வருகிறது. இதனால் ஜனநாயகன் திரைப்படம் தேர்தலுக்கு முன் வெளியாகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதனால் சென்சார் அமைப்பை பாஜக தனது ஆயுதமாக பயன்படுத்தி வருவதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன. இந்த நிலையில் ஜனநாயகன் படத்திற்கும் விஜய்க்கும் ஆதரவாக ராகுல் காந்தி இன்று தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அதில் ராகுல் காந்தி, ஜனநாயகன் படத்தை தடுக்க மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் மேற்கொண்ட முயற்சி தமிழ் பண்பாட்டின் மீதான தாக்குதலாகும்.
தமிழ் மக்களின் குரலை அடக்குவதில் பிரதமர் மோடி ஒருபோதும் வெற்ரிபெற மாட்டார் என்று பதிவிட்டார். ஏற்கனவே காங்கிரஸ் கட்சியினர் பலரும் விஜய்க்கு ஆதரவாக பேசி வரும் சூழலில், ராகுல் காந்தியின் ட்வீட் பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது. இதனால் தவெக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி இணையப் போகிறதா என்ற குழப்பமும் அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் சென்னை விமான நிலையத்தில் காங்கிரஸ் கட்சியின் பிரவீன் சக்ரவர்த்தி செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், ஜனநாயகன் படத்திற்கு ஆதரவாக ராகுல் காந்தி போட்ட பதிவு கூட்டணிக்கான அச்சாரம் இல்லை. நாட்டின் ஒவ்வொரு அமைப்பையும் பயன்படுத்தி மத்திய அரசு எதிர்க்கசிகளின் குரலை நசுக்குகிறது. இது தமிழ்நாட்டின் பண்பாடு மீதான தாக்குதல் என்று கூறியுள்ளார்.
சென்சார் போர்டு பாஜகவின் ஒரு ஆயுதமாக மாறிவிட்டது. கடந்த காலங்களில் என்ன நடந்தது என்பதை விடவு, சமகாலமும், எதிர்காலமும் முக்கியம். காங்கிரஸ் கட்சி நாட்டிற்கு சுதந்திரம் பெற்றுக் கொடுத்த கட்சியாகும். அதனால் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கருத்தை வெளிப்படையாக சொல்லலாம். ஆனால் அது கட்சிக்கு பாதிப்படையும் வகையில் இருக்கக் கூடாது.
தமிழ்நாட்டில் இந்தியா கூட்டணி பலமாகவே உள்ளது. ராகுல் காந்தியின் நீலகிரி வருகைக்கும், கூட்டணிக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்று தெரிவித்துள்ளார். பிரவீன் சக்ரவர்த்தி விஜய்யுடன் சந்திப்பு நடத்திய பின்னரே, திமுக - காங்கிரஸ் கூட்டணியில் இடையில் பிரச்சனை உருவாகியது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications