சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஈஷா யோகா அறக்கட்டளை.. வனத்தை ஆக்கரமித்து கட்டுமானம்.. தமிழக அரசுக்கு பாலகிருஷ்ணன் பரபரப்பு கடிதம்

Google Oneindia Tamil News

சென்னை: ஈஷா யோகா அறக்கட்டளையின் வன நில ஆக்கிரமிப்பு மற்றும் சட்டவிரோத கட்டுமானங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழக அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து அந்த கட்சியின் மாநிலச்செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

ஈஷா யோகா அறக்கட்டளை கோவை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் யானை வழித்தடங்களை ஆக்கிரமித்து சட்டவிரோதமான கட்டுமானங்களை கட்டியுள்ள நிலையில் இது சம்மந்தமான விபரங்களை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் அறிந்தபோது தமிழக அரசு அதிகாரிகள் வன நிலம் ஆக்கிரமிக்கப்படவில்லை என அளித்துள்ள பதில் அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. ஆனால் தமிழக அரசின் அத்தகைய பதில் தவறானதாகும்.

யானைகள் வழித்தடம்

யானைகள் வழித்தடம்

ஈஷா யோகா அறக்கட்டளை கோவை வனக்கோட்டம், போலாம்பட்டி வனச்சரகத்தில் அமைந்துள்ளது. இக்கட்டிடங்கள் அமைந்துள்ள இடங்கள் காலம்காலமாக யானைகள் பயன்படுத்திவரும் வழித்தடத்தில் அமைந்துள்ளன. இது தொடர்பான ஆவணங்கள் வனத்துறையினரிடம் உள்ளது. பல சமயங்களில் வனத்துறை அதிகாரிகள் இதனை உறுதி செய்துள்ளனர். அத்துடன் ஈஷா யோகா மையம் யானை வழித்தடத்தில்தான் அமைந்துள்ளது என மத்திய தணிக்கை அதிகாரி (CAG Report) அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 2012 ஆம் ஆண்டு அப்போதைய கோவை கோட்ட வன அலுவலர் முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் மற்றும் வனத்துறைத் தலைவர் அவர்களுக்கு எழுதிய 17.08.2012 தேதியிட்ட ந.க.எண்;வ1/8120/2011 எண்ணுள்ள கடிதத்தில் இதுபற்றி தெளிவுபடக் குறிப்பிட்டுள்ளார்.

மனித, விலங்கு மோதல்களும் அதிகரிப்பு

மனித, விலங்கு மோதல்களும் அதிகரிப்பு

யானை வழித்தடங்கள், காணுயிர் வாழிடங்கள் வலசைகள் அபகரிக்கப்பட்டுள்ளதால் யானைகளும் மற்ற விலங்குகளும் குடியிருப்புகளுக்குள்ளும், விவசாய நிலங்களுக்குள்ளும் புகுந்து சேதங்களை விளைவிக்கின்றன. மனித, விலங்கு மோதல்களும், இருதரப்பு உயிரிழப்புகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதற்காக கடந்த 10 ஆண்டுகளாக வனத்துறை வழங்கிவரும் இழப்பீடு விபரங்களில் இந்த உண்மையை காண முடியும். ஈஷா யோக அறக்கட்டளையின் கட்டிடங்கள் தனியாருக்கு சொந்தமான பட்டா இடம் என்றாலும் அவை பல்வேறு அரசாணைகளையும் விதிமுறைகளையும் மீறி கட்டப்பட்டது ஆகும். வருவாய் வாரிய நிலை ஆணை (B.S.O) எண் 15-35(3) இன் படி வன எல்லையிலிருந்து பட்டா நிலங்களுக்கு இடையில் 2 முதல் 3 சங்கிலி ( 500 மீட்டர்) வரை இடைதாங்கு மண்டலம் Buffer Zone எனப்படுகின்ற இடைவெளி கண்டிப்பாக இருக்க வேண்டும். இந்த இடைதாங்கு மண்டலம் வனத்துறை மற்றும் வருவாய்த் துறையினரால் பராமரிக்கப்பட வேண்டும். ஆனால் ஈஷா யோகா அறக்கட்டளையினர் வன எல்லை தொடக்கத்திலிருந்து சுற்றுச்சுவர் மற்றும் முன்பக்க நுழைவாயிலை அமைத்துள்ளனர்.

சட்டவிரோதமாக கட்டுமானங்கள்

சட்டவிரோதமாக கட்டுமானங்கள்

மேலும் ஈஷா யோகா அறக்கட்டளையின் அனைத்து கட்டிடங்களும் காப்புக்காட்டின் எல்லையிலிருந்து 1.70 மீட்டர் தொலைவு முதல் 473 மீட்டர் தொலைவுக்குள் கட்டப்பட்டுள்ளது. ஆகவே இந்த கட்டுமானங்கள் அனைத்தும் சட்டவிரோதமானது. அரசு ஆணைகளையும், பல்வேறு துறைகளின் தடையின்மை சான்றுகளை பெறாமலும், விதிமுறைகளை மீறியும் உள்ளது. மேலும் விதி 4 (3) பொது வழிப்பாடு அல்லது மத பயன்பாட்டு கட்டிடங்களுக்கு மாவட்ட ஆட்சியரின் அனுமதி கட்டாயமாகும். ஆனால் ஈஷா யோகா அறக்கட்டளை மேற்படி மலைதள பாதுக்காப்புக் குழுமம் மற்றும் பிற அரசுத் துறைகளிடம் முன் அனுமதி பெறாமல் 42.77 ஏக்கர் நிலப்பரப்பில் முதலில் 63380 ச.மீ. பரப்பளவில் கட்டிடங்கள் எழுப்பியுள்ளனர். மேலும் 1994 முதல் 2010 ஆண்டு வரை பல்வேறு கட்டிடங்கள், குளம், தீர்த்த குண்டங்கள், தியான மண்டபங்கள், நடைபாதை, அலங்காரத் தோட்டம், விளையாட்டு மைதானம், வாகன நிறுத்துமிடம் என 4,27,700.00 ச.மீ. பரப்பளவில் மேற்சொன்ன வகையில் எவ்வித முன் அனுமதியும் பெறாமல் சட்டவிரோதமாக கட்டுமானங்கள் எழுப்பியுள்ளனர்.

முன் அனுமதி இல்லை

முன் அனுமதி இல்லை

மேலும் தொடர்ந்து பல்வேறு புதிய கட்டிடங்களை எழுப்பி வருகின்றனர். பல்வேறு அரசுத்துறை மற்றும் வனச்சரக அலுவலர்கள் கடிதங்கள் வாயிலாக எச்சரித்தும் ஈஷா யோகா அறக்கட்டளை தனது சட்டவிரோத கட்டுமானங்களை நிறுத்தவில்லை. அதேபோல் கடந்த 2016 ஆண்டு ஈஷா யோகா அறக்கட்டளை மேற்படி இக்கரை போளுவாம்பட்டி கிராமத்தில் 112 அடி உயரத்தில் ஆதியோகி சிலையும் அதனையொட்டி லட்சம் ச.மீ. பரப்பளவில் கட்டிடங்களும் எழுப்பியுள்ளனர். இந்த சிலையும் கட்டுமானங்களும் மேற்சொன்ன வகையில் மலைதள பாதுகாப்புக் குழுமம் மற்றும் பிற அரசுத் துறைகளின் முன் அனுமதி பெறப்படாமல் சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ளன.

 அதிகார மீறல்

அதிகார மீறல்

மாவட்ட ஆட்சியர் அனுமதியை பரிசீலித்தாலும் 300 சதுர மீட்டருக்கு மட்டும் தான் அனுமதி அளித்துள்ளார். ஆனால் அதை மீறி ஆதியோகி சிலையைச் சுற்றி தியான மண்டபங்கள், வாகன நிறுத்துமிடங்கள், பூங்கா என ஒரு லட்சம் சதுரடிக்கு மேல் கட்டிடங்கள் எழுப்பியுள்ளார்கள். மாவட்ட ஆட்சியர் அனுமதியும் கூட உண்மையில் விதி மீறல் அதிகார மீறல் ஆகும். ஆட்சியர் உத்தரவில், அப்பகுதியிலுள்ள நிலங்களுக்கு எந்தவித நீர்ப்பாசன வசதியும் இல்லை. நிலத்தடி நீராதாரம் மட்டுமே உள்ளது. கள ஆய்வின் போது எவ்வித பயிர்களும் இல்லை, மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக விவசாயம் செய்யப்படவில்லை என நற்சான்று வழங்கப்பட்டது.

உண்மைகள் அனைத்தும் மறைப்பு

உண்மைகள் அனைத்தும் மறைப்பு

நீர்வழிப்பாதைகள் திசை திருப்பப்படுவதற்கான சாத்தியங்களோ நிலத்தடி நீர்மட்டம் குறைவதற்கான சாத்தியங்களோ இல்லை அதனால் விவசாய நிலங்களை வேறு பயன்பாட்டிற்கு மாற்றுவதற்கு அனுமதி அளிப்பதாக ஆட்சியர் உத்தரவில் சொல்லப்பட்டுள்ளது. ஆனால் அப்பகுதியில் நீலியாறு, நீலியணை, ராஜவாய்க்கால், மிகப்பெரிய உக்குளம் உள்ளிட்ட வருடம் முழுவதும் வற்றாத நீராதாரங்கள் உள்ளன. வருடம் முழுவதும் விவசாயம் செய்யக்கூடிய பகுதியாக உள்ளது. ஆனால் இந்த உண்மைகளை மறைத்து மேற்படி உத்தரவு அளிக்கப்பட்டுள்ளது. ஈஷாவின் சட்ட விரோத கட்டுமானங்களுக்கு தடை விதிக்கவும், இடிக்கவும் கோரி வெள்ளியங்கிரி மலை பழங்குடிகள் பாதுகாப்புச் சங்கத்தின் தலைவர் முத்தம்மா என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ரிட் வழக்கு (W.P.No 3556/2017) தாக்கல் செய்து அது தற்போது நிலுவையில் இருந்து வருகிறது. இந்த வழக்கில் கோவை மண்டல நகரமைப்பு திட்டமிடல் துணை இயக்குநர் (பொறுப்பு) ஆர்.செல்வராஜ் உயர் நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது.

அபிடவிட் தாக்கல்

அபிடவிட் தாக்கல்

மத வழிபாடு மற்றும் மேம்பாட்டிற்காக ஈஷா யோகா மையம் விடுத்த வேண்டுகோளை ஏற்று, இக்கரை போளூவாம்பட்டி பகுதியில் சிவன் சிலை அமைப்பதற்கும் அதைச் சுற்றி கட்டுமானம் கட்டுவதற்கும் 08.10.2016 மற்றும் 15.02.2017 ஆகிய தேதிகளில் 19.86 ஹெக்டேர் விளை நிலத்தை மாற்ற கோவை மாவட்ட ஆட்சியர் அனுமதி அளித்துள்ளார். இருந்தபோதிலும், இக்கரை போளுவாம்பட்டியில் கட்டுமானங்களை மேற்கொள்ள மலைதள பாதுகாப்புக் குழுமம் மற்றும் வனம், வேளாண், மண்ணியல், சுரங்கத் துறைகளிடம் அனுமதி பெற வேண்டும் என ஈஷா மையத்திற்கு ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால் உரிய அனுமதியின்றி 109 ஏக்கர் பரப்பளவில் சட்டவிரோதமாக கட்டுமானங்களை ஈஷா யோகா மையம் கட்டியுள்ளது. அவற்றை இடிப்பதற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது என எழுத்துப்பூர்வமாக அபிடவிட் தாக்கல் செய்துள்ளார்.

அ.தி.மு.க. அரசு ஒப்புதல்

அ.தி.மு.க. அரசு ஒப்புதல்

ஆனால் அதன் பிறகு கடந்த அ.தி.மு.க. தலைமையிலான தமிழ்நாடு அரசு ஈஷா யோகா மையத்தின் மேற்படி சட்டவிரோத கட்டுமானங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளதாகத் தெரிகிறது. இவ்வாறு சட்டவிரோத கட்டுமானங்களுக்கு ஒப்புதல் அளிப்பது சட்டவிரோதமானது என கொடைக்கானல் பிளசண்ட் ஸ்டே வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்து அத்தகைய சட்டவிரோத கட்டுமானங்களை இடிக்க உத்திரவிட்டுள்ளதை சுட்டிக்காட்ட விரும்புகிறோம். ஈஷா யோகா அறக்கட்டளையின் மேற்படி சட்டவிரோத கட்டுமானங்களால் அப்பகுதியின் இயற்கைவளம், சுற்றுச்சூழல், பச்சையம், நீர்மை, வேளாண்மை, பல்லுயிர்ப் பெருக்கம், காணுயிர் வாழிடம், வலசைகள் அனைத்தும் சூறையாடப்பட்டுள்ளது. இப்பகுதியில் மட்டும் 20-க்கும் மேற்பட்ட ஓடைகள், மழைக்கால நீரோடைகள், காலங்காலமாக வேளாண் குடிகள் பயன்படுத்தி வந்த வண்டிப்பாதைகள் ஆகியவை அழிக்கப்பட்டுள்ளன.

 துணைபோகக் கூடாது

துணைபோகக் கூடாது

பழங்குடி மக்களின் வாழ்விடங்கள், பாரம்பரிய நீராதாரங்கள், வழித்தடங்களும் பாதிக்கப்பட்டுள்ளன. யானை வழித்தடங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால் மனித விலங்கு மோதல் அதிகரித்து வருகிறது.இதனால் வனவிலங்குகள் அடிக்கடி மக்கள் வசிப்பிடங்களுக்குள் நுழைந்து ஆபத்தை ஏற்படுத்துகின்றன. எனவே, தமிழக அரசு மேற்கண்ட அம்சங்களை கணக்கில் கொண்டு தகவல் உரிமை சட்டத்தின் கீழ் அளித்துள்ள பதிலை திருத்தம் செய்திட வேண்டும். எக்காரணம் கொண்டும் ஈஷா யோகா நிறுவனத்திற்கு துணைபோவதாக தமிழக அரசின் செயல்பாடுகள் அமைந்துவிடக் கூடாது என வற்புறுத்தி கேட்டுக்கொள்கிறோம்.

சட்டவிரோத கட்டுமானங்களை அகற்றவும்

சட்டவிரோத கட்டுமானங்களை அகற்றவும்

மேலும், உண்மைக்கு மாறான பதிலை தகவல் உரிமை சட்டத்தின் கீழ் வழங்கிய அதிகாரி மீது உரிய நவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அத்துடன் ஈஷா யோகா அறக்கட்டளையின் வன நில ஆக்கிரமிப்பு மற்றும் சட்டவிரோத கட்டுமானங்களை அகற்றவும் நடடிவக்கை எடுக்க வேண்டுமென வற்புறுத்தி கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது. இவ்வாறு கே.பாலகிருஷ்ணன் எழுதிய கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

English summary
The Marxist Communist Party (CPM) has urged the Tamil Nadu government to take action to remove the forest land encroachment and illegal constructions of the Isha Yoga Foundation. He also said that appropriate action should be taken against the officer who gave a false answer under the Right to Information Act
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X