சூறையாடிய மாண்டஸ்.. முறிந்து விழுந்த மின்கம்பங்கள்..மின்விநியோகம் எப்போது? அமைச்சர் சொன்னது இதுதான்
சென்னை: மாண்டஸ் புயலால் பல பகுதிகளில் மின்கம்பங்கள் சாய்ந்துள்ளன. பாதுகாப்பு கருதி மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. மின்சாரம் துண்டிக்கப்பட்ட இடங்களில் இன்று பிற்பகலுக்குள் மீண்டும் மின்விநியோகம் வழங்கப்படும் என அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.சேதம் அடைந்த மின்கம்பங்கள் குறித்து மின்வாரியம் சார்பில் ஆய்வு நடக்கிறது. இன்று மதியத்திற்குள் 100% முழுமையாக மின் விநியோகம் வழங்க நடவடிக்கை என அவர் தெரிவித்துள்ளார்.
மாண்டஸ் புயல் ஆடிய கோரத்தாண்டவத்தில் சென்னை நகரம் மட்டுமல்லாது திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தாம்பரம் உள்ளிட்ட பல பகுதிகளில் மரங்கள் முறிந்து விழுந்துள்ளன. மின்கம்பங்கள் சாய்ந்துள்ளன. பல பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

மாண்டஸ் புயல் காரணமாக இரவு முழுவதும் 11 ஆயிரம் மின் துறை ஊழியர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர் மேலும் மின் விநியோகம் பாதிக்கப்பட்ட இடங்களில் விரைவில் சீரமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாண்டஸ் புயல் கரையைக் கடக்கும்போது காற்றின் வேகத்திற்கு ஏற்ப மின்சாரம் நிறுத்தப்படும் என்று மின்சார வாரியம் அறிவித்திருந்தது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கிழக்கு கடற்கரை சாலை பகுதிகளிலும் மாமல்லபுரத்தில் நேற்று மாலை 6 மணிக்கு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதனால் கிழக்கு கடற்கரை சாலை முழுவதும் இருளில் மூழ்கியது. இன்று அதிகாலையில் சென்னையிலிருந்து சுமார் 40 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மாமல்லபுரத்தில் புயல் கரையைக் கடந்தது.
மாமல்லப்புரம் மட்டுமல்லாமல் பலத்த காற்று மற்றும் கன மழை பெய்த இடத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. மின்சார விநியோகம் எப்போது சீராகும் என்று செய்தியாளர்களிடம் பேசிய செந்தில் பாலாஜி கூறியுள்ளார். சென்னை திருவள்ளூர் காஞ்சிபுரம் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் மொத்தம் 355 துணை மின் நிலையங்களில், 10 மின் நிலையங்களில் மட்டுமே மின்சாரம் நிறுத்தி வைக்கப்பட்டது. 22kv, 11kv, 400 என 602 பீடர்களில் மின் விநியோகம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மழை மற்றும் காற்றை மிக வேகமாக வீசியதன் அடிப்படையில் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படக்கூடாது என்பதன் காரணத்திற்காகவும் மின் விநியோகம் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.
இரவு முழுவதும் 11 ஆயிரம் பேர் பணியில் ஈடுபட்டிருந்தனர். தொடர்ந்து சீரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மின் விநியோகம் பாதிக்கப்பட்ட இடங்களில் விரைவில் சீரமைக்கப்படும் என்றும் இன்று மதியத்திற்குள் அனைத்து பகுதிகளிலும் சீராக மின்விநியோகம் வழங்கப்படும் எனவும் தெரிவித்தார். மேலும் எந்தெந்த இடங்களில் மின்கம்பங்கள் பழுது ஏற்பட்டுள்ளது என்பதை ஆய்வு மேற்கொண்டு சீரமைத்த பின்னரே மொத்தமாக எத்தனை இடத்தில் பழுது ஏற்பட்டது என்பது குறித்து தெரிவிக்க முடியும் என்றார்.












Click it and Unblock the Notifications