ஆப்சென்ட் விஜயகாந்த்.. கடைசிநேர பிரசாரம் செய்த பிரேமலதா - தேமுதிக வென்றது எத்தனை சீட் தெரியுமா?
சென்னை: நடந்து முடிந்துள்ள நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் மாநகராட்சியில் ஒரு வெற்றியையும் பதிவு செய்யாமல், நகராட்சியில் 5 வெற்றியையும், பேரூராட்சியில் 13 வெற்றியையும் தேமுதிக பதிவு செய்துள்ளது.
தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகி வருகின்றன.
இந்தத் தேர்தலில் தேசிய முற்போக்கு திராவிட கழகம் தனித்து களமிறங்கியது. கடைசி நேரத்தில் பிரேமலதா விஜயகாந்த் சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டார்.

தேமுதிக
தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலம் இல்லாமல் இருப்பதால், அவரால் பிரசாரத்துக்கு வரமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் தேமுதிகவுக்கு செயல் தலைவரை அறிவிக்க வேண்டும் என மாவட்ட செயலாளர்கள் வலியுறுத்தி வந்தனர். ஆனாலும் செயல் தலைவர் யார் என்பது குறித்து கட்சி மேலிடம் அறிவிக்கவில்லை. இந்தநிலையில் தான் தேமுதிக நகர்புற உள்ளாட்சித் தேர்தலை சந்தித்தது.

தேர்தல்கள்
தேமுதிக கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுககூட்டணியில் இடம்பெற்றது. அதன்பிறகு தங்கள் கட்சிக்கு உரிய அங்கீகாரம் இல்லை என கூறி கடந்த சட்டமன்ற தேர்தலுக்கு முன் கூட்டணியில் இருந்து விலகியது. பின்னர் அமமுக தலைமையிலான கூட்டணியில் சட்டசபைத் தேர்தலை எதிர்கொண்டது. அதில் தேமுதிகவுக்கு 60 இடங்கள் ஒதுக்கப்பட்டன, ஆனால் அதில் 1 இடத்தைக் கூட தேமுதிகவால் வெற்றி பெற முடியவில்லை.

உள்ளாட்சி தேர்தல்
பின்னர் அமமுக கூட்டணியில் இருந்தும் விலகிய தேமுதிக ஊரக உள்ளாட்சி தேர்தலில் தனித்துப் போட்டியிட்டது. அதேபோல நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையும் தனித்து சந்திக்க முடிவெடுத்துள்ளது. தேமுதிக தனித்துப் போட்டியிட்டு மக்கள் மத்தியில் நம்பிக்கையை வளர்க்க வேண்டும், அந்த வகையில் நமது பணிகள் அமைய வேண்டும், இனி கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை, கூட்டணி என்று ஒன்று அமைந்தால் அது தேமுதிக தலைமையில் இனி அமையும் என பிரேமலதா நிர்வாகிகள் முன் கூறியுள்ளார்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்
இந்தத் தேர்தலுக்கு முன் பிரேமலதா கூட்டம் எதுவும் நடத்தாமல், தேர்தலை சந்திப்பது எப்படி என்று விவாதிக்காமல் துபாய் சென்றுவிட்டார். இதனால் தொண்டர்களிடம் பெரிய அதிருப்தி நிலவியது. இந்த தேர்தல் நடைபெறாமல் இருக்கவே பிரேமலதா விரும்பியதாகவும் கூறப்படுகிறது. இந்தநிலையில், கடைசியாக தங்கள் பிரசாரத்தைத் துவங்கியது தேமுதிக. பிரேமலதா மற்றும் அவரது மகன்களும் சூறாவளிப் பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

முடிவுகள்
இந்நிலையில், நகர்புற உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன. இந்நிலையில், தேமுதிக தனித்துப் போட்டியிட்டு கணிசமான இடங்களைப் பெறும் என்று கணக்குப்போட்டது. ஆனால், பெரிய வெற்றிகள் எதையும் தேமுதிக பெறவில்லை. அதேசமயம் பேரூராட்சி மற்றும் நகராட்சிகளில் குறிப்பிட்ட வெற்றிகளைப் பதிவு செய்துள்ளது தேமுதிக. தற்போதைய நிலவரப்படி தேமுதிக மாநகராட்சியில் எந்த வெற்றியும் பெறவில்லை, நகராட்சியில் 5 வெற்றியும், பேரூராட்சியில் தேமுதிக 13 வெற்றியையும் பதிவு செய்துள்ளது.












Click it and Unblock the Notifications