இனி அதிரடி பாதை.. ‘அவரை’ சமாளிக்க ‘மேல’ இருந்து பறந்த உத்தரவு.. உடனே அவங்களும் களமிறங்கிட்டாங்க..!
சென்னை : பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு யாரும் பெரிதாக ரியாக்ட் செய்ய வேண்டாம் என முதல்வர் ஸ்டாலின் முன்னர் உத்தரவு பிறப்பித்திருந்தார். அதன்படியே அமைச்சர்கள் கூட அவரது பெயரைச் சொல்வதையே தவிர்த்து வந்தனர்.
ஆனால், சமீபகாலமாக அண்ணாமலை தொடர்ச்சியாக செய்தியாளர்களைச் சந்தித்து வருவதும், கட்சிக் கூட்டங்களில் பேசி வருவதும் விவாதமாகி வருவதால் அதற்கு பதில் அளிக்க வேண்டிய சூழலுக்கு திமுக நிர்வாகிகள் தள்ளப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் பாஜகவின் வளர்ச்சி பற்றி விவாதிக்கப்பட்டு வருவதால், இனி அண்ணாமலையை கண்டுகொள்ளாமல் விட முடியாது, அவரது குற்றச்சாட்டுகளுக்கு சம்பந்தப்பட்டவர்கள் சரியான வகையில் எதிர்வினை ஆற்றுங்கள் என ஸ்டாலின் அறிவுறுத்தியிருப்பதாக கூறப்படுகிறது.

முதல்வர் ஸ்டாலின்
தமிழக பாஜகவை பிரதானப்படுத்தி அரசியல் செய்ய வேண்டாம் என்ற முடிவில் முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலின் இருந்த நிலையில், அண்ணாமலையின் தொடர் சீண்டல்களால் திமுக முன்னணி நிர்வாகிகளும், அண்ணாமலையின் கேள்விகளுக்கும், புகார்களுக்கும் பதில் அளிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். சமீபத்தில் முதல்வர் ஸ்டாலின் கூட அண்ணாமலை குறித்த கேள்விக்கு செய்தியாளர்கள் சந்திப்பில் பதிலளித்தார்.

அண்ணாமலை
சமீப சில வாரங்களாகவே அண்ணாமலை திமுகவை குறிவைத்து கடுமையான குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகிறார். அவரது குற்றச்சாட்டுகளை அமைச்சர்களும் சீரியஸாக இல்லாமல் சிரிப்போடே கடந்து சென்று கொண்டிருந்தனர். ஆனால், அண்ணாமலை அதையே தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு, 'பாருங்க.. அமைச்சர்களாலயும், திமுகவினராலயும் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியல' என்பது போல சமூக வலைதளங்களில் கட்சியினரை வைத்து பிரச்சாரம் செய்யத் தொடங்கியதாக விவாதிக்கப்பட்டுள்ளது.

ஊழல் புகார்கள்
இதையடுத்து சமீபத்தில் திமுக ஆட்சி மீதான ஊழல் புகார்களை வெளியிடுவேன் என அண்ணாமலை கூறியதுமே உஷார் ஆனது ஆளும் தரப்பு. அவரது புகார்களுக்கு அந்தந்த அமைச்சர்கள் ஆதாரப்பூர்வமாக மறுப்பு தெரிவிக்க வேண்டும் என்றும், துறை செயலர்களை விட்டே தெளிவாக விளக்கம் கொடுக்க வைக்கலாம் என்றும், உடனடியாக பதில் சொல்லாவிட்டால் அதையே பிடித்துக்கொண்டு ஊழல் எனப் பரப்பி விடுவார்கள் எனக் கூறி கவனமாக இருக்குமாறு அமைச்சர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.

முறைகேடு புகார்
தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை முன்பே சொன்னபடி திமுக அரசு மீது பல்வேறு முறைகேடு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். கர்ப்பிணி பெண்களுக்கு வழங்கப்படும் 8 ஊட்டச்சத்து பொருட்கள் அடங்கிய தொகுப்பு கொள்முதல் செய்வதில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக தெரிவித்தார். ஆவின் ஹெல்த் மிக்ஸுக்கு பதிலாக தனியார் ஹெல்த் மிக்ஸ் பொருளை கொள்முதல் செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதன் மூலம் அரசுக்கு 77 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது எனக் குற்றம்சாட்டியிருந்தார்.

அண்ணாமலைக்கு பதில்
கர்ப்பிணிகளுக்கு வழங்கப்படும் சத்து மாவை ஆவினில் வாங்காமல் அதிக விலைக்கு தனியாரில் வாங்கியதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வைத்த குற்றச்சாட்டு தொடர்பாக அன்றே அமைச்சர் மா.சுப்பிரமணியன் டெண்டரே இன்னும் நிறைவடையவில்லை, அதற்குள் எப்படி நஷ்டம் என அண்ணாமலை சொல்கிறார் எனக் கேள்வி எழுப்பியிருந்தார். இந்நிலையில், சென்னை நந்தனத்தில் உள்ள ஆவின் தலைமையகத்தில் பால்வளத்துறை அமைச்சர் ஆவடி நாசர் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் இன்று கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

ஆவடி நாசர்
அப்போது பேசிய அமைச்சர் ஆவடி நாசர், அண்ணாமலை தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதற்காக ஆவினில் தயாரிக்கப்படாத ஒரு பொருளை சுகாதாரத்துறை வாங்காமல் போனதால் நஷ்டம் ஏற்பட்டுள்ளது என பொய்யான கருத்தை தெரிவித்துள்ளார். பால்வளத்துறை சார்பாக அறிவிக்கப்பட்ட அறிவிப்புகளில் சிறியவர்கள் முதல் முதியவர்கள் வரை பயன்படுத்தும் வகையில் ஊட்டச்சத்து நிறைந்த சத்து மாவு என அறிவித்து இருந்தோம். ஆனால் அது கர்ப்பிணி பெண்களுக்கு ஏற்ற வகையில் தயாரிக்கப்படும் எனத் தெரிவிக்கவில்லை எனத் தெரிவித்துள்ளார்.

இனி ஒவ்வொருவரும்
தொடர்ந்து இதேபோல, அண்ணாமலையின் ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் திமுக தரப்பில் இருந்து பதிலடிகள் வரும் எனக் கூறப்படுகிறது. அண்ணாமலைக்கு ஆதாரப்பூர்வமாக பதில் கொடுக்கும் அதே நேரத்தில் அவரை மாஸ் ஆக்கி விடக்கூடாது என்றும் கவனமாக இருக்க திமுகவினர் திட்டமிட்டுள்ளனர். அண்ணாமலையை டேமேஜ் செய்யும் வேலையை ஐடி விங் கையில் எடுக்கும் என்றும் கூறப்படுகிறது.

பாஜக ஊழல்களை கிண்ட திட்டம்
அதேசமயம், பா.ஜ.க அரசின் ஊழல்களையும் மக்களிடையே அம்பலப்படுத்த வேண்டும் என்கிற திட்டத்தில் இருக்கிறது திமுக. மோடி அரசின் பல்வேறு முறைகேடுகள், ஊழல் புகார்கள் குறித்து தொடர்ந்து பேச வேண்டும் என்கிற அறிவுறுத்தலும் தரப்பட்டிருக்கிறதாம். பாஜக ஊழல்களை தொடர்ந்து கிளப்பினால் பாஜக மேலிடமே அண்ணாமலையை அமைதி காக்கச் சொல்லும் என்றும் கணக்கு போட்டிருக்கிறது திமுக.

முரசொலியில்
முரசொலியில் இன்று அண்ணாமலைக்கு அமித்ஷா தொடர்புடைய முறைகேடுகளைச் சுட்டிக்காட்டி கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.தமிழக முதல்வர் ஸ்டாலினின் உறவினர்கள் சிலர் சில நிறுவனங்களில் பங்குதாரர்களாக இருப்பதே முறைகேடு என்றால் ஆட்சி அதிகாரத்திற்கு வந்தபின் மத்திய அமைச்சர் அமித்ஷாவின் மகன் ஜெய்ஷா பங்குதாரராக உள்ள நிறுவனங்களின் வருமானம் பல ஆயிரம் மடங்கு உயர்ந்திருப்பதற்கு என்ன பெயர் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு முரசொலி நாளேடு கேள்வி எழுப்பியிருக்கிறது.

அண்ணாமலை அம்பலப்படுத்துவாரா
தமிழகத்தில் ஆளும் திமுக அரசின் ஊழல்களை அம்பலப்படுத்துகிறேன் எனக் கூறும் அண்ணாமலை, அமித்ஷாவின் மகன் நிறுவனத்தின் வருமானம் பாஜக ஆட்சியில் உயர்ந்தது எந்தவகை முறைகேடு, ஊழல் என்பதை அண்ணாமலை விளக்க வேண்டும் என்று முரசொலி வலியுறுத்தியுள்ளது. தொடர்ந்து இதுபோல, பாஜக தொடர்புடைய குற்றச்சாட்டுகளை முரசொலியில் சிறப்புக் கட்டுரையாக வெளியிடவும், முக்கிய நிர்வாகிகள் செய்தியாளர் சந்திப்பில் பேசவும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளதாம். இனி தமிழக அரசியல் அரங்கில் தினசரி பரபரப்புதான்..!












Click it and Unblock the Notifications