அந்த ஒண்ணும் இனி மிஸ் ஆகக்கூடாது.. நீங்க இதை மட்டும் கவனிங்க.. மா.செக்களுக்கு ஸ்டாலின் மெசேஜ்!
சென்னை : இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பேசிய திமுக தலைவரும், முதல்வருமான ஸ்டாலின், மாவட்ட செயலாளர்களுக்கு தேர்தல் தொடர்பாக முக்கியமான அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளில் ஒரு தொகுதியை இழந்துவிட்டோம், ஆனால் இந்த முறை 40 தொகுதியிலும் வெல்ல வேண்டும் என திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.
மேலும், கூட்டணியை பற்றி யாரும் கவலைப்பட வேண்டாம், அதை நான் பார்த்துக் கொள்கிறேன். அரசின் திட்டங்கள் சரியாக சென்றடைகிறதா என்பதை கவனியுங்கள் என்றும் அறிவுறுத்தியுள்ளார் முதல்வர் ஸ்டாலின்.

திமுக மா.செக்கள் கூட்டம்
சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. திமுகவில் புதிய நிர்வாகிகள் நியமனத்திற்குப் பிறகு முதல் முறையாக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திமுகவின் மாவட்ட செயலாளர்கள், தலைமை கழக நிர்வாகிகள் என சுமார் 100க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

பொதுக்கூட்டம்
இந்தக் கூட்டத்தில், மறைந்த திமுக பொதுச் செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு டிசம்பர் 15ஆம் தேதி நூறு இடங்களில் சிறப்பு பொதுக் கூட்டங்கள் நடத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. டிபிஐ வளாகம் இனி பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகம் என்று அழைக்கப்படும் என்று அறிவித்துள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்கும் வகையில் டிசம்பர் 18ஆம் தேதி பொதுக்கூட்டம் நடத்தவும் முடிவு செய்யப்பட்டது.

மிஸ் ஆகக் கூடாது
இந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளில் 39 தொகுதிகளைக் கைப்பற்றினோம். ஒரு தொகுதியை இழந்துவிட்டோம். இந்த முறை அப்படி நடக்காமல் 40 தொகுதியிலும் முழுமையாக வெல்ல வேண்டும். அதற்கு தேவையான கட்டமைப்பை இப்போதே தொடங்க வேண்டும் என மா.செக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

பூத் கமிட்டி
மேலும், பூத் கமிட்டி அமைப்பதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஒவ்வொரு வாக்குசாவடிக்கும் சரியான முறையில் வாக்கு சாவடி முகவர்களை நியமிக்க வேண்டும் என்றும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும், அண்மையில் திமுக துணை அமைப்புகளுக்கு நிர்வாகிகள் நியமிக்கப்பட்ட நிலையில், திமுகவில் உள்ள அணிகளுக்கென்று தன்னிச்சையாக அதிகாரம் வழங்கக்கூடிய வகையில் விதிகள் உருவாக்கப்படும் என்றும் அறிவித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின்.

கூட்டணி
மேலும், நாடாளுமன்ற தேர்தலில் வலுவான கூட்டணி அமைத்து நாம் போட்டியிடுவோம். கூட்டணியை பற்றி யாரும் கவலைப்பட வேண்டாம். அதை நான் பார்த்துக் கொள்கிறேன். அரசின் திட்டங்கள் மக்களுக்குச் சரியாக சென்றடைகிறதா என்பதை உங்களது மாவட்டங்களில் கவனியுங்கள் என மாவட்ட செயலாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார் முதல்வர் ஸ்டாலின்.

தேர்தல் பணிகள்
கடந்த அக்டோபர் மாதம் நடைபெற்ற திமுக பொதுக்குழுவில் நிர்வாகிகளுக்கு முக்கியமான அறிவுறுத்தல்களை வழங்கிய முதல்வர் ஸ்டாலின், அப்போதே தேர்தலுக்கு தயாராக வேண்டும் என அறிவுறுத்தி இருந்தார். இந்நிலையில், இன்று கூட்டணியை நான் பார்த்துக் கொள்கிறேன், மாவட்டங்களில் மக்களுக்கு திட்டங்கள் போய்ச் சேர்கிறதா எனப் பார்த்துக் கொள்ளுங்கள் என அட்வைஸ் கொடுத்துள்ளார்.












Click it and Unblock the Notifications