மத்திய அரசு பணி பதவி உயர்வில் ஓபிசி இடஒதுக்கீட்டுக்காக அரசியல் சட்ட திருத்தம்: திமுக எம்.பி. வில்சன்
சென்னை: மத்திய அரசுப் பணி பதவி உயர்வில் இதர பிற்படுத்தப்பட்டோர் (ஓபிசி) பிரிவினருக்கு இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் வகையில் அரசியல் சட்டத்தில் திருத்தம் கொண்டுவர வேண்டும் என திமுக ராஜ்யசபா எம்.பி.வில்சன் வலியுறுத்தி உள்ளார்.
இது தொடர்பாக மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜுவுக்கு வில்சன் எம்.பி. எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: உண்மையான சமூக நீதியை நிலை நாட்டுகிற வகையில் நிர்வாகத்தில் போதுமான பிரதிநிதித்துவத்தை உறுதி செய்ய வேண்டும். மத்திய அரசு பணிகளில் பதவி உயர்வுகளில் இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவினருக்கு இடஒதுக்கீடு வழங்கப்படுவது இல்லை.

மத்திய அரசு பணி பதவிகளில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு (ஓபிசி பிரிவினர்) சீனியாரிட்டியுடன் கூடிய இடஒதுக்கீடு வழங்க வகை செய்ய வேண்டும். இதற்காக அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வேண்டும். ஏற்கனவே அரசியலமைப்பு பிரிவு 16 (4A) மற்றும் 16 (4B) ஆகியவை தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு மத்திய அரசுப் பணி பதவி உயர்வில் இடஒதுக்கீடு வழங்க வகை செய்கிறது. ஆகையால் இப்பிரிவில் இதர பிற்படுத்தப்பட்டோரையும் சேர்க்க வேண்டும்.
அரசியலமைப்பு பிரிவு 16 (4A) மற்றும் 16 (4B) ஆகியவை தாழ்த்தப்பட்ட, பழங்குடியினருக்கு மட்டும் இடஒதுக்கீடு வழங்குகிறது. இதர பிற்படுத்தப்பட்டோருக்கு அப்படி இடஒதுக்கீடு வழங்கப்படவில்லை. இதனால் சமூகத்தில் பின் தங்கியுள்ள இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினர் பாதிக்கப்பட்டுள்ளனர் .
ஆகையால்தான் அரசியல் சாசனத்தின் 16 (4A) மற்றும் 16 (4B) ஆகியவற்றில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு மத்திய அரசு பணி பதவி உயர்வில் இடஒதுக்கீடு வழங்க வகை செய்ய திருத்தம் தேவை. இவ்வாறு திமுக எம்.பி. வில்சன் வலியுறுத்தி உள்ளார்.












Click it and Unblock the Notifications