வேலுமணி எடுத்துக் கொடுத்த மெயின் ‘அஸ்திரம்’.. ஈபிஎஸ் டீம் மாஜிக்கள் ஹேப்பி அண்ணாச்சி! அதே விஷயம்!?
சென்னை : எஸ்.பி.வேலுமணி மீதான டெண்டர் முறைகேடு வழக்கு ரத்து செய்யப்பட்டிருப்பதை முக்கிய அஸ்திரமாக கையில் எடுத்துக் களமாடத் தொடங்கி இருக்கிறது எடப்பாடி பழனிசாமி டீம்.
திமுக அரசு ஆட்சிக்கு வந்த பிறகு அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பலர் மீதும் ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. மாஜிக்கள் பலரது வீடுகளில் ரெய்டுகளும் நடத்தப்பட்டன.
அடுத்தகட்டமாக குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்படாத நிலையில், ஆதாரம் இல்லாமல் திமுக அரசு வழக்கு பதிவு செய்ததா என்ற கேள்விகளும் தொடர்ச்சியாக எழுந்து வருகின்றன.
இந்நிலையில் தான், எஸ்பி வேலுமணி வழக்கில் நீதிமன்றத்தின் உத்தரவு, வேலுமணி மட்டுமல்லாமல், ஈபிஎஸ் அணி மாஜிக்கள் அனைவருக்கும் மைலேஜ் ஏற்றுவதாக அமைந்துள்ளது.
பாயின்ட்! எல்லா அமைச்சர்களும் இதே ரூட்ல போகலாமே.. வேலுமணி கேஸ் தவறான முன்னுதாரணம்.. கேசிபி ஒரே போடு!

வேலுமணி மீதான 2 வழக்குகள்
டெண்டர் முறைகேடு மற்றும் சொத்து குவிப்பு புகார்களில், தன் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளை ரத்து செய்யக்கோரி, அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், ஆர்.எம்.டி.டீக்காராமன் அமர்வு, எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டது. ஆனால், அவருக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கை ரத்து செய்ய மறுத்த நீதிபதிகள், அது தொடர்பான மனுவை தள்ளுபடி செய்தனர்.

ஆட்சிக்கு முன்பும் பின்மும்
முந்தைய ஆட்சியில் எஸ்.பி பொன்னி அளித்த அறிக்கையில், எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான புகாரில் முகாந்திரம் இல்லை என தெரிவித்திருந்தததையும் ஆட்சி மாற்றத்திற்கு பிறகு கங்காதர் அளித்த அறிக்கையில் எஸ்.பி.வேலுமணியை வழக்கில் சேர்த்து அறிக்கை அளித்துள்ளததையும் தீர்ப்பில் நீதிபதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் கட்சியின் இசைக்கு ஏற்ப நடனமாடக்கூடிய வேலையைத்தான் காவல்துறையினர் செய்கின்றனர் என்பது இந்த வழக்கில் தெளிவாகிறது என நீதிபதிகள் விமர்சித்தனர்.

அரசியல் பழிவாங்கல்
மேலும், அமைச்சருக்கும், ஒப்பந்ததாரர்களுக்கும் இடையே உள்ள தொடர்பு குறித்து விசாரிக்காமல் வழக்கை பதிவு செய்துள்ளனர், ஆட்சி மாற்றத்திற்கு பிறகு எஸ்.பி.வேலுமணி மீது அவசர கதியில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது, எதிர்க்கட்சியை பழிவாங்கும் நோக்கத்தோடு ஆளுங்கட்சி செயல்படக் கூடாது, காவல்துறை அதிகாரத்தை ஒரு சாராருக்கு ஆதரவாக பயன்படுத்தும்போது நீதிமன்றத்தால் அதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது என்றும் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

வேலுமணி டீம் உற்சாகம்
இந்த தீர்ப்பு திமுக அரசுக்கு குட்டு வைப்பதைப் போல அமைந்துள்ளது அதிமுகவினரை, குறிப்பாக எஸ்பி வேலுமணி ஆதரவாளர்களை மிகவும் உற்சாகப்படுத்தியுள்ளது. ஆளுங்கட்சி, போலீசாரை ஏவி எதிர்க்கட்சியை வேட்டையாடுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்ற உத்தரவு நகலைக் குறிப்பிட்டு, அதிமுக வழக்கறிஞர் இன்பதுரையும் திமுக அரசின் பழிவாங்கும் செயல் என விமர்சித்திருந்தார்.

இதே போலத்தான் மற்ற வழக்குகளிலும்
திமுக அரசு, வேண்டுமென்றே அதிமுக முன்னாள் அமைச்சர்களை பழி வாங்கத்தான் இப்படியான வழக்குகளை பதிவு செய்கிறது என்ற தங்களின் வாதத்திற்கு வலு சேர்ப்பதாக நீதிமன்ற உத்தரவு அமைந்திருப்பதாக கொண்டாடுகிறார்கள் எடப்பாடி அணியினர். இதே போலத்தான் அதிமுக முன்னாள் அமைச்சர்களை டார்கெட் செய்து திமுக அரசு ரெய்டுகளை ஏவி வருகிறது. இந்த டெண்டர் வழக்கு போலத்தான் மற்ற வழக்குகளிலும் ஆதாரமே இல்லாமல் திமுக குற்றம் சுமத்தி வருகிறது என்றும் பேசத் தொடங்கி இருக்கிறார்கள்.

மாஜிக்களுக்கு மைலேஜ்
நேற்று கோவையில் நடந்த உண்ணாவிரத போராட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமியும், எஸ்பி வேலுமணியும் திமுக அரசு பழிவாங்கும் நோக்கில் பொய்யான வழக்குகளை தொடுத்து வருவதாகப் பேசியுள்ளனர். வேலுமணியின் ஒற்றை வழக்கில் வந்த தீர்ப்பு, அத்தனை மாஜிக்களையும் குஷியாக்கியுள்ளது. திமுக அரசை நீதிமன்றமே விமர்சித்துள்ளதால், தங்களுக்கு எதிரான வழக்குகளிலும் இது எதிரொலிக்கும் என்ற எதிர்பார்ப்பில் இருந்து வருகிறார்களாம்.