சிறுமி கருமுட்டை விற்பனை..அறிக்கையில் அதிர்ச்சி.. 4 மருத்துவமனைகள்,2 ஸ்கேன் சென்டர்களை மூட உத்தரவு
ஈரோடு சிறுமியிடம் நிர்பந்தப்படுத்தி கருமுட்டை எடுத்த நான்கு மருத்துவமனைகளையும் இரண்டு ஸ்கேன் சென்டர்களையும் நிரந்தரமாக மூட உத்தரவிடப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்ரமணியன் கூறியுள்ளார்.
சென்னை: ஈரோடு சிறுமியிடம் இருந்து முறைகேடான வகையில் கருமுட்டை எடுத்து விற்பனையில் ஈடுபட்ட 4 தனியார் மருத்துவமனைகளை மூட உத்தரவிட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்ரமணியன் கூறியுள்ளார். இரண்டு ஸ்கேன் சென்டர்களையும் உடனடியாக மூடவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
Recommended Video
ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமியின் கருமுட்டை விற்பனை தொடர்பாக சிறுமியின் தாயார் சுமையா, தாயாரின் இரண்டாவது கணவர் சையத் அலி, தரகர் மாலதி ஆகியோரை ஈரோடு தெற்கு காவல் துறையினர் கைது செய்தனர்.
தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவத்தில் சிறுமியின் வயதை அதிகப்படுத்தி காட்டும் வகையில், போலியாக ஆதார் தயாரித்து கொடுத்த ஜான் என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

கட்டாயப்படுத்தி கருமுட்டை விற்பனை
இதுதொடர்பாக ஈரோடு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கனகேஸ்வரி தலைமையிலான போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதில், சிறுமியை கட்டாயப்படுத்தி ஈரோடு, பெருந்துறை, சேலம், ஓசூர் உள்ளிட்ட பகுதிகளில் செயல்படும் தனியார் மருத்துவமனைகளுக்கு கருமுட்டைகள் விற்பனை செய்யப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது.

குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் விசாரணை
இதுதொடர்பாக சுகாதாரத்துறை அலுவலர்கள் கருமுட்டை பெற்றதாக ஈரோடு, சேலம், பெருந்துறை மற்றும் ஓசூர் உள்ளிட்ட தனியார் மருத்துவமனை நிர்வாகிகளிடம் விசாரணை மேற்கொண்டிருந்தனர். இந்நிலையில் இன்று கடந்த 7ஆம் தேதியன்று தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர் சரஸ்வதி ரங்கசாமி தலைமையில், மல்லிகை, துரைராஜ், சரண்யா ஜெயக்குமார் மற்றும் மாவட்ட காவல் கூடுதல் கண்காணிப்பாளர் கனகேஸ்வரி ஆகியோர் விசாரணை மேற்கொண்டனர்.

மருத்துவமனைகளில் விசாரணை
இவர்கள் ஈரோடு சுதா மருத்துவமனை, பெருந்துறை ராம் பிரசாத் மருத்துவமனை நிர்வாகிகள் மற்றும் மருத்துவர்களிடம் நேரில் விசாரணை மேற்கொண்டனர். மேலும், சிறுமி தங்க வைக்கப்பட்டுள்ள காப்பகத்தில் விசாரணை மேற்கொண்டனர்.

அமைச்சர் மா.சுப்ரமணியன்
ஈரோடு சிறுமி கருமுட்டை விற்பனை தொடர்பாக அமைச்சர் மா. சுப்ரமணியன் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசினார். சிறுமியை அவரது குடும்பத்தினரே நிர்பந்தப்படுத்தி கருமுட்டையை எடுத்து விற்பனை செய்துள்ளது தெரியவந்துள்ளது. ஒருவர் கருமுட்டையை தானமாக தர விரும்பினாலும் 21 வயதுடைய ஒருவரிடம் இருந்து மட்டுமே கருமுட்டையை தானமாக பெற முடியும்.

மருத்துவமனைகள் மீது நடவடிக்கை
16 வயது சிறுமியை நிர்பந்தப்படுத்தி அவரது குடும்பத்தினரே கருமுட்டையை எடுத்து விற்பனை செய்துள்ளனர். விசாரணை அறிக்கை அடிப்படையில் நான்கு மருத்துவமனைகளின் மீது நடவடிக்கை. தமிழ்நாட்டிற்கு வெளியே உள்ள மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்க அந்தந்த மாநில அரசுகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. ஆந்திர மாநிலம் திருப்பதியில் உள்ள டெஸ்ட் ட்யூப் பேசி சென்டர், கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள ஸ்ரீகிருஷ்ணா மருத்துவமனைகளில் பணிபுரிகிற மருத்துவர்களுக்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

ஸ்கேன் சென்டர்கள் மூடல்
ஸ்கேன் சென்டர்கள் சட்டத்தை மீறி செயல்பட்டுள்ளதால் அந்த ஸ்கேன் சென்டர்கள் உடனடியாக மூடப்படும். சுதா மருத்துவமனை ஈரோடு, ஓசூர் விஜய் மருத்துவமனையில் நோயாளிகளை 15 நாட்களுக்குள் படிப்படியாக டிஸ்சார்ஜ் செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. முதல்வரின் மருத்துவ காப்பீடு திட்டத்தில் இருந்து இந்த மருத்துவமனைகள் விடுவிக்கப்படுகின்றன.

மருத்துவமனைகள் மூடல்
கருமுட்டை விற்பனையில் தொடர்புடைய மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. உள் நோயாளிகளை டிஸ்சார்ஜ் செய்து விட்டு உரிய வழிமுறைகளின் படி அந்த மருத்துவமனைகளை நிரந்தரமாக மூட நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும் மருத்துவர் மா.சுப்ரமணியன் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications
