#Exclusive திமுகவில் பாஜக போல வீடியோ, ஹனி ட்ராப் கேம் இல்லை.. அண்ணாமலையின் ‘ஜோக்’ : பத்மபிரியா பரபர!
சென்னை : "திமுகவில் பெண்களுக்கு எந்தவித பிரச்சனையும் இல்லை. அப்படி இருந்தாலும், தலைமையின் கவனத்திற்கு உடனே கொண்டு செல்வதற்கான இடம் இருக்கிறது. உடனடியாக அதற்கு நடவடிக்கையும் எடுக்கப்படுகிறது. கண்டிப்பாக மூடிமறைக்க மாட்டார்கள். பாஜக போன்று ஆடியோ, வீடியோ என கேம் விளையாடிக் கொண்டு இருக்கமாட்டார்கள்." என திமுக ஐடி விங் துணை செயலாளர் பத்மபிரியா, ஒன் இந்தியாவிற்கு அளித்துள்ள பிரத்யேக பேட்டியில் தெரிவித்துள்ளார்.
பெண்களுக்கு எதிரான கொடுமைகள் எல்லா இடங்களில் நடக்கிறது. ஆனால், ஒரு கட்சியாக எவ்வளவு தூரம் அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கிறோம் என்பது முக்கியம். அந்தவகையில் திமுக சரியாகவே செயல்பட்டு வருகிறது என பத்மபிரியா தெரிவித்துள்ளார்.
திமுக தகவல் தொழில்நுட்ப அணியின் மாநில துணை செயலாளர் பத்மபிரியா, நமது ஒன் இந்தியா தமிழுக்கு பிரத்யேக பேட்டி அளித்துள்ளார். அந்தப் பேட்டி வருமாறு:

ஆளுநர் தான் காரணம்
கேள்வி : ஆளுநர் ரவி, தமிழகம் - தமிழ்நாடு சர்ச்சையைத் தொடர்ந்து அளித்த விளக்கத்தில், தான் மாநிலத்துக்கு பெயர் மாற்றும் பரிந்துரையைச் செய்யவில்லை என கூறியிருக்கிறார். திமுக இந்த விவகாரத்தை பூதாகரமாக்கி விட்டதாகவும் குற்றச்சாட்டுகள் வருகின்றன. இதை எப்படி பார்க்கிறீர்கள்?
பதில் : ஆளுநர் விளக்கம் அளித்தது சரி, ஆனால், எத்தனை நாட்களுக்குப் பிறகு? சர்ச்சை தொடங்கியதுமே உடனே அதை கவனித்து பிரச்சனையை தீர்த்திருக்கலாம். ஆனால், இத்தனை நாட்கள் நேரம் எடுத்துக்கொண்டு, டெல்லி சென்று வந்த பிறகு அவர் விளக்கம் கொடுத்திருக்கிறார். அதுதான் யோசிக்க வேண்டிய விஷயம். ஆளுநர் தெரிவித்த கருத்தை திமுக வலுவாக எதிர்த்திருந்தாலும், மற்ற கட்சிகளும், பொதுமக்களுமே கண்டித்திருந்தனர். முன்பே ஆளுநர் தனது கருத்தை திரும்பப் பெற்றிருந்தால் அல்லது விளக்கத்தை அளித்திருந்தால் இவ்வளவு பெரிய விஷயமாக இது வெடித்திருக்காது.

ஹனி ட்ராப்
கேள்வி : அண்ணாமலை மீது பாஜகவிற்குள்ளேயே தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன. அண்ணாமலை வருகைக்குப் பிறகு பாஜகவில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை என காயத்ரி ரகுராம் முன்வைத்திருக்கும் புகாரை எப்படி பார்க்கிறீர்கள்?
பதில் : காயத்ரி ரகுராம், பாஜகவில் இருந்து தற்போது வெளியேறி அக்கட்சியின் மாநிலத் தலைவர் மீது குற்றச்சாட்டை வைத்திருக்கிறார். பாஜகவில் இந்த மாதிரியான குற்றச்சாட்டுகள் முன்பு வெளிவரவில்லை. அண்ணாமலை பொறுப்பேற்ற பிறகுதான் ஆடியோ மாட்டுகிறது, வீடியோ சிக்குகிறது, ஹனி ட்ராப் என்று சொல்கிறார்கள். இதுகுறித்து அக்கட்சித் தலைமைதான் விளக்க வேண்டும். அண்ணாமலை பதவியேற்ற பிறகு அதிகமான புகார்கள் வருவது பற்றி அக்கட்சி விசாரிக்க வேண்டும்.

திமுகவில் பெண்கள் பாதுகாப்பு
கேள்வி : பாஜகவில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்ற குற்றச்சாட்டுகளுக்கு பாஜக தலைவர்கள், திமுகவினர் பெண் போலீசாருக்கே தொல்லை கொடுக்கின்றனர் என்றெல்லாம் பதில் கொடுக்கின்றனர். அதை எப்படி எதிர்கொள்கிறீர்கள்?
பதில் : தமிழ்நாடு எப்போதும் பெண்களுக்காகக் குரல் கொடுக்கும் மாநிலமாகவே இருந்து வருகிறது. திராவிடக் கட்சிகள், குறிப்பாக திமுக பெண்களுக்கான உரிமையை வலுப்படுத்தும் கட்சியாகவும், பெண்களை பாதுகாக்கும் கட்சியாகவே இருந்து வருகிறது. பெண்களுக்கு எதிரான கொடுமைகள் என்பது உலகளாவிய பிரச்சனை. இதில் ஒரு அமைப்பு சார்ந்து குற்றச்சாட்டுகள் வரும்போது, அதில் அந்தக் கட்சியோ அமைப்போ எப்படி ரெஸ்பான்ஸ் செய்கிறது என்பதுதான் முக்கியம். பாஜகவில் வரும் குற்றச்சாட்டுகளை அக்கட்சி எப்படி கையாள்கிறது என்பதை பார்க்க வேண்டும். பாஜக தலைமை இதுவரை அதற்கு எதிர்வினை ஆற்றவே இல்லை. திமுகவில் அப்படி நடந்தால், திமுக தலைவர் உடனடியாக நடவடிக்கை எடுக்கிறார். தவறு செய்தவர்கள் கட்சியை விட்டு நீக்கப்படுகிறார்கள். பெண்களுக்கு எதிரான கொடுமைகள் எல்லா இடங்களில் நடக்கிறது. ஆனால், ஒரு கட்சியாக எவ்வளவு தூரம் அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கிறோம் என்பது முக்கியம். அந்தவகையில் திமுக சரியாகவே செயல்பட்டு வருகிறது.

மூடிமறைக்க மாட்டாங்க
கேள்வி : பாஜகவினரின் விமர்சனங்களால், திமுகவில் பெண்களுக்கான பாதுகாப்பு எப்படி இருக்கிறது என்ற கேள்வி எழுந்திருக்கிறது. அது பற்றி?
பதில் : எங்களைப் போன்ற இளையவர்கள் புதிதாக கட்சிக்குள் செல்லும்போது சீனியர்கள் உறுதுணையாக இருக்கிறார்கள். பள்ளி, அலுவலகம் என எல்லா இடங்களிலும் பெண்களுக்கு பிரச்சனைகள் இருக்கின்றன. திமுகவில் பெண்களுக்கு எந்தவித பிரச்சனையும் இல்லை. அப்படி இருந்தாலும், தலைமையின் கவனத்திற்கு உடனே கொண்டு செல்வதற்கான இடம் இருக்கிறது. உடனடியாக அதற்கு நடவடிக்கையும் எடுக்கப்படுகிறது. கண்டிப்பாக மூடிமறைக்க மாட்டார்கள். அல்லது பாஜக போன்று ஆடியோ, வீடியோ என கேம் விளையாடிக் கொண்டு இருக்கமாட்டார்கள்.

மேயர் பிரியா சர்ச்சை
கேள்வி : சென்னை மேயர் பிரியாவை அமைச்சர்கள் ஒருமையில் பேசியதாக சர்ச்சையானது. உங்களைப் போன்ற இளம் நிர்வாகிகள் மீது மூத்த தலைவர்களின் ஆதிக்கம் பற்றிய குற்றச்சாட்டை எப்படி பார்க்கிறீர்கள்?
பதில் : மேயர் பிரியா ராஜனை நான் பலமுறை சந்தித்து உரையாடியிருக்கிறேன். அவர் எவ்வளவு வலிமையான நபர் என்பது தனிப்பட்ட முறையில் எனக்கு நன்றாகத் தெரியும். அமைச்சர்கள் அவரை மிரட்டுகிறார்கள், அவர் அடங்கிப்போகிறார் என்ற பேச்சு எழுவதற்கே இடமில்லை. மேயர் மீது லைம்லைட் விழும்போது, இயல்பாக நடக்கும் சிறு சிறு விஷயங்கள் கூட பூதாகரமாக காட்டப்படுகிறது. மேயர் பிரியாவும் அதுகுறித்து அப்போதே விளக்கம் அளித்துவிட்டார். திமுகவில் பெண் தலைவர்களுக்கும், இளையவர்களுக்கும் எந்த அதிகார அழுத்தமும் கிடையாது.

நல்ல ஜோக்
கேள்வி : 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு எல்லாக் கட்சிகளும் ரெடியாக வருகின்றன. பாஜக 25 சீட்களைப் பிடிக்கும் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சொல்கிறார். இந்தத் தேர்தல் களம் பாஜக, திமுகவுக்கு எப்படி இருக்கும்?
பதில் : ஏற்கனவே சட்டமன்றத் தேர்தலில் அண்ணாமலை, ஒரு குறிப்பிட்ட பூத்தில் வெறும் 1 வாக்கு பெற்றார். அவருக்கே இவ்வளவு நம்பிக்கை இருப்பது பாராட்டத்தக்க விஷயம். ஆனால், தமிழ்நாட்டுக்கு பாஜக என்ன செய்தது என்று மக்கள் யோசிப்பார்கள். மக்களுக்கு ஒன்றுமே செய்யாமல், 25 தொகுதிகளை வென்றுவிடுவோம் என்று அண்ணாமலை நினைக்கிறார் என்றால் அது நல்ல ஒரு ஜோக் தான்.












Click it and Unblock the Notifications