வார இறுதி நாட்களில் கோவில்களில் சாமி தரிசனம் செய்ய தடை நீடிப்பு - தமிழக அரசு அறிவிப்பு
தமிழக அரசு வழிபாட்டு தலங்களிலும் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளுடன் சாமி தரிசனம் மற்றும் பிரார்த்தனைகளை செய்ய அனுமதிக்க வேண்டும் என்பது பக்தர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
சென்னை: வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கோயிலில் பக்தர்களுக்கு அனுமதியில்லை என்ற நிலையே தொடரும் என அரசு அறிவித்துள்ளது. பள்ளிகள் திறந்து ஒரு வாரம் கடந்த பின் கொரோனா குறைந்திருந்தால் வழிபாட்டு தலங்கள் வார இறுதி நாட்களில் திறப்பு பற்றி முடிவு எடுக்கப்படும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றை முடிவுக்கு கொண்டுவர 2 ஆண்டுகளாக பல்வேறு கட்ட ஊரடங்குகள் அமல்படுத்தப்பட்டு வருகிறது. நோயின் தாக்கத்தை பொறுத்து ஒவ்வொரு முறையும் பல்வேறு தளர்வுகளும் வழங்கப்பட்டு வருகின்றன.
தற்போது கொரோனா 2வது அலை குறைந்துள்ள நிலையில் 3வது அலையை தவிர்க்கும் வகையில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது. ஆடி மாதம் வழிபாட்டுத் தலங்களில் பல்வேறு கொண்டாட்டங்கள் நடைபெறும் என்பதால் மக்கள் கூட்டத்தை குறைக் கும் வகையில் ஆடிப் பெருக்கு, ஆடி கிருத்திகை உள்ளிட்ட முக்கிய நிகழ்வு களில் கோவில்கள் திறக்க அனுமதிக்கப்படவில்லை.

தடை நீடிப்பு
வார இறுதி நாட்களில் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 கிழமைகளிலும் அனைத்து வழிபாட்டு தலங்களையும் மூடவும், வழக்கமான பூஜைகள் பக்தர்கள் இன்றி நடைபெறவும் உத்தரவிடப்பட்டது. இதன் காரணமாக 3 வாரமாக அனைத்து வழிபாட்டு தலங்களிலும் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 நாட்களும் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. ஆடி முடிந்து ஆவணி மாதம் பிறந்தாலும் வழிபாட்டு தலங்களுக்கு கட்டுப்பாடுகள் தொடர்வதால் கோயில் வாசலில் வைத்து திருமணம் மற்றும் சுப நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.

கோவில்களில் கூட்டம்
திங்கட்கிழமை முதல் பல்வேறு கூடுதல் தளர்வுகளை தமிழக அரசு அறிவித்தது. சினிமா தியேட்டர்கள் திறக்கப்பட்டு திரைப்படங்கள் திரையிடப்பட்டு வருகின்றன. பள்ளி, கல்லூரிகள் வருகிற 1ஆம் தேதி முதல் திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது. தனியார் நடத்தும் மது கூடங்களையும் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆனால் வழிபாட்டுத் தலங்கள் மீதான கட்டுப்பாடுகள் தொடர்ந்து நீடிக்கிறது. வாரத்தில் 3 நாட்கள் கோவில்களில் பக்தர்கள் அனுமதி இல்லை என்பதால் மற்ற 4 நாட்களும் பக்தர்கள் கூட்டம் கோவில்களில் அதிகளவில் கூடும் நிலை ஏற்பட்டுள்ளது.

தளர்வுகள் அறிவிப்பு
வெள்ளிக்கிழமைகளில் பள்ளி வாசல்களில் தொழுகை நடைபெறும். சனி, ஞாயிறு கிழமைகளில் கிறிஸ்தவர்கள் தேவாலயங்களில் பிரார்த்தனையில் ஈடுபடுவது வழக்கம். பல்வேறு தளர்வுகளை அறிவித்துள்ள தமிழக அரசு வழிபாட்டு தலங்களிலும் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளுடன் சாமி தரிசனம் மற்றும் பிரார்த்தனைகளை செய்ய அனுமதிக்க வேண்டும் என்பது பக்தர்களின் எதிர்பார்ப்பாக இருந்தது. இந்நிலையில் தற்போது ஏற்கனவே அறிவித்தது போல கோவில்களில் கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவில்களில் தடை நீடிப்பு
கோவில்களில் வெள்ளி, சனி, ஞாயிறு கிழமைகளில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி இல்லை என அரசு உத்தரவிட்டுள்ளது. பள்ளிகள் திறந்து ஒரு வாரம் கடந்த பின் கொரோனா குறைந்திருந்தால் வழிபாட்டு தலங்கள் வார இறுதி நாட்களில் திறப்பு பற்றி முடிவு எடுக்கப்படும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கோயில்கள், தேவாலயங்கள், மசூதிகள் திறப்புக்கான கட்டுப்பாடுகள் தொடரும் என மருத்துவத்துறை, பேரிடர் நிர்வாகத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

9 சதவிகிதம் பேர்
கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில், கடந்த ஜனவரி மாதம் 16ஆம் தேதி முதல் நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. தமிழ்நாட்டில் 18 வயதுக்கும் மேற்பட்ட 6 கோடியே 60 லட்சம் பேரில் 2 கோடியே 15 லட்சம் பேர் முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர். அவர்களில் 53 லட்சத்து 50 ஆயிரம் பேர் மட்டுமே இரண்டாவது தவணை செலுத்திக் கொண்டுள்ளனர். ஒட்டுமொத்த மக்கள்தொகையில் 9 சதவிகிதம் பேர் மட்டுமே இரண்டு தவணை தடுப்பூசியையும் போட்டுக் கொண்டுள்ளனர்.

இரண்டாவது தவணை தடுப்பூசி
16 லட்சத்து 12 ஆயிரத்து 623 பேர் உரிய நேரத்தில் இரண்டாவது தவணை தடுப்பூசி யை போட்டுக் கொள்ளவில்லை. இவர்களில் 28 நாட்களுக்கும் மேலாக இரண்டாவது தவணை கோவேக்சின் தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்கள் எண்ணிக்கை 5 லட்சத்து 64 ஆயிரத்து 48. 84 நாட்களுக்குப் பிறகும், 10 லட்சத்து 48 ஆயிரத்து 575 பேர் இரண்டாவது தவணை கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்திக் கொள்ளவில்லை என்று மருத்துவத் துறை தெரிவித்துள்ளது.

தவறவிட்டவர்கள் எத்தனைபேர்
அதிகபட்சமாக, சென்னையில் இரண்டு லட்சத்து 97,521 பேர் இரண்டாவது தவணை தடுப்பூசியை தவறவிட்டுள்ளனர். கோவையில் ஒரு லட்சத்து 33 ஆயிரத்து 794 பேரும், திருச்சியில் 55 ஆயிரத்து 826 பேரும் உரிய நேரத்தில் தடுப்பூசி போட்டுக் கொள்ளவில்லை. இதேபோல, மதுரையில் 52,766 பேரும், வேலூர் மாவட்டத்தில் 51,009 பேரும், சேலத்தில் 50,285 பேரும் உரிய காலத்தில் இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ளவில்லை என்று மருத்துவத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

16 லட்சம் பேர்
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், தமிழ்நாட்டில் 18 வயதுக்கு மேற்பட்ட 6.6 கோடி பேரில் 2.15 கோடி பேர் முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர். 53.5 லட்சம் பேர் அதாவது 9% பேர் இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்தியுள்ளனர். உரிய நேரத்தில் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத 16 லட்சம் பேர் உள்ளதாக கூறியுள்ளார்.

கோவாக்சின் தடுப்பூசி
பொதுமக்கள் இரண்டு தவணை தடுப்பூசி தான் முழுமையான பாதுகாப்பு என்பதை உணர்ந்து தாங்களாகவே தங்களுக்கு உரிய நேரத்தில் இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ளவேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தியுள்ளார். கோவாக்சின் தடுப்பூசி ஒதுக்கீடு குறைவாக இருப்பதால் இரண்டாவது தவணைக்கு தான் முன்னுரிமை வழங்கப்படுகிறது. மருத்துவ ரீதியாக ஒருவருக்கு கோவாக்சின் தான் உகந்தது என்ற பட்சத்தில் மட்டும் அவர்களுக்கு முதல் தவணை வழங்கப்படும். தற்போது 3 லட்சத்துக்கும் மேல் கோவாக்சின் கையிருப்பு உள்ள நிலையில் பொதுமக்கள் ஆர்வத்துடன் வந்து இரண்டாவது தவணை செலுத்தி கொள்ள வேண்டும் எனவும் சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications